Thursday, 23 November 2017

முயலும் ஆமையும் கூட மாறிவிட்டது

முயல், ஆமை கதையின்  #லேட்டஸ்ட்_வெர்ஷன் ......

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

#நீதி : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

#நீதி2 : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).

ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!

அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

#நீதி3 : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

#நீதி4 : டீம் வொர்க் வின்ஸ்!

#டீம்_வொர்க்

‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!

வாழ்க்கையில்
முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.
#முயலாமை  மட்டுமே ஜெயிக்காது.

முயன்று தோற்றால்  #அனுபவம் .

முயலாமல் தோற்றால்  #அவமானம் .

வெற்றி நிலையல்ல,

தோல்வி முடிவல்ல..

முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

Thursday, 16 November 2017

நன்றி நாய்களிடம் மட்டும்

ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.

எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த  நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.

"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன்  எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"

சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.

அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.

முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார்.

பத்து நாட்கள் முடிந்தது.

அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான்.

சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான்.

அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.

"இது எப்படி சாத்தியம்.?"

அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார்.

"அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?"

மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது.

வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன்,
இந்த முறை மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.

நீதி:

நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா... அதுல  மாற்றமே இருக்காது

Friday, 10 November 2017

பொய்யான நம்பிக்கை வார்த்தைகள் வேண்டாமே

கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன்   வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.

"குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான்.

"ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி.

அதற்கு மன்னன், "கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.

மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.

அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.

காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.

அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.

"மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குலைத்து என்னை கொன்று விட்டது".

ஆம்! சகோதரர்களே!
மற்றவர்களிடம்  நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.

நீங்கள் அறியமாட்டீர்கள்! உங்களின் நிறைவேற்றாத  வாக்குறுதி நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு  பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று.