Monday, 2 December 2024

மனதைத் தேடி

உங்களுக்கு உங்களைத் தவிர வேறு யாரும் உதவி செய்ய முடியாது. சுதந்திர மனம் யாவையும் சாதிக்க வல்லது. நம்முடைய மனதில் மற்றவர்கள் நிரப்பிய செய்திகளும் கருத்துக்களுமே அதிகம் உள்ளன.

90% செய்திகள் கண்கள் வழியாகச் சேமித்து வைத்தவைகளே. நாம் சிறுவர்களாக இருந்த போது இயற்கையை ரசித்தோம் வறுமையில் வாழ்ந்தோம் மக்களைப் படித்தோம். இவை அனைத்தையும் நேரடியாகப் பார்த்தோம்.
இப்பொழுதுள்ள இளைஞர்கள் மொபைலில் மூழ்கி தேவையற்ற அழிவும் தரும் செய்திகளை மூளையில் சேமிக்கிறார்கள். இவர்கள் எத்தகைய சமுதாயத்தை உருவாக்க முடியும். Digital அனுபவங்கள் வாழ்க்கைக்கு உதவுமா?

online ல் ஆறுதல் சொல்லும் தலைமுறையை உருவாக்குகிறோம். பெற்றோர்களுக்கு Swiggy ல் உணவு அனுப்பிவிட்டு இதுதான் அன்பின் உச்சம் என நினைக்கத் தொடங்கும் இளந்தலைமுறை. நேரடி அனுபவங்களை எல்லோரும் தவிர்க்கவே விரும்புகிறோம்.

மனமெனும் குழந்தையை ஒழுங்காகப் பழக்க வேண்டும். மனம் எங்கு செல்கிறதோ சக்தியும் அங்கேயே செல்லும். மனம் ஒரு சுகவாசி. அது எப்போதும் பழகிய விசயங்களையே விரும்பும். மனதிற்கு அன்பாகக் கட்டளையிடு. இல்லையெனில் மனம் கண்டுகொள்ளாது.

மனமெனும் குழந்தை சில சமயங்களில் தேவையற்ற விசயங்களைப் பார்க்கும் கேட்கும். மனமே மூலதனம். தேவையற்ற விசயங்களைப் பிடித்துக் கொண்டு தொங்காதே! இலக்கை மட்டும் மனதிற்குச் சொல் அது எப்படியோ நடத்திக்காட்டும்.
எதையும் பயிற்சிக்கு கொண்டுவராமல் இருந்தால் உயர்ச்சி என்பது கனவாகப் போகும்.

கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் பலிக்காது. மனச்சமநிலையில் சொல்வது பலிக்கும். மனநிம்மதியோடு செய்யும் செயல்களே நல்லனவற்றைக் கொடுக்கும்.
தெளிவான மனம் தான் எல்லோரின் விருப்பம்.




Tuesday, 26 November 2024

மாறுவது மனம்

 இறைபக்தி ஒழுக்கத்தைத் தரும். ஒழுக்கம் மற்ற உயர்வை எல்லாம் தரும்.
மனத்தடை அகற்றும் மாமருந்து இறைவன் மீது இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும்.

மனம் சஞ்சலம் அடையும் போது பிரார்த்தனை செய்து அதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாக்க நினைக்கும் சித்தம் சதா நல்லவே சிந்திக்க வேண்டும்.

சித்தம் பழைய வாசனைகளின் தொகுப்பு, அதைச் சுத்தம் செய்யும் முயற்சியைத் தொடங்க வேண்டும். குப்பையின் மேல் நல்விதைகளைத் தூவ நல்மணம் பரப்பும் மலர்ச்சோலை உருவாகும். 

பேரானந்த சூழ்நிலையை உருவாக்க உதவி செய்யும் நல்லெண்ண விதைகளைத் தூவுவோம். தவிர்க்க வேண்டிய மனமாசுக்களை கட்டுப்பாட்டோடு தவிர்ப்போம்.

சுறுசுறுப்பு ஏற்படட்டும். தேவையற்ற சமூக ஊடகப் பொழுதுபோக்கு அகற்றுவோம். கிளர்ச்சியூட்டும் கேளிக்கைகளை அளவோடு ரசிப்போம். மொத்தத்தில் மனதில் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க முயற்சி செய்வோம்.

நல்லுணர்வைத் தரும் மனமும்
நல்லறிவு தரும் புத்தியும்
நல் நினைவு தரும் சித்தமும்
நற்செயல் தரும அஹங்காரமும்
பெற்றிட பிரார்த்திபபோம்.

Monday, 25 November 2024

மருந்து எது?

*எவை மருந்து*
 1. சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது மருந்து.

 2. காலையில் இறைவனை நினைப்பது மருந்து.

 3. யோகா, பிராணாயாமம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மருந்து.

 4. காலை, மாலை நடைப்பயிற்சியும் மருந்தாகும்.

 5. நோன்பு அனைத்து நோய்களுக்கும் மருந்து.

 6. சூரிய ஒளியும் மருந்துதான்.

 7. மட்கா தண்ணீர் குடிப்பதும் ஒரு மருந்து.

 8. கைதட்டலும் மருந்துதான்.

 9. அதிகம் மெல்லுவதும் மருந்துதான்.

 10. உணவைப் போலவே, மெல்லும் நீர் மற்றும் குடிநீரும் ஒரு மருந்து.

 11. உணவுக்குப் பின் வஜ்ராசனத்தில் அமர்வது மருந்தாகும்.

 12. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவும் மருந்தாகும்.

 13. சில சமயங்களில் மௌனமும் மருந்தாகும்.

  14. சிரிப்பும் கேலியும் மருந்து.

 15. மனநிறைவும் மருந்துதான்.

 16. மனமும் உடலும் அமைதியே மருந்து.

 17. நேர்மையும் நேர்மறையும் மருந்து.

 18. தன்னலமற்ற அன்பும் உணர்ச்சியும் கூட மருந்து.

 19. அனைவருக்கும் நல்லது செய்வதும் மருந்தாகும்.

 20. ஒருவருக்கு புண்ணியம் தரும் ஒன்றைச் செய்வது மருந்து.

 21. எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதே மருந்து.

 22. உண்பதும் குடிப்பதும் குடும்பத்துடன் பழகுவதும் மருந்தாகும்.

 23. உங்களின் ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத ஒரு முழுமையான மருத்துவக் கடை.

 24. குளிர்ச்சியாக இருங்கள், பிஸியாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், உற்சாகமாக இருங்கள், இதுவும் மருந்துதான்.

 25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்தாகும்.


  இந்த மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்

Thursday, 7 November 2024

சபையினிலே

கூட்டத்தில் இருந்தாலும். தனிமையில் இருந்தாலும் உணர்வு வசமுறா நிலைதான் சிறந்தது.

தனிமை நம்மை நாம் யார் என்பதை அறியச் செய்யும்.

கூட்டத்தில் இருக்கும் போது அதுவும் மற்றவர் நம்மை மதித்துப் பேச அழைக்கும் போது வார்த்தைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

கூட்டத்தின் கொள்கைக்கேற்ப நம் நிறங்களை மாற்றிக் கொண்டே சென்றால் நாமும் நிறமாறும் உயிரினமாகக் கருதப்படுவோம்.

எந்தச் சூழலிலும் தன் நிலை மாறாச் சமநிலை கொண்டவனே நல்ல தலைவனாக வருவதற்குத் தகுதியுள்ளவன்.

வாய் உறக்கப் பேச வேண்டிய அவசியமில்லை. உண்மை தானாகவே உறக்கப் பேசிக்கொள்ளும். எல்லாக் கேள்விகளுக்கும் உடனே பதில் சொல்லிவிடத் துடிப்பவர்கள் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவர்கள். தெரியாத விசயங்களை முறையாகத் தெரிந்த பின் பேசுவதே சிறப்பு.

செய்தியாளர்கள் மட்டும் கருவிகளோடு இருந்த காலம் மலைபேறிவிட்டது. மக்கள் அனைவரும் அலை அலையாய் அலைபேசியோடு அலைகிறார்கள் என்ற விழிப்புணர்வு தலைவனுக்கு இருக்க வேண்டும்.

சொற்சோர்வு ஏற்படாமல் அறத்தோடு பேசுவது ஒழுக்கம்.

Sunday, 6 October 2024

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த

ஒவ்வொரு நாள் காலையிலும் சில சிந்தனைகள் நம்மை ஆக்கிரமிப்பது உண்டு. 

இன்று பொய்யைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.

பொய் பேசுவது சரியா தவறா எனத் தெரியவில்லை. ஆனால் சில பொய்கள் சாதித்து இருக்கின்றன, சில வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றன.

சொல்லிய பொய்யை நிஜமாக்க முயன்றவன் வெற்றியாளன் ஆகிறான் என்று தெரிகிறது. சொல்லிய பொய்யைச் சொல்லிக் சொல்லி வாடிக்கை ஆக்கிக் கொண்டவன் வேடிக்கை மனிதனைப் போல் வீழ்ந்து போகிறான்.

வேஷமிட்ட பொய்களைத் திறமை என்றும் சாதுர்யம் என்றும் புத்திக் கூர்மை என்றும் அழைக்கிறோம். தவறில்லை. 

நீ சொல்லும் பொய்கள் உனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்யாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

மெய்யென்று மேனியை யார் சொன்னது என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
காயமே இது பொய்யடா என்று நாம் அடிக்கடி உபயோகிப்பதும் நினைவுக்கு வருகிறது. 

ஒரு பயணி எப்படி இலக்கை அடையும் வரை உடலைப் பாதுகாப்பாரோ அப்படி பாதுகாத்தால் போதும்.

இலக்கியங்களை உருவாக்கும் உயர்வான பொய்களை உருவாக்குவதில் உடன்பாடு உண்டு.

தான் சொல்லிய நினைத்த பொய்களை மனதால் உண்மையென தானே நம்பி வீழ்ந்தவர் பலர்.

உண்மையை விட்டு வெகுதூரம் போய்விடாமல் இருப்பதே நலம் என்பது முன்னோர் வாக்கு.

கண்ணதாசன் தமிழ்த்தாய் வாழ்த்து

கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!

நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ!

தனைப் புகழ் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே என் தாயே நின் பாதம் போற்றி
நினைப்பில் எழும் அத்தனையும் வடிவம் இன்றி
நிழலாகத் தோன்றிடினும் சிறிய நெஞ்சின்
நினைப்பினுக்கு மதிப்பீந்து வாழ்த்தாய் உன்
நிழல் கண்ட நானும் உன்னை வணங்குகின்றேன்!

Saturday, 5 October 2024

அக்கப் போர்

அன்பு மனிதனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும். அன்பைப் பரிமாறிக் கொள்ளும் சமுதாயம் எப்படி வன்முறையைத் தீர்வாக நினைக்கும்.

அன்பு குறையும் போது பேரழிவு ஆரம்பமாகிறது. வீட்டிற்கும் நாட்டிற்கும் அதுவே பொது .

போரென்னும் அக்கப்போர் ஒரு போதும் வேண்டாம்.

Wednesday, 25 September 2024

ராம தேவர் சித்தர்

தினம் ஒரு சித்தர் வரலாறு.

பெயர் ராமதேவர் சித்தர்

இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில்,

மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு
உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா

எனவுரைத்துள்ளார். இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.
ஒருமுறை காசிமாநகரில் திருக்கோயில் கொண்ட இறைவன் விசுவநாதரைக் கொண்டு வந்து தம் ஊரான காயாரோகணத்தில் (நாகப்பட்டினத்தில்) நிறுவிட இராமதேவர் எண்ணம் கொண்டார். இயல்பாகவே இவர் சஞ்சார சமாதியில் லயித்திடுவார். தாம் நடந்து கொண்டே இருந்தபோதும் இவரது எண்ணம் மட்டும் எங்கோ சென்றிருக்கும். எதனையும் இவரது கண்கள் நோக்கிடாது; காதும் கேட்காது; சுவாசமும் ஓடாது.

இத்தைய நிலையில்தான் இராமதேவருக்கு காசி விசுவநாதரை நாகப்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. உடனே எழுந்து இராமதேவர் விரைந்து நடக்கலானார். எத்தனை நாட்கள் அவர் நடந்தார் என்று அவருக்கே தெரியாது. சுயநினைவு இல்லாமலேயே அவர் நடந்தபடி சென்று கொண்டிருந்தார்.

ஒரு நாள் சுயநினைவு வரப் பெற்றார். அப்போது தாம் காசியில் இருப்பதை இராமதேவர் உணர்ந்தார். உடனே விரைந்து சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்த இராமதேவர் பின் காசி மாநகரத்து இறைவனான விஸ்வநாதப் பொருமானைக் கண்ணாரக் கண்டு தரிசித்து மகிழ்ந்தார். மீண்டும் வந்து கங்கையில் மூழ்கி அவர் எழுந்தார். அப்போது அவருடைய கரத்தில் லிங்கத் திருவுரு ஒன்று இருந்தது. அதைக் கண்டதும் இராமதேவர் மிகவும் மகிழ்ந்தார். மீண்டும் நாகப்பட்டினத்துக்கு வந்த இராமதேவர் தாம் கங்கையில் மூழ்கியெடுத்து வந்த காசி விஸ்வநாதப் பொருமானது திருவுருவமான இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். தினந்தோறும் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்திருவுருவை பூஜித்து வந்ததுடன் தியானத்திலும் மூழ்கினார்.

அந்தக் காலத்தில் நாகைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து சென்றிடும். பெரும்பாலும் அரேபிய நாடுகளிலிருந்து வந்து செல்லும் கப்பல்களே அதிகம். அக்கப்பல்களில் வரும் அரேபியர்களைக் கண்டு இராம இராமதேவர் வியந்தார். தாமும் அவர்களுடன் பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.

ஒரு நாள் வழக்கம் போல் அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் கண் விழித்துப் பார்த்தபோது தாம் அரேபியாவில் இருப்பதை உணர்ந்தார். ‘தாம் எப்படி அங்கு வந்தடைந்தோம்’ என்பது அவருக்கே புரியவில்லை. அந்த எண்ணத்துடன் தியானத்தில் அமர்ந்தவர் சஞ்சார சமாதியில் ஆழ்ந்து மெக்காவுக்கு வந்து சேர்ந்து விட்டார். கடல் வழியில் வந்தாரா? அல்லது தரை வழியில் வந்தாரா? என அவருக்குத் தெரியாது.

வறண்ட பாலைவனம். எங்கு பார்த்தாலும் மணல் பரப்பு. கண்ணுக்கு எட்டிய வரை மணல் பரப்புதான் தென் பட்டது. வெப்பம் மிகுந்திருந்தமயால் வியர்வை ஆறாகப் பெருகியது. இராமதேவர் விழித்தவாறே நின்று கொண்டிருந்தார். வெகு தொலைவில் ஒட்டகம் ஒன்று வருவதை அவர் கண்டார். அந்த ஒட்டகத்தின் பின் ஒன்று, இரண்டு என எண்ணற்ற ஒட்டகங்கள் வரிசையாக வந்தபடி இருந்தன.

பாலைவனத்தில் தன்னந்தனியாக நின்ற இராமதேவரைக் கண்டதும் அரேபியர்கள் தங்களது நாட்டிற்குள் எவனோ அத்துமீறி நுழைந்துள்ளான் என்று எண்ணி விரைந்து வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

“ யார் நீ? ”
“ எங்கிருந்து நீ வருகிறாய்? ”
“ எப்படி இங்கு வந்தாய்? ”

என்று ஆளாளுக்கு அவரிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர். இராமதேவர் அவர்களுக்கு பதில் கூற முயன்றும் அவரது பதிலை காது கொடுத்துக் கேட்போர் யாருமில்லை. அவர்கள் ஆக்ரோஷத்துடன் அவரைக் கொல்ல நெருங்கினர். அவர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். அவனால் இராமதேவர் உயிர் பிழைத்தார்.

இதுபற்றி போகர் 7000 – இல்,

யூகியாம் மதிமந்திரி யோகவானாம்
உத்தமனார் அங்கொருவர் தான் இருந்தார்
யோகியாம் சின்மயத்தில் சேர்ந்த சித்து
ஒளிவான ரிஷி ஒருவர் அங்கிருந்தார்

என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரேபியர்கள் அவரிடம், ”நீ ஏன் தீன் தேசத்துக்கு வந்தாய்? உன்னைத் தண்டிக்காமல் விடமாட்டோம்” என்று கத்தினர். இதுபற்றி…..

போனாரோ மலைநாடு குகை கடந்து
பொங்கமுடன் நபிதனையே காணவென்ரறு
காணாறு பாதைவழி செல்லும் போது
கருங்காளை நபிக்கூட்டம் மிகவாய்க் கண்டு
மானான மகதேவர் பதியிலப்பா
மார்க்கமுடன் வந்ததனால் உநதமக்கு
தீனான தீன்பதியில் உந்தனைத் தான்
திட்டமுடன் சபித்திடுவோம் என்றிட்டாரே. 

என்று போகர் 7000 – இல் 5800 – ஆவது பாடலில் கூறப்பட்டுள்ளது மேலும்,

என்றவுடன் இராமதேவர் தாள் பணிந்து
எழிலான வார்த்தையது கூறும்போது
சென்றதுமே யாகோபு என்று கூறி
சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ
தின்றிடவே ரொட்டியது தானும் ஈந்து
சிறப்புடனே அசன் உசேன் என்று கூறி
வென்றிடவே உபதேச பிரணவத்தை
விருப்பமுடன் மலுங்குமார் ஓதினாரே.  
ஓதவே நபிநாயகர் கூட்டத்தாரகள்
உத்தமர்கள் மனம்போலே மனதுவந்து
நீதமுடன் மக்கபுரி கோட்டைக் குள்ளே
நிஷ்களங்க பக்கிரி யாகோபு தன்னை
கோதமுடன் கொண்டு சென்றார் அரண்மனைக்குள்
கேறாமல் கொத்துபா ஓதினார்கள்
வீதமது பயனறிந்த சித்து தாமும்
விடுபட்டு வந்ததொரு யாகோபாச்சே 

என்று போகர் 7000 – இல் கூறுப்பட்டுள்ளது. அதாவது ”உன்னைத் தண்டிக்காது விடமாட்டோம்” என்று அரேபியர் கத்தினார். உடனே இராமதேவர் அவர்களின் தாள் பணிந்து மிகவும் நயமான வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார். உடனே அவர்கள் இராமதேவரிடம், ”அப்படியானால் நீ எங்களின் மதத்தில் சேர்ந்துவிடு” என உரைத்து, ”இன்று முதற்கொண்டு உனது பெயர் யாகோபு” என்று பெயர் சூட்டி அந்நாட்டு வழக்கப்படி அவருக்குச் சுன்னத்தும் செய்து வைத்தனர். பின் அவர் உண்பதற்க்கு ரொட்டியும் கொடுத்து உபதேசமும் செய்து வைத்தனர்.

அன்றிலிருந்து யாகோபு எனப் பெயரிடப்பட்ட இராமதேவர், அவர்கள் மனம்போல் நடந்து கொண்டார். பின் அவரை அரேபியர்கள் மக்கா நகரத்துக் கோட்டையுள் இருந்த அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தங்கள் மறை நூலாகிய குரானை ஓதுவித்தார்கள். யாகோபுவும் அனைத்தையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்து அவர்களது நம்பிக்கைக்கு உரியவரானார்.

வெகு விரைவிலேயே மெக்கா நகர மக்கள் யாகோபுவைத் தம்முள் ஒருவராக ஏற்றுக கொண்டனர். அவரும் அரேபி மொழியில் பேசிப் பழகினார். அவர்களது நோய்களையும் போக்கியருளினார். அவர்களுக்குள் உண்டான வழக்குகளைச் சிக்கல் ஏதுமின்றித் தீர்த்து வைத்தார்.

காலப்போக்கில் யாகோபுக்கு சீடர்கள் பலர் சேர்ந்தனர். தன் சீடர்கள் மூலமாய் அரபு நாட்டிலிருந்து அரிய மூலிகைகளைக் கொண்டுவரச் செய்த யாகோபு அவற்றின் தன்மைகளை ஆராய்ந்தறிந்தார். கற்ப மூலிகைகளின் திறனை சோதித்தறிய தாம் சாமதியில் இருக்க விரும்பிய யாகோபு தம் விருப்பத்தைச் சீடர்களிடம் கூறினார். அவர்களிடம் யாகோபு, ”நான் சமாதியில் அமர்வேன். பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்றெழுவேன்” என்றார். ”இது எப்படி சாத்தியம்?” என்று வியந்த சீடர்கள் அவரது கூற்றை நம்ப முடியாது தவித்தனர். ஆனாலும் தம் குருநாதருடைய வாக்கை அவர்கள் மீறவில்லை.

யாகோபு சமாதி நிலை கொள்வதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டு குழி தோண்டப்பட்டது. அக்குழிக்குள் நான்கு புறமும் சுவர்களும் எழுப்பப்பட்டன. சமாதிக்குள் இறங்கிய யாகோபு தன் சீடர்களிடம் கூறியதாக பின்வரும் பாடல் விளக்குகிறது.

இறங்கியே சமாதிதனில் இருந்துகொண்டு
எழிலாகச் சீடனுக்கு அதிகம் சொல்வார்
சுரங்கம் என்ற குழிதனிலே போறேன் அப்பா
சுருதிபொருள் கருவி கரணாதி எல்லாம்
அரங்கமுடன் உள்ளடக்கி மனதிருத்தி
வையகத்தின் வாழ்க்கை எனும் தளை அகற்றி
உரங்களுடன் பத்தாண்டு இருப்பேன் என்று
உத்தமனார் யாகோபு கூறினாரே.         
போகர் 7000 – 3872

சமாதிக்குள் இறங்கிய யாகோபு தன் சீடனிடம், “பத்தாண்டு காலத்துக்கு நான் சமாதியில் இருப்பேன். பின் வெளியே வருவேன். அவ்வாறு நான் சமாதியில் இருந்து வெளிவரும்போது அற்புதங்கள் பல நிகழ்ந்திடும். பின் தேன்மாரி பொழியும். நறுமண மலர்கள் பூத்துக் குலுங்கி வாசனையப் பரப்பும். விலங்குகளும் ஞானம் பேசும். இம்மாதிரியான அடையாளங்களைக் கொண்டு நான் சமாதியில் இருந்து வெளிவரும் நாளை நீ உணர்ந்திடலாம்” என்று கூறியதுடன் அச்சமாதியை மூடிவிடுமாறும் கூறினார்.

ஆண்டுகள் பத்தும் கழிந்தன. யாகோபு உரைத்தது போன்றே அவர் சமாதியிலிருந்து மீண்டு வந்தார். தனது சீடன் சமாதி அருகிலேயே தனக்காகக் காத்திருந்தது கண்டு மனம் மகிழ்ந்தார். அவனுக்கு உபதேசங்கள் பலவற்றை உரைத்தருளினார். யாகோபு தான் சமாதிக்குள் சென்ற பின் நடந்தது என்ன என்று தனது சீடனிடம் கேட்டபோது அவன், “குருதேவ! தாங்கள் சமாதிக்குள் சென்ற பிறகு பெருங்கூட்டம் கூடியது. யாகோபு சாமாதிக்குப் சமாதிக்கு போய்விட்டார். இனி அவர் திரும்பவே மாட்டார். அவரது உடல் மண்ணோடு மண்ணாய்ப் போகும் ” என்று மிகவும் கேவலமாகப் பேசினர்.

இந்நிகழ்வு பற்றி போகர் 7000 – இல்,

கூச்சலுடன் வெகு மாண்பர் கும்பல் கூடி
குவலயத்தில் வேகமுடன் வார்த்தை சொன்னார்
ஏச்சாகக் கூறினதோர் மொழிகட்கு எல்லாம்
எதிராக யான் ஒன்றும் பேசேன் பாரே                

பாரேதான் வெகுகாலம் சமாதி பக்கம்
பாரினிலே வருவாரும் போவாரும் உண்டு
நேரேதான் அவர்களிடம் வார்த்தை பேசேன்
நேர்மையுடன் சமாதியிடம் பள்ளி கொள்வேன்
கூரேதான் சமாதியிடம் இருந்து கொண்டு
கொப்பெனவே தேவர் வரும் காலம் மட்டும்
ஊரேதான் போகாமல் காத்திருந்து
உறுதியுடன் சேவையது கண்டிட்டேனே.             

அதாவது சீடன் யாகோபுவிடம், “பல பேர் பலவிதமாகக் கூச்சலிட்டுப் பேசினர். நான் எதனையும் காதில் கேட்டுக் கொள்ளாதிருந்தேன். தங்களது சமாதிக்கு அருகிலேயே படுத்து உறங்கினேன். இரவும் பகலும் சமாதிக்குக் காவலாய் இருந்தேன். ஒரு முறை கூட நான் எனது ஊருக்குப் போகவே இல்லை” என்றான்.

சீடன் உரைத்து கேட்ட யாகோபு, “சீடனே! அவர்கள் பேசியதில் தவறு ஏதுமில்லை. இந்த மானிட தேகம் நிலையற்றது. காயகற்பம் உண்டு காயத்தைச் சித்தி செய்து நான்கு யுகங்கள் வாழ்ந்தாலும், பின் ஒரு நாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாய்த்தான் போகும். நான் மீண்டும் சமாதியில் இருக்க விரும்புகிறேன்.

இம்முறை முப்பது வருடங்கள் கழிந்த பின்னரே நான் வருவன், நான் சமாதிக்குச் சென்ற பின் என்னைப் பற்றித் தவறாகப் பேசியோருக்குக் கண் பார்வை பறிபோய்விடும்!” எனவுரைத்துவிட்டு மீண்டும் சமாதிக்குள் இறங்கிவிட்டார்.

இம்முறை சமாதியின் மீது பாறாங்கல் கொண்டு மூடப்பட்டது. சமாதியைப் பார்க்க வந்தவர்கள், “அடப் பாவமே! இனி யாகோபு திரும்பி வருவது இயலாது” என்று ஏளனமாகப் பேசியதுமே அவர்கள் பார்வை பறிபோனது. அதுமட்டுமல்லாது.

குருடராய் போனவர்கள் சிலது மாண்பர்
குவலயத்தில் அழிந்தவர்கள் சிலது மாண்பர்
திருடராய் ஒளித்தவர்கள் சிலது மாண்பர்
தீர்க்கமாய் வாய்குளறிச் சிலது மாண்பர்    
என்று போகர் 7000 – இல் கூறப்பட்டுள்ளது.

பார்வை பறிபோனதுமே, “ஐயகோ! இவ்வாறு பார்வை பறிபோய்விட்டதோ!” என்று அடித்துக் கொண்டார்கள் ‘வாய்க் கொழுப்பினால் வந்த வினை இனி தீருமோய?’ என்று கதறியழுதனர்.

முன்நின்று யாகோபு வருவதெப்போ
மூவுலகில் சாபமது தவிர்பதெப்போ
மன்னரவர் மாண்பர்களின் வினையைநீக்கி
மானிலத்தில் வரம்கொடுக்கும் காலம் எப்போ.   
என்று அழுது புலம்பியவாறு காத்துக் கிடந்தனர். ஆண்டுகள் பல உருண்டோடின. இதனிடையே மாண்டவர்கள் பலர். உயிருடன் இருந்தவர்கள் பலர்.

கோடியாம் சிலபேர்கள் ஞானவான்கள்
குவலயத்தில் வெகுநாளாய்ப் பேருண்டாக
நாடியே சமாதியிடம் கிட்டிருந்து
நாதாந்தப் பேரொளிவின் சாமாதி முன்னே
வாடியே காத்திருந்த சீடர் தாமும்
வன்மையுடன் உபதசம் பெற்றார் தானே.

யாகோபு உரைத்தபடி சமாதியின் அருகேயே முப்பது ஆண்டுகள் சீடர்கள் காத்திருந்தனர். பின் சமாதியிலிருந்து யாகோபு வெளிவந்த்தும் அவரது தரிசனம் பெற்றனர். ஜோதி வடிவாய் வெளிவந்த யாகோபு தம் சீடர்களது குறைகளைப் போக்கியருளினார். ஆனால் அவருக்கு மெக்கா நகரத்து வாழ்க்கை அலுத்துப் போனது. ஜீவன்முக்தி அடைய தான் தமிழகத்திற்குத் திரும்பிச் சென்றிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானத. சிறிது காலம் தம் சீடர்களுடன் தங்கிய யாகோபு அவர்களுக்கு வேண்டிய நல்லுபதேசங்களைச் செய்தருளினார். பின் அவர் தன் சீடர்களிடம், “நான் மீண்டும் சமாதிக்குச் செல்கிறேன். இனி நான் திரும்பமாட்டேன்” என்றுரைத்தருளினார்.

யாகோபு உரைத்ததைக் கேட்டு அவரது சீடர்கள் திடுக்கிட்டனர். அவரைப் பணிந்து தொழுது அழுதனர். ‘அவர் மீண்டும் சமாதிக்குச் செல்லக் கூடாது. தங்களுடனே இருக்க வேண்டும்.’ என்று மன்றாடினர். ஆனால் அவர்களிடம் யாகோபு, “அட மூடர்களே! அவ்வாறே நான் இருந்தாலும் நான் இருக்கும் காலம் வரையில் என்னுடனேயே நீங்களும் இருக்க இயலுமா? பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். இந்த உடம்புதான் அழியுமே தவிர ஆன்மா ஒருபோதும் அழியக்கூடியதல்ல. எனவே நீங்கள் வருந்த வேண்டாம். நான் என்றும் உங்களுடனேயே இருப்பதாக எண்ணுங்கள்” என்று கூறிவிட்டு விடைபெற்று மீண்டும் சமாதிக்குள் புகுந்தார்.
யாகோபு மெக்காவில் சமாதி கொண்டதாக சிலர் கூறுவர். ஆனால் அவர் சமாதியுள் இருந்து வெளிப்பட்டுத் தமிழகம் வந்தவுடன் சதுரகிரியில் சிறிது காலம் தங்கியிருந்தார். தாம் மெக்காவில் இருந்தபோது அரபி மொழியில் எழுதிய மருத்துவ நூல்களைத் தமிழில் இயற்றினார். பின் சதுரகிரி வனத்தில் சிலகாலம் தங்கிய யாகோபு என்ற இராமதேவர் பின் அழகர் மலைக்கு வந்து அங்கேயே சமாதி அடைந்தருளினார்.

தமிழகத்திற்கு வந்து தம் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்ததுமே அவர் மீண்டும் இராமதேவராகவே மாறினார் என்றும், அதனாலேயே அவர் அழகர்மலையில் சமாதியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்.

Thursday, 19 September 2024

விழித்துக்கொள் தம்பி


எப்படிப்பட்ட தலைமுறையை உருவாக்குகிறோம் ?

கேளிக்கைகளும் கைபேசியும் அடுத்த தலைமுறையை சிந்தனையற்ற கார்ட்டூன் மனிதர்களை உருவாக்குகிறது.

ஒழுக்கம் தான் உயிரினும் மேலென்ற என்ற எண்ணம் விதைக்கப்பட வேண்டும்.

உடலுழைப்பு செய்பவரைக் காட்டிலும் அதிக உணவு அதிக தூக்கம் முறையற்ற விழிப்பு உடற்பயிற்சி செய்யாத தன்மை எப்படி வலிமையான தலைமுறையை உருவாக்கும்?

பசியை பணத்தின் மதிப்பை உணராத சமூகம் எப்படி உயரும்?

சிலரின் வியாபாரத்திற்கு பலிகளாகும் எலிகளாய் இருக்காமல் புலிகளாய் மாற வேண்டும் என்பதே விருப்பம்

வால்மீகி

தினம் ஒர் சித்தர் வரலாறு

பெயர் வால்மீகி முனிவர்

இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆகும். இவர் ஒரு வட இந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன் பாத்திரங்களை மக்கள் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கிறார்கள். அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறாகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர். மேலும் இராமாயணம் இதிகாச நூலை இயற்றியவரான வால்மீகி ஒரு வட இந்திய ஆரிய மரபினர் என்பதால், ஆரிய மரபினரை உயர்த்தி, இராமனை கடவுளாகவும்; திராவிட மரபினரை தாழ்த்தி, இராவணனை அசுரனாகவும் சித்திரித்துள்ளார் எனும் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அதே இதிகாசத்தில் இராமனுக்கு துணைப்புரியும், தென்னிந்தியர்களை குரங்குகளாக (வானரர்) சித்தரிக்கப்பட்டிருப்பதன் தவறையும் பலர் சுட்டிக்காட்டுக்கின்றனர். வால்மீகி முனிவரின் ஆசிரமம் தமசா நதிக்கரையில் அமைந்து இருந்தது.

ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு, வால்மீகி முனிவர் அவரை நோக்கி, "நாரதரே, இந்த யுகத்தில் முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய நேர்மையான், சத்தியம் தவறாத, வீர தீர பராக்கிரமசாலியான புருஷன் யாராவது இருக்கிறானா?" என்று கேட்டார். அதற்கு நாரதர் ராமபிரானுடைய வரலாற்றை முழுவதுமாக வால்மீகிக்கு எடுத்துரைத்தார். நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின், வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார். நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார். அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில், எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது. இதைக் கண்டு மனம் பதறிய வால்மீகி, அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி, "இதயமற்ற அரக்கனே! என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய்!" என்று உணர்ச்சி வசப்பட, அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அவரையறியாமலே ஒரு கவிதை வடிவில் வெளிவந்தன. ஆசிரமத்திற்குத் திரும்பி வந்த பிறகும் அவருடைய படபடப்பு அடங்கவில்லை. சற்று நேரத்தில், பிரம்மா வால்மீகியைக் காணவந்தார். பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி வினயத்துடன் நின்ற போது, பிரம்மா, "வால்மீகி, என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும்!" என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். அதைப் படித்து மகிழாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

வால்மீகி வரலாறு வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். இருண்ட காடு. யாரும் தனிவழியே போவதற்கு பயம் கொள்வர். இரண்டு பெரிய நகரங்களுக்கு நடுவில் இந்த காடு இருந்ததால் பலருக்கு இதன் வழியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரும் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புடன் தான் இதன் வழியே செல்வர். வணிகர் கூட்டம் அடிக்கடி இந்த வழியே செல்வதால் வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இந்த காட்டில் கூடாரம் இட்டு வாழ ஆரம்பித்து விட்டது. எத்தனைப் பாதுகாப்புடன் வந்தால் தான் என்ன, இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்று ஆகிவிடும். அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். பெரிய குடும்பி. அவன் கொள்ளையடிப்பதில் மிக சமர்த்தன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர். சில நேரம் அவன் தனியாகக் கூட வழிப்பறி செய்ய கிளம்பிவிடுவான். என்ன செய்ய? பெரிய குடும்பம்...காப்பாற்ற வேண்டாமா? மனைவியர்களும் குழந்தைகளும் உறவுகளும் அவன் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்? அவனுக்காக தன் உயிரையும் கொடுக்க முன்வருவார்களே? அவர்களைக் காப்பது தன் கடமையல்லவா? என்று அடிக்கடி எண்ணிக்கொள்வான் அந்த தலைவன். ஒரு தடவை அப்படி அவன் தனியே கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் மாட்டிக்கொண்டார் ஒரு முனிவர். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும் 'நாராயண, நாராயண' என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் அவர் நடுநடுங்கி இவனைப் பார்த்து 'யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு அவன், 'நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும்' என்றான்.

முனிவருக்கு அவன் கொள்ளைக்காரன் என்பது அப்போதுதான் புரிந்தது. 'அப்பா. நீ செய்வது மகா பாவம் அல்லவா? இப்படி வருபவர் செல்பவர்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் யமன் உன் உயிரைக் கொள்ளையடித்துச் செல்ல வரும் போது உனக்கு நரகம் தானே கிடைக்கும். இது பாவம்' என்று பலவாறாக அறிவுரை சொன்னார் அந்த முனிவர். கேட்பானா இவன். 'தேவையில்லாமல் பேசி என் நேரத்தை வீணாக்காதே. என் மனைவி மக்கள் உறவு எல்லோரும் இன்று நான் என்ன கொண்டு வரப்போகிறேன் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். நீர் சீக்கிரம் உம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம். இல்லை இங்கேயே செத்துப் போக உம்மை தயார் செய்து கொள்ளும்' என்று கடூரமாகச் சொன்னான். இதற்குள் முனிவருக்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது. இவன் நின்று பேசுகிறான். பேசிப் பேசி இவன் மனதை நல்வழிக்கு திருப்பிவிடலாம் என்று அவன் மேல் கருணை கொண்டு மேலும் பேச ஆரம்பித்தார். 'அப்பா...நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளைக்கொண்டு போகலாம்' 'சீக்கிரம் கேட்டுத் தொலையும்' ' நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? ' 'வேறு யாருக்காக. என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்.' 'உன் எல்லா சுகங்களிலும் பங்கு கொள்கிறார்கள். சரி. உனக்காக தங்கள் உயிரைத்தருவதாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை உன் பாவங்களில் தான் அவர்கள் பங்கேற்பார்களா? சொல்.' 'என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லைதான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை.

முற்றும் துறந்தவரான உமக்கு அதெல்லாம் புரியாது'. 'அது இருக்கட்டும் அப்பா. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார்'. 'அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்'. 'அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா?' 'இல்லை. அதற்குத் தேவையும் இல்லை'. 'அது அவசியம் தேவை. அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா?' 'ஆகா முனிவரே! தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது'. 'இல்லையப்பா. நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.' கொள்ளையர் தலைவன் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான். திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்து 'சுவாமி, நீங்கள் சொன்னது சரிதான்' என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். 'என்னப்பா நடந்தது'. 'சுவாமி. நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் 'எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும்.

அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை' என்று கூறிவிட்டார்கள்' 'அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை'. 'ஆமாம் சுவாமி. அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும்' 'நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே' 'சுவாமி. என்ன நாமம் அது?' 'ராம நாமம்' 'என் வாயில் நுழையவில்லையே சுவாமி' 'கவலையில்லை. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன?' 'இதுவா சுவாமி. இது மரா மரம்'. 'நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும்'. 'ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே' 'என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள்'. 'நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்' என்று வணங்கி நின்றான். நாரதரும் தன் வழியே சென்றார். அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து 'மரா மரா மரா' என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது 'ராம ராம ராம' என்று ஒலித்தது. நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான். அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால் 'வால்மீகி' என்று அழைக்கப் பட்டார். பின்னர் இராமாயணம் எழுதி அழியா புகழ் பெற்றார் அந்த கொள்ளையர் தலைவனாய் இருந்து நாரதரின் கருணையால் நல்வழியில் திருப்பி விடப்பட்ட வால்மீகி முனிவர்.

அவர் பெரிய மகான் ஆனார். புற்றில் இருந்து வந்த மகான் என்பதால்,

அவருக்கு ""வால்மீகி'' என்ற பெயர் ஏற்பட்டது. "வால்மீகம்' என்றால் "புற்று' எனப்பொருள்.

இவரே ராமாயணம் என்னும் தெய்வீக காவியத்தை நமக்கு அளித்தார்

இராமாயண காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர் என்பதை நாமறிவோம். இராமாயண நிகழ்வோடு தொடர் புடைய பல தலங்கள் நாடு முழுவதும் அமைந்துள்ளன. முதன் முதலில் இராமாயண காவியத்தை இராமன் திருமுன்பே பாடியவர்கள்- அவரின் திருக் குமாரர்களான லவனும் குசனுமே. இராமாயண மகாகாவியத்தை எழுதிய வால்மீகியே சீதாராமனை ஒன்று சேர்த்தார் என்ற பெருமையையும் கொண்டதாக அமைந்து விட்டது. வால்மீகி சீதாதேவியைத் தன் ஆசிரமத்தில் வைத்துக் காப்பாற்றினார். அங்குதான் லவ- குசர்களை சீதா பிராட்டி பெற்றெடுத்தாள். வால்மீகியின் ஆதரவால் லவ-குசர்கள் வளர்க்கப்பட்டு, சிறந்த கல்விமான்களாகவும் வில் வித்தையில் சிறந்தும் விளங்கினர். இராமர் தன் தந்தை எனத் தெரியாமலேயே, லவ-குசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் இராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவ-குசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவைக் காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்ததும் இராமபிரான் மீது கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர் அப்போது ஒரு யாகக்குதிரை லவ-குசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றைக் கட்டிப்போட்டு விட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி இராமனும் அங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவ-குசர்களிடம், இராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களின் அன்னையே சீதை என்பதையும், எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை இராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார். தந்தையை எதிர்த்ததால் லவ-குசருக்கு பித்ருதோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றனர்.

ஸ்ரீராமர் அனுப்பிய அஸ்வமேத யாகத்துக்கான குதிரையை, குசனும் லவனும் பிடித்து இரும்புவேலிக்குள் அடைத்து விட்டார்களாம். (கோ = வேந்தன்) கோ அனுப்பிய குதிரைகளை (அயம் = இரும்பு) அயத்தினால் செய்த பேடில் (பேடு = வேலி) அடைத்த இடம் என்பதால் கோ+அயம்+பேடு= கோயம்பேடு. என்ற ஒரு குறிப்பு உண்டு. இத்தலத்திற்கு ராகவபுரம் என்ற பெயரும்; கோயட்டி என்ற குருட்டு நாரைக்கு இத்தலத்தில் சிவலோக பிராப்தி கிடைத்ததால் கோயட்டிபுரம் என்ற பெயரும் அமைந்து, காலப்போக்கில் கோயம்பேடு என்று அழைக்கப்படலாயிற்று என்று தல வரலாறு மூலம் அறிய முடிகிறது. என்று இப்படி ஒரு செய்தியும் உள்ளது. வால்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்த இடமே தற்போது சென்னை மாநகரிலுள்ள கோயம்பேடு என்று அழைக்கப்படும் இடமாகும். தன் சிறிய தந்தையரை அழித்த பாவம் தீர லவ-குசர், வால்மீகியால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட வைகுண்டவாசப் பெருமாளின் அருளாணைப்படி ஈஸ்வரப் பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தார்கள். இப்படி கோயம்பேடு பகுதியே இராமாயண காவியத் தொடர்புடையதாகவும், வால்மீகி ஆசிரமமாகவும், ஸ்ரீராமனே எழுந்தருளிப் புனிதப்படுத்திய தலமாகவும் விளங்குவதோடு, சைவ- வைணவ ஒற்றுமைக்கோர் சான்றாய்- வைகுண்டவாசப் பெருமாள் கோவிலும் குறுங்காலீஸ்வரர் கோவிலும் அருகருகே அமைந்த புனிதத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள குறுங்காலீஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலுக்கும் பொதுவாக ஒரே திருக்குளம் அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதும் தனித்தன்மையானது. பொதுவாக வைகுண்ட வாசப் பெருமாள் பல தலங்களில் அமர்ந்த நிலையிலேயே காட்சியளிப்பார். உற்சவமூர்த்தி சதுர்புஜங்களுடன் காட்சியளிக்கிறார். இதிலும் ஒரு விசேஷ அம்சம், வலக்கை அபய ஹஸ்தமாகவும் இடத் திருக்கரம் ஆஹ்வான ஹஸ்தமாகவும் (அழைத்து அருளும் பாவம்) அமைந்துள்ளது. தனிக்கோவிலில் கனகவல்லித் தாயார் கம்பீரமாகவும் கருணை மிகுந்தவளாகவும் அருட்காட்சி தருகிறாள். ஆண்டாள் தனிச் சந்நிதியில் அழகு மிளிரக் காட்சியளிக்கிறாள். தல புராணப்படி சீதையும் இராமனும் ஒன்று சேர்ந்த இடமாக இது இருப்பதால், இத்திருக்கோவிலில் தனிச்சந்நிதியில் சீதா-இராமன் காட்சியளிக்கிறார்கள். அதிலும் ஒரு கலையம்சமும் கருத்தும் விளங்குகிறது. ஸ்ரீராமனும் சீதையும் வனவாச கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். மரவுரி தரித்த மன்னனாக இராமனும் சாதாரண நிலையில் தலையில் கோடாலி முடிச்சுடன் சீதையும் காட்சியளிக்கிறார்கள். இத்திருக்கோவிலில் வால்மீகி முனிவருடன் லவ-குசர்கள் காட்சியளிக்கிறார்கள். அதே போன்று சிவன் கோவிலான குறுங்காலீஸ்வரர் ஆலயத்திலும் அசுவமேத யாக குதிரையைப் பிடித்தபடி லவ- குசர்கள் இருப்பது போன்ற பல சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து! பெருமாள் கோவிலுக்கு எதிரே சிறிய திருவடியும் ராமபக்தனுமான அனுமனின் சந்நிதி அமைந்துள்ளது. அனுமனின் சந்நிதியைச் சுற்றியுள்ள சுவர்களில் ஆஞ்சனேயர்களின் பல விசேஷக் காட்சி. இப்படி நாராயணனும் நமசிவாயனும் அருகருகே கோவில் கொண்டு அருளும் இத்தலத்திற்கு அன்பர்கள் விஜயம் செய்து, சீதா ராமனின் திருவருளுக்கும், “சரணமானால் தன் தாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரானான’ வைகுண்ட வாசப் பெருமானின் திருவருளுக்குப் பாத்திரமாக வேண்டும். அன்பர்கள் இத்தலத்துக்கு வருகை தந்து ஸ்ரீராமபிரானின் திருவருளுக்கு இலக்காகலாம்.

யோகவாசிஷ்டம்,
அத்புத ராமாயணம்,
கங்காஷ்டகம்
ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.

திருச்சிற்றம்பலம்

பூண்டி மகான்

தினம் ஒர் சித்தர் வரலாறு

பெயர் பூண்டி ஆற்று ஸ்வாமிகள்

ஒரு நாட்டை ஆளும் மன்னர் தன் பணி நிமித்தம் எல்லா இடங்களுக்கும் சென்று நிறை குறைகளைக் கண்டறிவது இயலாத ஒன்று. அது போன்ற சந்தர்ப்பங்களில் தன் அந்தஸ்துக்குச் சமமான பிரதிநிதிகளை (மந்திரிகளை) குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி, தகவல்களை அறிந்து வரச் சொல்வார். இது அரசாட்சிக்கு மட்டுமில்ல...... ஆன்மிகத்துக்கும் பொருந்தும். இங்கே மன்னன் என்பவன் மகேசனுக்கு சமம்; மந்திரி என்பவர் மகான்களுக்குச் சமம்.

மேலே சொன்ன உதாரணத்தைப் போல், தன் ஒருவனால் மட்டும் குடிமக்களைப் பாதுகாக்க முடியாது என்று கருதியோ என்னவோ, மகான்களைத் திக்கெங்கும் அவதரிக்க வைத்தான் ஆண்டவன். இறைவனிடம் மக்கள் வேண்டும் வரங்களை, தங்களின் தவ பலத்தால் வழங்கினார்கள் மகான்கள். அவர்களது பிணிகளைத் தீர்த்தார்கள். இவரிடம் போ.... உனது பிரச்சனை தீரும் என்று பகாவனே, சில மகான்களை அடையாளம் காட்டி அனுப்பி வைத்த நிகழ்வுகளையும் நம் புராண வரலாற்றில் படித்து இன்புறலாம்.

இந்திரியங்களை அடக்கி ஆண்ட மகான்கள், இந்தியாவில்தான் பெருமளவில் பிறப்பெடுத்தார்கள். உலகளாவிய ஆன்மிகத்தில், இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். இந்த மண்ணில் நிகழ்ந்த இதிகாசங்களும் புராணங்களுதான் ஆன்மிகத்தின் தேவையையும், அவசியத்தையும் அனைவருக்கும் அடிகோடிட்டுக் காட்டின. உதாரணத்துக்கு ராமாயணத்தையும் மகாபாரத்தையும் சொல்லலாம்.

ஆன்மிகம் என்பது தினமும் கோயிலுக்குப் போய் தொழும் கடவுள் வழிபாடு மட்டுமல்ல... கருணை, தொண்டு, பரோபகாரம் போன்ற நற்சிந்தனைகளை நம் சிந்தையில் கொள்ள வேண்டும்; அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். அதுவே சிறந்த ஆன்மிகம். இப்படிப்பட்ட நற்குணங்களுடன் வாழ்ந்து முக்தி அடைந்தவர்கள்தான் மகான்கள். இறப்பு என்பது இவர்களது தேகத்துக்குத்தானே தவிர, ஆன்மாவுக்கு அல்ல. இன்றும் பல அதிஷ்டானங்களில் இவர்கள் சூடசுமமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளன்போடு தன்னைத் தேடி வரும் பக்தர்களை ஆசிர்வதித்து அருள்கிறார்கள், அவர்களுடன் பேசுகிறார்கள்.

மகான்களில் பலர், கருவில் இருந்து உருக் கொண்டதாகத் தெரியவில்லை. அப்படி என்றால் எவ்விதம் இந்த பூமிக்கு வந்தார்கள்; இவர்களுக்கு ஜனன ஜாதகம் கிடையாதா? ஆன்ம பலத்தை இவர்கள் அடைந்த ரகசியம் புரியாதா?

இப்படிப் பல கேள்விகள், விடை தெரியாத புதிர்தான்! ஷீரடி பாபா, திடீரென ஒரு நாள் ஷீர்டி கிராமத்தில் வேப்பமரத்தடியில் தோன்றியதாக அவரது திவ்ய சரித்திரம் சொல்கிறது. பூண்டி ஆற்று ஸ்வாமிகளும் அப்படித்தான்!

மிக சமீப காலத்தில் ஸித்தி ஆன சித்த புருஷர் பூண்டி ஸ்வாமிகள். 1978-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் நாள் வளர்பிறை திரயோதசி கூடிய அனுஷ நடசத்திரத்தன்று காலை சுமார் 9.40 மணிக்கு கலசப்பாக்கத்துக்கு அருகில் உள்ள பூண்டி கிராமத்தில் முக்தி ஆனார் இவர். மூன்று நாட்கள் பக்தர்களின் அஞ்சலி தரிசனத்துக்குப் பின் இவரது உடல், ஆகம விதிப்படி பதும ஆசனத்துடன் சமாதி கண்டது. ஸ்வாமிகளின் உடலை சமாதிக்குள் இறக்கிய பின் அவரது தேகத்தைச் சுற்றி மூட்டை மூட்டையாக விபூதி, தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் மற்றும் நறுமணப் பொருட்களை இட்டு நிரப்பினார்கள் அவரது பக்தகோடிகள். நடமாடும் தெய்வம் என்று நாமெல்லாம் போற்றி வணங்கும் காஞ்சி மகா பெரியவரால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டவர் இந்த பூண்டி ஸ்வாமிகள்.

பூண்டி ஆற்று ஸ்வாமிகள் என்பது பிற்பாடு வந்த பெயர். அதற்கு முன் வரை இவர் அழுக்குச் சாமி என்றும், மூட்டைச் சாமி என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார். அதற்குக் காரணமும் உண்டு. முதன் முதலாக ஸ்வாமிகள் கலசப்பாக்கத்துக்கு (திருவண்ணாமலை-வேலூர் சாலையில் வரும் ஊர்) வந்தபோது ஓர் அழுக்கு மூட்டையுடன் காணப்பட்டாராம். தவிர, உடலில் ஒன்றன் மேல் ஒன்றாக பல விதமான அழுக்குச் சட்டைகளை அணிந்திருந்தாராம். அதிலிருந்து இவரை இந்தப் பெயர்களிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள். ஆற்று ஸ்வாமிகள் என்று இவரை பக்தர்கள் அழைக்க ஆரம்பித்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு.

அது, 1943-ஆம் வருடம்.... கலசப்பாக்கம் ஆற்றில் அப்போது தண்ணீர் இல்லை. எனவே, சுட்டெரிக்கும் ஆற்று மணலில் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார் ஸ்வாமிகள். சூரியனின் வெம்மையான கிரணங்கள் ஸ்வாமிகளைப் பாதிக்கக் கூடாது என்று விரும்பிய உள்ளூர்க்காரர்கள் சிலர் இவர் அமர்ந்திருந்த இடத்துக்கு மேலே நிழல் விழும் வண்ணம் ஒரு கூரையை அமைத்தனர். இவர் அமர்ந்த நேரமோ என்னவோ.... கலசப்பாக்கம் பகுதியில் திடீரென பேய் மழை பிடித்துக் கொண்டது. எங்கெங்கோ கொட்டிய நீரெல்லாம் வடிகால் தேடி கடைசியில் இந்த ஆற்றில் கலந்தது. விளைவு - ஆற்றின் இரு கரையெங்கும் தொட்டுக் கொண்டு பிரவாகம் எடுத்து ஓடியது வெள்ளம். ஸ்வாமிகளுக்குப் போட்டிருந்த கூரை வெள்ளத் தோடு அடித்துக் கொண்டு போய் விட்டது. மழை ஓரளவு விட்ட பிறகு, உள்ளூர்க்காரர்கள் சிலர் ஓடி வந்து ஸ்வாமிகள் அமர்ந்திருந்த இடத்தை ஆராய்ந்தனர். அங்கே கூரையும் தெரியவில்லை; ஸ்வாமிகளையும் காணவில்லை. பதைபதைத்துப் போனார்கள். ஸ்வாமிகள் ஜல சமாதி ஆகி விட்டதாகத் தீர்மானித்து விட்டார்கள்.

மூன்று நான்கு நாட்கள் ஓடின. கலசப்பாக்கம் ஆற்றில் திரண்ட வெள்ளம் மெள்ள வடியத் தொடங்கியது. அப்போது ஆற்றங்கரைக்கு வந்த விவசாயி ஒருவர். ஸ்வாமிகள் அமர்ந்து தவம் செய்த இடத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அங்கே-ஸ்வாமிகளுக்கு நிழல் தருவதற்காகப் போடப்பட்டிருந்த கூரையின் ஒரு பகுதி, மணலில் குத்திட்டு நின்றிருந்தது. அட, ஸ்வாமிகளுக்கு மேலே இருந்த கூரை ஆயிற்றே இது? என்று சந்தேகப்பட்டு அங்கே பள்ளம் பறித்தார். என்னே ஆச்சரியம்.....

ஆற்றின் உள்ளே சில அடி ஆழத்தில், ஸ்வாமிகள் எந்த நிலையில் அமர்ந்து நிஷ்டையைத் தொடங்கினாரோ. அதே நிலையில் அப்படியே காணப்பட்டார். பரம சந்தோஷம் அடைந்த அந்த விவசாயி, ஊருக்குள் ஓடிப் போய் விஷயத்தைச் சொல்லி அனைவரையும் கூட்டி வந்தார். பிறகு, ஸ்வாமிகளை அவரது நிஷ்டை கலையாமல் மெள்ள வெளியே தூக்கி வந்து கரையில் அமர்த்தினார்கள் ஊர்க்காரர்கள். வெள்ளத்தோடு போய் விட்டார் என்று கருதப் பட்டவர். அப்படியே உருக்குலை யாமல்

மீண்டு வந்திருக்கிறார் என்றால், இவர் சாதராணப் பிறவி அல்ல என்று தீர்மானித்து, அவருக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.

கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த ஆரம்ப நாட்களில் ஊர் எல்லையில் இருக்கும் அடர்ந்த புதருக்குள் சென்று அமர்ந்து அங்கே நிஷ்டையில் கூடி விடுவது வழக்கம். இவர் இருக்கும் இடத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியாது; அவரது தவத்துக்கும் தொந்தரவு இருக்காது.

கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் கிராமவாசிகள் இருவர் இவரிடம் வந்தனர். இருவருமே நண்பர்கள். ஏதோ ஒரு பிரச்சனையைச் சொல்லி அதற்குத் தீர்வு கேட்டனர் ஸ்வாமிகளிடம். வந்தவர்களில் ஒருவனை உன்னிப்பாகக் கவனித்த ஸ்வாமிகள். நீ மண்ணில் போகப் போகிறாயப்பா என்றார். ஆனால் அந்த இருவருக்கும் இதன் பொருள் அப்போது விளங்கவில்லை, அங்கிருந்து கிளம்பிப் போனார்கள். மறுநாள் காலை அந்த இருவரின் ஒருவன் இறந்து விட்டான். அவனைப் பார்த்துதான் ஸ்வாமிகள் மண்ணில் போகப் போகிறாய் என்று முதல் நாள் குறிப்பால் சொல்லி இருக்கிறார். இதன் விளக்கம் பிறகுதான் இன்னொருவருக்குப் புரிந்தது. இப்படி ஸ்வாமிகளின் சித்து விளையாட்டுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன.

பூண்டி ஆற்று ஸ்வாமிகளின் சமாதித் திருக்கோயில் அமைந்திருக்கும் இடம் அருகே முன் காலத்தில் ஒரு ஒட்டுத் திண்ணை வீடு இருக்கும். இந்தத் திண்ணைதான் ஸ்வாமிகளின் குடியிருப்பு. 1960-ஆம் ஆண்டு முதல் அவர் சமாதி ஆன1978-ஆம் ஆண்டு வரை சுமார் 19 வருடங்கள், இந்தத் திண்ணையை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள். இவர் மல ஜலம் கழித்தோ, குளித்தோ எவரும் பார்த்ததில்லை. இதே இடத்தில் அமர்ந்த வண்ணம்தான் தன்னைத் தேடி வந்த பலரது பிரச்சனைகளையும் தீர்த்தாராம்.

அந்தக் காலத்தில் இந்த வீட்டுக்கு எதிரே இருக்கும் டீக்கடைக்காரர் தினமும் காலை வேளையில் டீ கொண்டு வந்து கொடுப்பார். பெரும்பாலும் எதையும் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் ஸ்வாமிகளுக்கு இல்லை. எனவே, அந்த டீக்கடைக்காரரே தான் கொண்டு வந்த டீயை ஸ்வாமிகளின் வாய்க்கு அருகே வைத்து சாப்பிட வைப்பாராம். இதுபோல் பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பண்டங்களை தான் விரும்பினால் மட்டுமே உண்பாராம். வாழைப்பழம் போன்றவற்றை பக்தர்கள் தோலை உரித்துக் கொடுத்தால், ஒரு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே அதை ஒரு மூலையில் தூக்கி எறிந்து விடுவாராம். இப்படித் தூக்கி எறியப்பட்ட பழக் குவியல்களும் உணவுப் பொருட்களும் ஒரு இடத்தில் குவிந்திருக்கும். ஆனால், அதில் இருந்து எந்த விதமான ஒரு தூர்நாற்றம் வராது. மாறாக, சுவையான ஒரு மணம் வீசிக் கொண்டிருக்கும். பக்தர்கள் சிலர் ஸ்வாமிகளின் வாயில் சிகரெட்டை வைத்து தீக்குச்சியால் பற்ற வைப்பார்கள். அதை ஒரு இழுப்பு இழுத்து விட்டு தூக்கி எறிந்து விடுவார். அவரது வாயில் இருந்து புகை வெளியே வராது. இத்தகைய பக்தர்களுக்கு வேறு ஒரு சிகரெட்டையோ பீடியையோ தருவார். அதை ஸ்வாமிகளின் பிரசாதமாகக் கருதி எடுத்துச் செல்வார்கள்.

ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றி அறிந்த ஒரு பெண்மணி சென்னையில் இருந்து புறப்பட்டு கலசப்பாக்கம் வந்தார். வருகின்ற வழியில் சில திருடர்கள் இந்தப் பெண்மணியை வழி மறித்து மிரட்டி, அவர் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை எல்லாம் களவாடிச் சென்று விட்டனர். ஏதடா.....ஸ்வாமிகளைப் பார்க்க வந்திருக்கும் இடத்தில் இப்படி ஆகிப்போச்சே? என்று அந்த பெண்மணி அழாத குறைதான். என்றாலும், ஸ்வாமிகளைத் தேடி ஊருக்குள் வந்திருக்கிறார். அப்போது ஸ்வாமிகள் ஆற்றங்கரையில் இருந்தார். களவு போன நகைகளை வேண்டி, ஸ்வாமிகளின் திருப்பாதங்களில் விழுந்து புலம்பினார். அதுவரை மவுனமாக இருந்த மகான், விடு.... அழுது புலம்பாதே.....கலசப்பாக்கத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் போய் நான் கேட்டதாகச் சொல்லி ஒரு இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வா.... என்று அந்த ஆசாமியின் பெயர் சொல்லி அனுப்பினார்.

தங்க நகைகள் களவு போனதற்கும், இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வருவதற்கும் என்ன தொடர்பு என்கிற சிந்தனையுடனேயே. ஸ்வாமிகள் சொன்ன ஆசாமியிடம் போய் விஷயத்தைச் சொன்னார். அவரும் ஒரு கம்பியை கொடுத்து அனுப்பினார். அதை பவ்யமாக எடுத்து வந்து ஆற்றில் உலவிக் கொண்டிருந்த ஸ்வாமிகளிடம் கொடுத்தார் பெண்மணி. அந்தக் கம்பியைத் தன் கையில் வாங்கி மேலும் கீழும் பார்த்து விட்டு அடுத்த விநாடியே பெண்மணிடம் கொடுத்தார் மகான். அதைக் கையில் வாங்கிய பெண்மணியின் விழிகளில் பிரகாசம். தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. போம்மா போ.... இது இப்ப இரும்பு இல்லே. சொக்கத் தங்கம். புலம்பாம பத்திரமா வீடு போய்ச் சேர் என்று அனுப்பி வைத்தார்.

அதுபோல் கை வேறு; கால் வேறாகப் பிரித்துக் காண்பிக்கும் ஹடயோகக் காட்சியில் ஒரு சுடுகாடு அருகே ஸ்வாமிகள் இருந்தபோது இதைப் பார்க்க நேர்ந்த கிராமவாசிகள் சிலர் திகைத்துப் போய் விட்டனர். பிறகு. சிறிது நேரத்தில் அவை அனைத்தும் ஒன்றானபோது வியந்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ஏராளமான குடில்கள் உண்டு. 1963-ஆம் ஆண்டு வாக்கில் அங்கே தங்கி இருந்தார் திருமதி தலையார்கான் (பார்ஸி). சித்தர்கள் சமாதிகளைக் கண்டு தரிசிப்பதற்காக இந்தப் பெண்மணி இங்கு தங்கி இருந்தார். அப்போது அவரது குடிலில் இருந்து விலை உயர்ந்த தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகள் ஒரு நாள் திருடு போய் விட்டன. உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்த அம்மையார் தன் புகாரைத் தெரிவித்தார். உயர்ந்த இடத்தில் செல்வாக்கு பெற்றவர் இந்தப் பெண்மணி என்பதால், ஏழு பிரிவுகளாக போலீஸ் படை சென்று, திருவண்ணாமலையின் சுற்று வட்டாரக் கிராமங்களை முற்றுகையிட்டு, திருட்டுக் கும்பலை சல்லடை போட்டுத் தேடியது.

இந்த ஏழு பிரிவில், அரக்கோணம் காவல் நிலையத்தில் சப இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரவரதன் குழுவினரும் ஒரு பிரிவினர். ஒரு ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் இரு கான்ஸ்டபிள் ஆகியோருடன் திருட்டுக் கும்பலைப் பிடிக்கப் புறப்பட்டார் சுந்தரவரதன். அரக்கோணத்தில் இருந்து கிளம்பி போளூர் வந்ததும். ஒரு கான்ஸ்டபிள், சுந்தரவதனிடம் சார்.... பக்கத்திலேயே ஒரு சாமீ இருக்கார். ரொம்ப ராசியானவர். அவரைப் பார்த்துவிட்டுப் போனா குற்றவாளியை நாம் பிடிச்சுடலாம் என்றார். அதன்படி இவர்கள் நால்வரும் போகிற வழியில் பூண்டி ஸ்வாமிகளைத் தரிசித்தனர். மகானை ஏற்கெனவே அறிந்த கான்ஸ்டபிள். அவரது வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். அதை வழக்கம்போல் ஒரு இழப்பு இழுத்து விட்டுத் தூர எறிந்தார். பிறகு வேறு ஒரு சிகரெட்டைக் கொடுத்து, போ போ... போற காரியம் நல்லா முடியும் என்றார்.

பிறகு, அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்தனர். குற்றவாளியைப் பிடிக்க இவர்களுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட தானிப்பாடி என்கிற கிராமத்துக்கு வந்தனர். அந்த ஊரில் கேடி கட்டய்யன் என்பவன் போலீஸ் பதிவேட்டில் இடம் பெற்ற திருடன். ஆகவே, அவனது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தலாம் என்று அங்கே சென்றனர் போலீஸார். இவர்கள் போனபோது மாலை ஐந்து மணி இருக்கும். கட்டய்யனின் மனைவி மட்டும் அப்போது வீட்டில் இருந்தாள். புருஷன்

எங்கேம்மா? என்று சுந்தரவரதன் விசாரணையை ஆரம்பிக்க..... அதற்கு, அவர் வயல் வேலைக்குப் போயிருக்காரு . வர்றதுக்கு ராவாயிடும் என்று சொன்னாள். அப்போது ஸ்வாமிகளிடம் சிகரெட் வாங்கிய கான்ஸ்டபிள். தம் அடிப்பதற்காகத் தனியே ஒதுங்கி வீட்டின் கொல்லைப் பக்கம் ஒரு வைக்கோல்போர் அருகே வந்தார்.

வீட்டின் உள்ளே பல வகையிலும் சோதித்த குழுவினர். சந்தேகப்படும்படியாக அங்கே எதுவும் இல்லை என்று முடிவெடுத்து வெளியே வந்தனர். வந்தவர்கள் தங்களுடன் வந்த கான்ஸ்டபிளை மட்டும் காணாமல் தேடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் - சப்இன்ஸ்பெக்டர் தன்னைக் கவனித்து விடப் போகிறாரே என்கிற பயத்தில் சிகரெட்டைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தார் கான்ஸ்டபிள். அப்போது அவர் திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, வைக்கோல்போர் திடீரென அசைய ஆரம்பித்தது. இந்த நேரம் பார்த்து சுந்தரவரதனும் அவரது குழுவினரும் இங்கே வந்து விட்டனர். இவர்களைப் பார்த்த மாத்திரத்தில் சிகரெட்டைப் பட்டென்று கிழே போட்டு அணைத்து விட்ட கான்ஸ்டபிள் சார்.... இந்த வைக்கோல்போர் மெள்ள அசையுது சார் என்றார். அவ்வளவுதான்.... சந்தேகப்பட்டவர்கள் பரபரவெனச் செயல்பட்டு, வைக்கோல்போரைப் பிரிக்க முற்பட.... உள்ளே கேடி கட்டய்யன் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர். பிறகென்ன..... அவனைப் பிடித்து முறைப்படி விசாரிக்க.... பார்ஸி பெண்மணியிடம் திருடியது தானே என்பதை ஒப்புக் கொண்டான் நகைகள் மீட்கப்பட்டன.

பாத்தீங்களா சார்.....பூண்டி சாமீ கொடுத்த சிகரெட்டைப் பத்த வைக்கறதுக்காகத் தோட்டத்துப் பக்கம் மட்டும் நான் போகலேன்னா, ஒரு திருடனை இந்நேரம் கோட்டை விட்டிருப்போம். அதான். சாமியே ஆசிர்வாதம் பண்ணி இந்த சிகரெட்டை என்னிடம் கொடுத்திருக்கிறார் போலிருக்கு என்று சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் உற்சாகம் பொங்கச் சொல்லி இருக்கிறார். அதே போல் திரும்பும்போது பூண்டிக்கு இந்தக் குழு மீண்டும் வந்தது. சிகரெட் கான்ஸ்டபிளைப் பார்த்த பூண்டி மகான், என்னப்பா..... போன காரியம் நல்லபடியா முடிந்தா? என்று கேட்க... அந்த போலீஸ் படையே, மகானின் கால்களில் விழுந்து ஆசி பெற்றது.

ஸ்வாமிகளின் சமாதி திருக்கோயில் கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. பலிபீடம், நந்திதேவர் முன்புறம் இருக்க.... கருவறையில் லிங்கத் திருமேனியுடன் அதிஷ்டானம் அமைந்துள்ளது. கருவறைக்கு வெளியே இரு பக்கமும் விநாயகர் மற்றும் முருகப் பெருமானின் திருவடிவங்கள் கருவறையில் முன்புறம் லிங்கத் திருமேனி; பின்புறம் திருவாசியுடன் ஸ்வாமிகளின் திருவுருவம். இடக்காலை மடித்து வைத்து, வலக் காலைத் தொங்க விட்டபடி சின்முத்திரை காண்பித்து ஸ்வாமிகள் அருள் புரிந்து வருகிறார். ஸ்வாமிகளின் உற்ஸவர் விக்கிரகமோ, நம்மை எல்லாம் ஆசி புரியும் வண்ணம் அமைந்துள்ளது.

ஸ்வாமிகளுக்கு உடன் இருந்து பணிவிடை செய்த சுப்பிரமணிய சாமி என்பவர் இப்போதும் இங்கே வசித்து வருகிறார். ஸ்வாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான அவரது பக்தர்கள், இன்றைக்கு அவரது திருச்சந்நிதி தேடி வந்து தங்களது மனக் குறைகளைக் கொட்டி விட்டுச் செல்கிறார்கள். அந்தக் குறைகளைத் தானே களைந்து அவர்களைக் காத்து வருகிறார் இந்த அற்புத மகான்.

திருச்சிற்றம்பலம்

தன்வந்திரி

தினம் ஒர் சித்தர் வரலாறு

பெயர்: தன்வந்தரி சித்தர்

வரலாறு சுருக்கம்

தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி ஆழ்வார்களிக்கும் ஆச்சாரியர்களுக்கும் 200 வருட காலம் இடைவெளி என்று கூறப்படுகிறது.இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரபந்தம் மறைந்து போனது.

திருமங்கையாழ்வார்க்கும் (கிபி 8ஆம் நூற்றாண்டு) நாதமுனிக்கும் (கிபி 10-ஆம் நூற்றாண்டு) இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று சரியான தகவல் இல்லை. அதை ஆராய்வதில் எந்த பயனும் இல்லை.

நாதமுனி திருநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயில், South Arcot Dist ) பிறந்தவர். "ஆரா அமுதே" [3310] என்ற திருவாய் மொழி பாசுரத்தைக் கேட்டு மறைந்து போன நாலாயிரதிவ்ய பிரபந்ததை தேடி கண்டு பிடித்து முதலாயிரம், இயற்பா... என்று தொகுத்து வழங்கியவர்.

அவரே அதற்கு ராகம் அமைத்து அபினயத்துடன் நடனமும் ஆடி அதை பிரபலப்படுத்தினார். தன்னுடைய மருமான்கள் கீழயகட்டாழ்வான், மேலையகட்டாழ்வான் ஆகிய இருவரையும் அதே போல் பாடி நடனம் ஆடப் பணித்தார். அரையர் பரம்பரை இவர்களிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்றும் வைகுண்ட ஏகாதேசியில் அரையர் சேவையை காணலாம். ஸ்ரீரங்கம் கோயிலில் பிரபந்தம் (சந்தம்) சொல்லும் முறையை வகுத்தார். இந்த வழக்கம் மற்ற ஸ்ரீவைஷ்ணவ கோயிலிலும் பிறகு பின்பற்றபட்டது. இக்காலத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவ தலைமை செயலகமாக திகழ்ந்தது.

நாதமுனிக்கு பின் உய்யக்கொண்டார், அவரை தொடர்ந்து மணக்கால் நம்பி, ஆளவந்தார்(இவர் நாதமுனியின் பேரன்) வந்தார்கள். ஆளவந்தாரை தொடர்ந்து உடையவர் எனப் போற்றப்படும் ஸ்ரீராமாநூசர்(கிபி 1071-1137) தோன்றினார்.

ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து 120 வருட காலம் வாழ்ந்தவர். நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் மூலம் ஸ்ரீவைஷ்ணவத்தை மக்களுக்கு எடுத்துச் சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஒழுங்கு செய்து நல்ல முறையில் நிர்வாக நடைமுறைகளை வகுத்தார். இன்னும் கோயில் நடைமுறைகள் அவர் வகுத்தபடி நடந்து கொண்டு இருக்கிறது. அவர் சீர்செய்த நிர்வாகத்தை பற்றி கோயிலொழுகு விரிவாக கூறுகிறது அவற்றுள் சிலவற்றை இங்கே தந்துள்ளேன்.

கோயிலின் கணக்கு வழக்குகளை பார்க்க தம்முடைய சீடர் அகாலங்க நாட்டாழ்வானை நியமித்தார்.

ரொம்ப காலம் பழுதற்று கிடந்த தன்வந்திரி(பெருமாளுக்கு மருத்துவராக விளங்குபவர்!) சந்நதியை புதுப்பித்து அதற்கு அவர் சீடரான கருடவாகன பட்டரை நியமித்தார். தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்).

திருமங்கையாழ்வார் காலத்திற்கு முன்பிலிருந்து இக்கோயிலில் ஐந்துவகையான அலுவற்பதவிகள் மட்டுமே இருந்தன. இராமாநுசர் அவற்றைப் பத்தாக உயர்த்தினார். அவர்களின் வேலைகள் கோயிலொழுகில் விரிவாகக் கூறப்படுகின்றது. இது 'உடையவர் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் காலத்தில், வைகுண்ட ஏகாதேசி உற்சவத்திற்கு, நம்மாழ்வார் திரு உருவ சிலை ஆழ்வார்திருநகரியிலிருந்து எடுத்துவரப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கத்தின் வெள்ளம் அடிக்கடி வருவதால் அந்த சிலைக்கு எதாவது ஆபத்து நேராமல் தடுக்க ராமாநுசர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் சிலை ஒன்றை செய்து அந்த வழக்கத்தை மாற்றியமைத்தார். ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்கள், ஆண்டாள், நாதமுனி திரு உருவ சிலைகளை அமைத்தார். அவர்களின் திருநட்சத்திரத்தில் உற்சவம் செய்ய ஏற்பாடு செய்தார். "தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்)." கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆதியில் பகவான் அவதாரமாகிய ´தன்வந்தரி´ மருத்துவ இயலை முதல் முதலாக உருவாக்கியதாக ´ஐதீகம்´ சொல்கிறது. ´தன்வந்தரி´ என்ற பெயரில் பல மருத்துவ இயலைத் தோற்றுவித்தவர்கள் இருப்பதால் வரலாற்று குழப்பம் ஏற்படுகிறது. இருப்பினும் ´காசிராஜ திவோதாச தன்வந்தரி´ (Kasiraja Divodasa Dhenvantari) ஆயுர் வேதத்தை முறைப்படுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரித்திருக்கிறார். உட்கொள்ளும் மருந்து, குழந்தை மருத்துவம், மனத்தத்துவ இயல், தொண்டை, காது, மூக்கு மற்றும் கண் சிகிச்சை, அறுவை மருத்துவம், நச்சுப் பொருள், இரசாயண இயல், காயகல்ப இயல் (geriatrics) உடலுறுப்புக்களைத் திருத்தியமைக்கும் அறுவை சிகிச்சை என மருத்துவப்பிரிவுகளைக் கண்டு ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் ஆச்சரியத்துடன் புகழ்கின்றனர். சித்த மருத்துவம் தமிழகத்தில் தோன்றிய மருத்துவ சாத்திரம். அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் வகுத்தமுறைகள். பெரும்பாலும் மூலிகைகளை கொண்ட மருத்துவமுறைகள். ஐரோப்பிய மருத்துவ முறைகள் நம்நாட்டில் வழக்கத்திற்கு வந்தபின் சித்த மருத்துவம் சிதிலடைந்துவிட்டது. சமீப காலமாக இந்திய அரசு ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் வட இந்திய ´யூனானி´ மருத்துவம் மறையாமல் இருப்பதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பலகோடி செலவில் கல்லூரிகளும், ஆய்வு நிறுவனங்களும், மூலிகைத் தோட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு சித்த மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவில் சித்த மருத்துவத்திற்கு மதிப்பு கூடிக்கொண்டு போவதும் இந்திய அரசு கவனத்தில் எடுத்திருக்கலாம். நம் முன்னோர்களின் அறிவை அதன் உருவாக்கங்கள் நம் மண்ணில் முற்றிலும் இன்னும் மறையவில்லை என்பதற்கு சில உதாரணங்களாக அரசு சித்த மருத்துவங்கள் இருக்கின்றன.

கி.மு.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் சரகர் (Charaka) இந்திய மருத்துவ உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் "சரகஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார்.120- அத்தியாயங்கள் கொண்ட சரகஸம்ஹியில் மருத்துவக் கோட்பாடுகள், நோய் பரிசீலனை, உடல் அமைப்பு, உடலுறுப்பு இயக்கம், கருவின் தோற்றம் மற்றும் கருவின் வளர்ச்சி, வியாதி குறித்த சிகிச்சை அணுகுமுறைகள் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனுக்கு வியாதிகள் எப்படி தோன்றுகின்றது என்பதைக் குறித்து அவரின் ஆராய்ச்சியின் முடிவில், "வியாதிகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் வருகின்றது" என்பதை சாகர் தான் முதல் முதலாக உலகுக்கு சொன்னவர். பிரெஞ்ச் விஞ்ஞானி ´லூயி பாஸ்டி´யருக்கு முன்னாலேயே அதாவது 2.500-ஆண்டுகளுக்கு முன்பே சரகருக்கு தெரிந்திருக்கிறது. சரகர் மனிதனின் உடல் இயக்கம் பற்றி சொல்லும் போது மனிதனின் உடல் முழுவதும் இரத்தத்தில் இருப்பதில்லை. மனித உடல் முழுவதும் இருக்கும் இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டேயிருக்கிறது என்றார்.

17-ஆம் நூற்றாண்டில் ´வில்லியம் ஹார்வி´ என்னும் ஆங்கிலேய விஞ்ஞானி இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் என்று ஐரோப்பிய விஞ்ஞானம் சொல்கிறது. சரகருக்கு பிறகு கி.மு.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சுஸ்ருதர் "சுஸ்ருத ஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார். "சுஸ்ருத ஸம்ஹிதை" இந்திய அரசு பதிப்புத்துறை Scientiste என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் வெளியிட்டிருக்கிறது. சுஸ்ருதர் அறுவை மருத்துவ சிகிச்சையில் நிபுணராக இருந்திருக்கிறார். Scientiste நூலில் ஓரிடத்தில் சுஸ்ருதர் சொல்கிறார்: "அறுவை மருத்துவனுக்கு தைரியமும், சமயோசித சாமர்த்தியமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அறுவை மருத்துவன் கைகள் வியர்க்கக் கூடாது. கூரிய கத்தி முதலிய மருத்துவ ஆயுதங்களை கை நடுங்காமல் கெட்டியாக பிடித்திருக்க வேண்டும். அவனை நம்பி ஒப்படைத்திருக்கும் உயிரை சொந்த மகளை(னை)ப் போன்று கருதவேண்டும். "நெருக்கடி நேரங்களில் அறுவை மருத்துவன் சுபவேளை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. விபத்து அல்லது ஆபத்தான சுழலில் சிக்குண்டு கொண்டுவரப்படும் நோயாளியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற சிந்தனை வரவே கூடாது. எப்படியாவது உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்ற தீவிர செயல் இருக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

அடிமுடி சித்தர்

தினம் ஒர் சித்தர் வரலாறு.
அடிமுடி சித்தர்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மகான் ஒருவர் குடில் அமைத்து தமது சீடர்களுடன் தவம் செய்து வந்தார். இவரின் சீடர்களில் அடிமுடி சித்தரும்
ஒருவர். இவர் எளிமையான தோற்றம் கொண்டவர், சிவனடியார்களுக்கு
உதவுவதையே பணியாக கொண்டவர்.
பக்தர்களின் வசதிக்காக அடிமுடி சித்தர் தனது குருவிற்கு பணிவிடை செய்த காலம் தவிர மற்றநேரங்களில் பக்தர்களுக்காக கிரிவலப்பாதையை துப்புரவு செய்து வந்தார். இதனை கண்ட அருகில் உள்ள குடில்களில் இருந்த
சிவனடியார்களும், சில தொழிலாளர்களும் தாமாக முன்வந்து இந்த ஆன்மீகபணியை செய்துவந்தனர். ஆனால், தன்னுடன் இணைந்து பணியாற்றும் தொழிலளர்களுக்கு துப்புரவு பணிசெய்தஇடங்களில் இருந்து குப்பையை தன கரங்களில் எடுத்து
அளிப்பார், கைவிரித்து அவர்கள் பார்க்கும் பொழுது பணமாக இருக்கும்.
இவ்வாறாக சித்தர் பெருமானின் அற்புதங்கள் ஏராளம்.
திருவண்ணாமலையில் உள்ள அரியவகை மூலிகைகளை வ்கொண்டு தன்னை நாடி வரும் அன்பர்களின்நோய்களை குணமாக்கினார். தான் ஜீவசமாதி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த அவர் தனசீடர்களை அழைத்து "நான் தவத்தில் ஆழ்ந்தவுடன் என் உடலை தொடாமல் கால்
பெருவிரல் இரண்டிலும் வைக்கோல் கயிற்றால் கட்டி இழுத்து செல்லுங்கள்
எவ்விடத்தில் இக்கயிறு அறுந்துவிடுகிறதோ அங்கே என்னை அடக்கம்
செய்யுங்கள்" என்று கூறி ஜீவசமாதி அடைந்தார்.
பின்பு அவர் கூறியவாறு , வைக்கோல் கயிற்றால் கட்டி கிரிவலப்பாதையில் அவர் உடலை இழுத்து செல்லும்போது அடி அண்ணாமலை கவுதம
மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் கயிறு அறுந்ததால் சித்தரை அவ்விடத்திலேயே அடக்கம் செய்தனர். சிலநாட்களுக்கு பின்பு சித்தரின்
ஜீவசமாதி உரிய பராமரிப்பு இல்லாமல் பாம்பு புற்றாக மாறியது.
இந்நிலையில் கிரிவலம் வந்த சிவனடியார் ஒருவருக்கு சற்று தூரத்தில்ஜோதி வடிவில் ஓர் ஒளிப்பிழம்பு தென்ப்பட்டது. அவ்விடத்தை நோக்கி
சென்றபோது அங்கே மிகப் பெரிய பாம்பு புற்று ஒன்று இருந்ததை கண்டு
ஆச்சரியம் அடைந்தார். மேலும் அடிமுடி சித்தரின் மகிமைகளை அறிந்துகொண்ட அவர் அங்கேயே தனது இறைபணியை மேற்கொண்டார். சில
நாட்களுக்கு பிறகு இடியுடன் கூடிய பலத்த மழைபெய்தது.
இதுநாள் வரை இதுபோன்ற மழையில் கரையாத புற்று
அன்றுசற்றுசிறிதாக கரைந்துகொண்டிருக்கும்போது அப்புற்றில் இருந்து சுயம்பு லிங்கம்ஒன்று தோன்றியது. அச்சிவலிங்கத்தினை மூலவராக கொண்டு அங்கு சிறியகோவில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. அன்றிலிருந்து கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் உள்ள
இக்கோவிலுக்கு வந்து அன்பின் உருவான அடிமுடி சித்தரின் அருள் பெற்று
தங்களின் கர்மவினைப் பயனைபோக்கி நல்வாழ்வு பெற்றவர்கள் எண்ணி
லடங்காது. இன்னும் இங்கு வரும் பக்தர்கள் அடிமுடி சித்தரை நினைத்து
தியானம் செய்வதால் மன அமைதியும் நிம்மதியும் பெறுகின்றனர்.
ஜீவ சமாதி உள்ள இடம் ஆற்றல் நிரம்பிய இடமாகும்.அவர்களை பூரணமாய் வணங்கி பழங்கள், அச்சுவெல்லம், அவல், தாம்பூலம், வாசனை உடைய
மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவது சிறப்பு. பொதுவாக குருவை தேடுபவர்கள் மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதியில் வழிபாடு
செய்தால் குருவருள் கிட்டும். அவர்களே வழி காட்டுவர்.
திருச்சிற்றம்பலம்

தாயுமானவர்

தினம் ஒர் சித்தர் வரலாறு.

தாயுமானவர்

17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் சைவ வேளாளர் குலத்தில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெஜவல்லி அம்மாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமியான சிவபெருமான் மீது அதிகப் பற்றுக் கொண்டிருந்தார். ஒருநாள்... வழக்கம்போல் குழந்தை தாயுமானவர் தியானம் செய்ய உட்கார்ந்ததும், அவர் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது. இரவு நீண்ட நேரமாயிற்று. அப்போதும் குழந்தை வீடு திரும்பவில்லை. தந்தை குழந்தையைத் தேடிக்கொண்டு கோயிலுக்கு வந்துவிட்டார். தெய்வ நினைப்பில் தன்னை மறந்திருந்த பிள்ளையின் கையைப் பிடித்து எவ்வளவு நேரம்தான் இப்படிக் கோயிலிலேயே இருப்பாய்? வா வீட்டுக்கு! என்று சொல்லி அழைத்துப் போனார். தாயுமானவரின் தந்தையான கேடிலியப்பப்பிள்ளை, அப்போது அரசாண்டு வந்த விஜயரங்க சொக்கநாதன் என்ற அரசரிடம் பெருங்கணக்கராக வேலை செய்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் தாயுமானவர் சில காலம் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார். அவருடைய ஞானத் தெளிவு. பொறுப்பு, நேர்மை, ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர். விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைத் தாயுமானவருக்குப் பரிசாக வழங்கினார். அப்போது குளிர்காலம், மன்னரிடம் இருந்து சால்வையைப் பெற்ற தாயுமானவர். அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வழியில் வயதான பாட்டி ஒருத்தி குளிரில் நடுங்கியபடி எதிரில் வந்தாள். அவளைப் பார்த்ததும் தாயுமானவர். அம்மா! இந்தக் காஷ்மீர் சால்வை, இப்போது உங்களுக்குத்தான் அவசரத் தேவை. இந்தாருங்கள்! என்று சால்வையைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். தாயுமானவர் அவ்வாறு செய்ததை அறிந்த மன்னர் இந்தத் தாயுமானவர் நம்மை அவமானப்படுத்திவிட்டார் என்று நினைத்தார். அடுத்த முறை தாயுமானவரைப் பார்த்ததும் நான் உங்களுக்குத் தந்த விலை உயர்ந்த சால்வையை ஒரு பிச்சைக்காரக் கிழவிக்குக் கொடுத்துவிட்டீர்களே.... அது ஏன்? எனக் கேட்டார். அதற்குத் தாயுமானவர் மன்னா! என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு வந்த அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு இந்தச் சால்வை அவசியம் தேவைப்பட்டது. அதனால்தான் அதை அவளுக்குத் தந்தேன் என்றார். துயரத்தில் துடிக்கும் ஒரு ஜீவனை அம்பிகையாகவே கருதி, அந்தத் துயரத்தைத் துடைத்த தாயுமானவரின் மனப்பக்குவத்தை எண்ணி வியந்தார் மன்னர். இதேபோல் மற்றொரு சமயம் முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு அனைவரும் வியப்படைந்தார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த தாயுமானவர் இல்லற வாழ்க்கையை அறவே வெறுத்தார். இருப்பினும் தமையனின் வற்புறுத்தல் காரணமாக மட்டுவார்குழலி என்னும் குணவதியை மணந்து கனகசபாபதி எனும் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். சிறிது காலத்திற்கு பின் துணைவியார் இறந்து போகவே அதற்கு பின் இல்லறவாழ்வை வெறுத்து துறவறம் பூண்டார். திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மவுன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றார். வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர் தாயுமானவர். இவரின் அனுபவங்கள் அப்படியே பாடல்களாக வெளிப்பட்டன. 56 தலைப்புகளில் 1, 452 பாடல்கள் பாடியுள்ளார். தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடி வழிபட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்

நந்தி தேவர்

தினம் ஒர் சித்தர் வரலாறு.
நந்திதேவர்
பரம்பொருள் சிவபெருமானின் தலையாய சீடர்களில் என்பதில் முதலாமாண்டு நந்திதேவர்.
அதாவது சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோகா முனி ஆகிய எட்டு சீடர்களும் சைவ சமயத்தை பரப்புவதற்கு எட்டு வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.
ஆதி சித்தர் நந்திதேவர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான் ,நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப் பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.
அகத்தியர் அருளிய அகத்திய பூரண சூத்திரம் என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிசிக்கும் முறை கூறப் பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு:
பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.
நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது
சொல்லந்த மானகுரு நாதன்றானும்
சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா
நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா
தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.
– அகத்தியர்
மிகப் பழங்காலத்தில் இப்போதுள்ள தஞ்சை மாநகரை அடுத்துள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவயோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாருட்சனை என்ற சித்திரவதியும் நல்லறமாம் இல்லறம் நடத்தி வந்தனர். நீண்ட காலமாக அவர்களுக்கு மகப்பேறு கிட்டவில்லை. ஒரு நாள் சப்தரிஷிகளும் அவர்களுடைய ஆசிரமத்திற்கு வந்தனர். சிலாத முனிவர் அவர்களை உணவருந்தி விட்டு செல்லும்படி வேண்டினார். அந்த ரிஷிகள் எழுவரும் “ பிள்ளைகள் இல்லாத வீட்டில் உணவருந்த மாட்டோம் “ என்று கூறிச் சென்று விட்டனர். அதனால் சிலாதர் திருவையாறு திருத்தலத்தில் உள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி பஞ்சாட்சர தவம் செய்து வந்தார். அவரது தவத்திற்கிரங்கிய சிவபெருமான் அவர் முன் தோன்றி “ சிலாதரே “, விரைவில் உமக்கு கருவில் இருந்து பிறவாத திருமகன் ஒருவன் கிடைப்பான்.
மரணமில்லாத அத்திருமகன் எனக்குச் சமமானவன். என்னை தரிசிப்பவர்கள் யாவரும் அவனையும் வழிபடுவார்கள் என்று கூறி மறைந்தார்.
அக்கால முறைப்படி ஒரு சமயம் சிலாதர் யாகம் செய்ய பூமியைத் தோண்டியபோது பூமிக்கு அடியில் இருந்து நவரத்தினம் பதித்த தங்க பெட்டி ஒன்று கிடைத்தது. பெட்டியைத் திறந்ததும் அதில் சிலாதர் பேரொளி மயமான மான் மழுவேந்தி மதி குடியிருந்த முக்கண்ணன் திருவுருவையே கண்டார். அப்போது அசரீரி ஒன்று “ பெட்டியை மூடித்திற “ என்று கூற அவரும் அவ்வாறே பெட்டியை மூடித்திறந்து பார்த்தார். அதனுள் அருள் ஒளி நிறைந்த ஒரு ஆண் குழந்தை இருக்கக்கண்டார். நந்தி என்று பெயர் சூட்டி அக்குழந்தையை வளர்த்து வந்தார்.
குழந்தைக்கு வயது 7ஆனபோது ஆசிரமத்திற்கு வருகை தந்த மித்ரர், வருணர் ஆகிய இரு தேவர்களும் சிலாத முனிவரிடம் “ முனிவரே பார்த்து உங்கள் மகனுக்கு ஆயுட்காலங்கள் எட்டு ஆண்டுகள்தான் “ என்று கூறி மறைந்தனர்.
இதைக் கேட்ட நந்தி சிலாதரைப் பார்த்து “ தந்தையே நீங்கள் கவலைப்படாதீர்கள். காலகாலமான சர்வேஸ்வரன் திருவருளால் நான் நீண்டகாலம் வாழ்ந்திருப்பேன் எனக்கு தவம் புரியஅனுமதி கொடுங்கள் “ என்று கேட்டு தந்தையின் வாழ்த்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு வாழ கடுந்தவம் இயற்றத் தொடங்கினார்.
நந்திதேவர் சூரிய புஷ்கரணியில் கழுத்தளவு ஆழத்தில் நின்று கொண்டு கைகளிரண்டையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்ட வண்ணம் ஒரு முறைக்கு ஒரு கோடி ஜபம் வீதம் 8 கோடி ஜெபம் செய்து முடித்து அளவில்லாத வாழ்நாளைப் பெற்றதுடன் கைலையிலேயே சிவத்தொண்டு செய்யும் காவலனாக எந்நாளும் இருக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
வசிஷ்டரின் பேத்தி சுசையை திருமணம் செய்து நல்வாழ்க்கை வாழ்ந்தார்.
சிவன் கற்பித்த அகமிக் மற்றும் தாந்த்ரீக ஞானத்தின் தெய்வீக அறிவை பார்வதி தெய்வத்திடமிருந்து நந்தி பெற்றார்.
பிரோதஷ காலத்தில் சிவன் ஆலாகால விஷத்தை உண்டதால் மயங்கிய நிலையில் இருந்தபோது யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.கருடன் சிவதரிசனம் செய்ய வந்து அனுமதிக்காமல் இருந்ததால் விஷ்ணு வந்து சிவனிடம் கருடனை மண்ணிக்க வேண்டினார்.
பிரதோச காலங்களில் நந்தியை தரிசிக்க சகல காரியங்கள் நிறைவேறும்.
திருச்சிற்றம்பலம்.

சாய்

தினம் ஒர் சித்தர் வரலாறு

பெயர் சீரடி சாய்பாபா

சீரடிபாபாவின் தாய், தந்தை யார்? சொந்த ஊர் எது? இயற்பெயர் என்ன? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. பாபா 1854-ம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு வருகை புரிந்தார். ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை. சில ஆண்டுகன் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார். சாந்த் பட்டேல், பாபாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சில நாட்கள் தன் வீட்டிலேயே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார்.

சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சென்றபோது, பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து சென்றார். பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மகால்சாபதி என்னும் பூசாரி, அவரை சாமி என்று அழைத்தார். சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள். பாபா என்பது இந்தியில் `அப்பா’ என்று பொருள். இரண்டும் இணைந்து `சாய்பாபா’ என்ற திருப்பெயரே நிலைத்துவிட்டது. சாய்பாபா சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். சீரடியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்புச்சுவை மாறியது. சீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் “நானே அல்லா! நானே சங்கரன்! நானே ஸ்ரீகிருஷ்ணன்! நானே அனுமன்!” என்று கூறினார். ஆமாம்! அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்! சுமார் 12 ஆண்டுகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு யோகியைப் போல் வாழ்ந்தார் பாபா.

அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்தவர்கள் “அவர் ஒரு மகான்” என்று போற்றினார்கள். சிறுவயதில் பாபாவை முகம்மதியப் பெரியவர் ஒருவர் வளர்த்து வந்தார். அந்தப் பெரியவர் பாபா மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார். பாபாவை விட்டுச் சிறிது நேரம் கூட பிரிந்து இருக்க மாட்டார். அப்படியிருந்த அவர் ஒருநாள் திடீரென்று இறந்து விட்டார். ஆதரவு இல்லாத நிலையில் இருந்த பாபாவை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்துச் சென்று கோபால்ராவ் தேஷ்முக் என்பவரிடம் ஒப்படைத்து, இச்சிறுவனைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவனுக்கென்று யாரும் இல்லை என்றார். கோபால்ராவ் தேஷ்முக் திருப்பதி வெங்கடாசலபதி மீது தீவிர பக்தி கொண்டவர். மக்கள், இவரை மகா ஞானியாகவே கருதி போற்றி வந்தனர். குழந்தையான பாபாவைப் பார்த்த ஞானி கோபால்ராவ் தேஷ்முக்கின் கண்களுக்கு, சாட்சாத் வெங்கடாசலபதியே நேரில் வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பாபாவைத் தனது மகனைப் போலவே கருதி வளர்த்து வந்தார். பாபாவும் கோபால்ராவ் தேஷ்முக்கை தமது ஞானகுருவாக எண்ணி அவரிடம் வளர்ந்து வந்தார்.

பாபா ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட கோபால்ராவ் தேஷ்முக் தீவிர ஏழுமலையான் பக்தர். அதனால் பாபாவிற்கு குரு அருளுடன் வெங்கடேசப் பெருமானின் அருளும் கிடைத்தது. குருவும் சீடனும் மிகவும் அன்புடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் பேரும் புகழுடனும் இருந்து வந்தது அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் பொறாமை கொண்டனர். ஒரு சமயம் குருவும் சீடனும் தனிமையில் இருக்கும்போது பொறாமை கொண்ட ஒருவன் கல்லால் அடித்தான். அந்தக் கல் பாபாவின் தலையில் பட்டது. தலையில் அடிபட்டவுடன் ரத்தம் கொட்டத் தொடங்கியது. அந்தக் கொடியவன் அத்தோடு நிற்காமல் மறுபடியும் ஒரு கல்லை எடுத்து அடித்தான். இதைக்கண்ட கோபால்ராவ் தேஷ்முக் எங்கே மறுபடியும் கல் பாபாவின் மீது பட்டுவிடுமோ என்று அஞ்சி, பாபாவை மறைத்து முன்னால் வந்து நின்றார். அந்தக் கல் தேஷ்முக் மீது பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. “என்னால் தானே உங்களுக்குத் தொந்தரவு உண்டாகிறது. அதனால் என்னை தனியே செல்ல அனுமதி கொடுங்கள்” என்று குருவிடம் பாபா கேட்டார்.

இதைக் கேட்ட குரு மிகவும் மனம் கலங்கினார். அப்போது, “பாபா மனம் வருத்தப்படாதே! உன்னால் உலகத்திற்கு பல நன்மைகள் உண்டாகப் போகிறது. நானோ விரைவில் இந்தப் பூமியை விட்டு நீங்கிச் செல்லப்போகிறவன். அதனால் இறையருளால் எனக்குக் கிடைத்த சகல வரங்களையும் சக்திகளையும் உனக்கு தாரை வார்த்துத் தரப்போகிறேன்” என்று கூறினார். அவர் அதோடு நிற்காமல், உடனே அதை நிறைவேற்றும் பொருட்டு, அருகே இருந்த பசுவிடம் பாலைக் கறந்து வரும்படி கூறினார். குருவின் கட்டளையைக் கேட்ட பாபா, பசுவிடம் பாலைக் கறந்து தரும்படி பசுவின் சொந்தக்காரனைக் கேட்டார். “ஐயா, இப்பசு மலட்டுப்பசு. இதுவரை கன்று ஈனவே இல்லை. ஆனபடியால் இது பால் கறக்காது” என்று சொன்னான் பசுவுக்குச் சொந்தக்காரன். இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார். குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது.

பாபா பாலைக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார். பாலைப் பெற்றுக் கொண்ட குரு, “இன்று முதல், இந்த நொடி முதலே எமது எல்லா சக்திகளும் குரு கிருபையும் பரிபூரண மனநிறைவுடன் பாபாவிடம் கொடுக்கிறேன்” என்று கூறி பாபாவிடம் பாலைக் கொடுத்தார். அதே சமயம் பாபாவை கல்லால் அடித்த கயவன் தரையில் வீழ்ந்து இறந்தான். இதைக் கண்ட அவனது தோழர்கள் குருவின் கால்களில் விழுந்து, அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினார்கள். இதைக் கேட்ட குரு இவ்வாறு சொன்னார். “இனி எந்தச் சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார். அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர். பாபாவும் அவர்களைக் கனிவுடன் பார்த்தார். கருணா மூர்த்தியான பாபா தனது குருநாதரின் காலடிபட்ட மண்ணை எடுத்து பிணமாகக் கிடந்தவன் மேல் தூவினார். என்னே அதிசயம்! இறந்து கிடந்த அவன் உயிர் பெற்று எழுந்தான். எழுந்தவன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக பாபாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.

கோபால் ராவ்தேஷ்முக் ஸ்ரீவெங்கடேசப் பெருமானை வேண்டி, தாம் முன்பே கூறியதுபோல தவயோகம் செய்தார். தமது உயிர் பிரிவதற்கு முன்பாக பாபாவை மேற்குத் திசையில் தேச சஞ்சாரம் செய்ய வேண்டினார். தமது குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி வந்து கொண்டு இருந்த பாபா சீரடி கிராமத்தை அடைந்தார். பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று சீரடியில் வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது. பல ஞானிகள் வந்து பாபாவைச் சந்தித்தனர். அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினார். பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணெய் கொடுத்து வந்தனர்.

ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர். பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. பாபாவைத் தேடி பக்தர்கள் வரத்தொடங்கினர். ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக்கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார். பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா. தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார். சிரிக்கச் சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார். பாபா பஜனை யையும், பாடல்களையும் விரும்பினார். பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும் படி உற்சாகமூட்டினார். சில வேளைகளில் பாடல்களுக்கு தக்கபடி பாபா நடனமாடினார். ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறுக்காதவர் பாபா. ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார். தொழு நோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார். பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார். பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார். பாபா மதங்களைக் கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார்.

மக்கள் அவரை சாய் மஹராஜ் என்று போற்றி கொண்டாடினார். பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை)வும் ஸபூரி (பொறுமை)யும் ஆகும். தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் ஊதி (விபூதி)யையே பிரசாதமாகத் தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா. வாழ்வில் பொறுமையும், தன்மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார். துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. பாபா தன் பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார். அவர் 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் நான் தன் ஸ்தூல உடலை பிரிந்தார். உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா, தான் கூறியபடியே தன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சீரடிபாபாவை வழிபடும் பேறு கிடைக்கிறது. உலகம் முழுவதும் இருந்து மக்கள் கூட்டம் சாயிபாபா இருக்கும் இடம் நோக்கி வருகிறார்கள்.

திருச்சிற்றம்பலம்

சுந்தரானந்தர்

தினம் ஒர் சித்தர் வரலாறு

பெயர் சுந்தரானந்தர்

இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார். இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லற வாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. நாட்டில் சுந்தரானந்தர் எனும் ஒருவர் மாயாவி போல் மாயங்கள் நிகழ்த்துவதாக அமைச்சர் வாயிலாக கேள்விப்பட்ட மன்னன் அபிஷேக பாண்டியன், அரசனுக்கே உரிய செருக்கோடு, சுந்தரானந்தரை அவைக்கு அழைத்து வரச்சொல்லி சேவகர்களை அனுப்பிவிட்டான். ஆனால், அது எத்தனை பிழையான செயல் என்பதை அவன் எண்ணிப்பார்க்கவில்லை. செருக்குகள் இருவிதம். ஒன்று பிறர் அறியும் விதம் வெளிப்படும் கர்வச் செருக்கு. இன்னொன்று, அறியாவண்ணம் ஒளிந்திருக்கும் அதிகாரச் செருக்கு. இரண்டுமே தவறானது என்பதை காலத்தால் உணர்த்துபவர்களே சித்தர்கள்.

பாண்டிய மன்னனிடம் அதிகாரச்செருக்கிருந்தது. கூடவே அவனுக்கும் மேலானவர்கள் பூமியில் இல்லை என்கிற ஓர் எண்ணமும் இருந்ததால் அவன் பணிவாக நடந்திட வழியே இல்லாமல் போய்விட்டது. ஆலயத்தின் மிசை தெய்வத்தின் முன் பணிவாக நடந்து கொண்ட போதிலும் அங்குள்ளது விக்கிரக சொரூபம் தானே?எனவே, உயிருள்ள எவர்முன்னும் அவன் பணிவாக நடந்து கொள்ள வாய்ப்பேயில்லாததால் அவனுக்குள் ஒரு 'நான்' அகங்காரத்தோடு எப்பொழுதும் திகழ்ந்தபடி இருந்தது. அதற்கு அந்த சித்த புருஷரும் ஒரு பாடம் கற்பிக்கத் தயாரானார். தன் எதிர்வந்து நின்ற சேவகர்களை, என்ன சேதி என்பது போல பார்த்தார். ''உங்களை எங்கள் அரசர்பிரான் காண வேண்டுமாம்.'' ''அதற்கு..?'' ''நீங்கள் எங்களோடு அவைக்கு வர வேண்டும்.'' ''இது என்ன வேடிக்கை? ஆற்றில் குளிக்க ஒருவர் ஆசைப்பட்டால் அவரல்லவா ஆற்றுக்குச் செல்லவேண்டும். ஆற்றை வெட்டி அரண்மனைக்கு இட்டுச் செல்வீர்களோ நீங்கள்?'' ''அது... அது... அதெல்லாம் எதற்கு? அவர் அரசர். இந்த நாட்டின் தலைமகன்.. இது அவர் உத்தரவு.'' ''அந்த உத்தரவுக்கு, தன்னையறியாத நீங்கள் வேண்டுமானால் மடங்கிப் போங்கள். எனக்கு உம் அரசரைக் காண்பதால் ஆகப்போவது எதுவுமில்லை. 'நான்' என்கிற மமதை உள்ளோரால் ஆகிவிடப் போவதும் எதுவுமில்லை. அற்ப மனிதப் பிறப்பாக பிறந்து விட்டோமே என்னும் குழப்பம் மிக்க உனது அரசனால் ஆனதும் எதுவுமில்லை. மூன்று காலங்களிலும் இருந்தும் இல்லாத அவனை நான் காண்பது என்பது சித்தத்துக்கும் அழகில்லை. போய்ச் சொல் போ...'' ''மாயாவியே... நீ சொன்னதை நான் அப்படியே போய் சொன்னால் உம்கதி என்னாகும் தெரியுமா?'' ''என் கதி மட்டுமல்ல.. உன் அரசர் கதியும் இப்படி நான் சொன்னால்தான் வரலாறாகும்! போய்ச் சொல். மேற்கொண்டு நீ ஏதாவது பேசினால், சதாசர்வ காலமும் பேசியபடி இருக்கும் கிளியாக உன்னை மாற்றி விடுவேன். அரசனுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தெரிந்த உனக்கு, ஆண்டியும் பெரியவனென்று தெரிய வேண்டும். ஓடிவிடு...'' சுந்தரானந்தர் போட்ட போடு _ அந்த சேவகர்கள் திரும்பிச் சென்றனர்.

மன்னன் அபிஷேக பாண்டியனும் அவர்கள் திரும்பி வந்து சொன்னதை எல்லாம் கேட்டு முதலில் அதிர்ந்தான். பிறகு வியந்தான். வார்த்தைக்கு வார்த்தை அவர் சொன்னதையெல்லாம் அசை போடத் தொடங்கினான். 'ஆனது எதுவுமில்லை, ஆகிவிடப் போவதுமில்லை, ஆவதும் ஏதுமில்லை' என்று முக்கால கதியில் சுந்தரானந்தர் செய்த விமர்சனம் நெஞ்சக் கூட்டை திருகியபடியே இருந்தது. இதனாலோ என்னவோ அவரை எதிர்த்து ஆணைபிறப்பித்து எதையும் செய்யவே தோன்றவில்லை. ஒரு மனிதன் முதல்முறையாக அபிஷேக பாண்டியன் மனதுக்குள் விசுவரூபமெடுக்கத் தொடங்கிவிட்டான். நின்றால், நடந்தால், படுத்தால், புரண்டால் சுந்தரானந்தர் நினைப்புதான். இதே குழப்பத்தோடு ஒரு நாள், ஜடம்போல ஆலவாய் அழகன் திருக்கோயிலுக்குள் மன்னன் சென்ற சமயம், சுந்தரானந்தரும் ஆலயத்துக்குள் பிரவேசித்திருந்தார். சாதாரணமாக எல்லா ஆலயங்களையும் கற்பீடங்களே தாங்கி நிற்கும். ஆனால், ஆலவாய் அண்ணலான சொக்கநாதரின் ஆலயத்தை நாற்புறமும் யானைகள் தாங்கி நிற்கக் காணலாம் அதுவும் வெண்ணிற யானைகள்! வெண்ணிற யானை என்றாலே இந்திரன் வந்துவிடுவான். இந்திரன் அனுதினமும் பூஜிக்க, சிவ நெறியை நாட்டில் நிலைப்படுத்த, சாப விமோசனமாக கட்டிய திருக்கோயிலல்லவா அது? அபிஷேக பாண்டியனும் அவன் வழி வந்தவனல்லவா? அண்ணலின் தரிசனம் முடிந்து பிரதட்சணம் வரும் சமயம், சுந்தரானந்தரும் எதிரில் வந்தார். அதுவும் அப்பிரதட்சணமாய்....! அப்பொழுதுதானே இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவும் தோது ஏற்படும்? அதிலும் அரசன் பிரதட்சண உலா வரும்போது கட்டியங்காரர்கள் முன்னாலே சென்று பராக் சொல்லி எல்லோரையும் ஓரம் கட்டிவிடுவார்கள். ஆயினும் அப்பிரதட்சணமாக வரும் சுந்தரானந்தரை ஓரம்போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. காரணம், அவரது தேஜஸ். அடுத்து, பார்க்கும் பார்வை அப்படியே ஆளை நடுக்கி விடுகிறதே..! அபிஷேக பாண்டியனுக்கு, தனக்கெதிரில் தனக்கிணையாக அவர் நடந்து வருவதன் பொருட்டு கோபம் பீறிட்டது. அதிகார கோபமும் தவஞான கோபமும் முட்டிக் கொண்டன. ''நீர்தான் மாயங்கள் நிகழ்த்தும் அந்த மாயாவியோ?'' அபிஷேக பாண்டியனே கேள்வியைத் தொடங்கினான். ''தவறு பாண்டியனே.. சித்தசாகஸங்கள் மாயங்கள் அல்ல. மாயங்கள் அற்பமானவை. சித்த சாகஸங்கள் ஜம்புலனைச் சுருக்கி உள்ளளியைப் பெருக்கி பஞ்சபூதங்களை உணர்ந்து பிரபஞ்ச நியதி அறிந்து அதற்கேற்ப செயல்படுத்தப்படுபவை... முயன்றால் நீயும் இதை சாதிக்கலாம். இதோ நிற்கிறதே உன் ஏவலர் வரிசை... இவர்கள் கூட சாதிக்கலாம்.'' ''நம்ப முடியாது இதை... அந்த இறைவன், மனிதனை ஒரு வரம்புக்கு உட்பட்டே படைத்திருக்கிறான்...'' 'உண்மைதான். ஆனால் அந்த வரம்பு, கைலாயம் என்னும் எல்லையை ஒருபுறமும், வைகுந்தம் என்னும் எல்லையை மறுபுறமும் தொட்டு நிற்பது. அதை உணர்ந்து கைலாயத்தை நீ தொடும்போது, நீயே கைலாயபதி.'' ''எதை வைத்து இதை நான் நம்புவேன்?'' ''வேண்டுமானால், இங்கேயே அதற்கான பரிட்சையை வை. மாயம் என்றால் இல்லாததை இருப்பதுபோல உருவாக்குவது. அது வெறும் காட்சி. அவ்வாறு இல்லாத ஒரு சாகஸத்துக்கு நீயே அடி கோலுவாய். நானும் உனக்குப் புரியவைப்பேன்...'' _சுந்தரானந்தர் அவ்வாறு சொன்னதுதான் தாமதம், அபிஷேக பாண்டியன் தீர்க்கமாய் சிந்தித்தான். அவன் நின்ற இடத்திற்கு அருகில்தான் இருந்தது, ஆலய விமானத்தை தாங்கியபடி இருக்கும் அந்தக் கல் யானை. நிதர்சனமாய் தெரிவது... மாயபிம்பம் அல்ல அது! ''தவசீலரே... இதோ கல் யானை. மானுட சக்தி, இறை சக்தி வரை செல்லக் கூடியது. அதுவே இறையாகவும் உள்ளது என்று கூறினீரே, இந்தக் கல் யானையை உயிர் யானையாக்குங்கள் பார்ப்போம்.... அப்பொழுது நான் நம்புகிறேன்.''_ அபிஷேக பாண்டியன் அப்படிச் சொன்ன நொடி, சுந்தரானந்த சிவத்தின் முகத்தில் ஒரு புன்னகை. பாண்டியன் பரிவாரத்தில் ஒருவன், மன்மதன் போல கரும்போடு தென்பட்டான். அவனும் அருகில் வந்தான். கரும்பும் பாண்டிய அரசன் கைமிசை சென்று சேர்ந்தது.

பாண்டியனே.. அந்தக் கல் யானை அருகே செல். உன் மனது அந்த ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூற, மனமுருகி பிரார்த்தனை செய். என் பொருட்டு இன்று கல் யானை உயிர் யானையாகும். நாளை முற்றாய் நீ உன்னையுமறியும்போது உன்னாலுமாகும்..'' _ என்ற சுந்தரானந்தர் அக்கல்யானையை நோக்க, அடுத்த நொடி, அந்த யானைக்கு உயிர் வந்தது. அதன் தும்பிக்கை அசைந்து நீண்டு பாண்டியன் வசம் இருந்த கரும்பைப் பற்றி உண்ணவும் தொடங்கியது. அபிஷேக பாண்டியன் தன் கண்களையே நம்பாமல் கசக்கி விட்டுக் கொள்ள, முழுக்கரும்பை சாறொழுகத் தின்ற அந்த யானை, பாண்டியன் கழுத்து முத்துமாலையையும் எட்டிப் பறித்தது. பாண்டியன் ஆடிப்போனான். அவன் மேல் மனதும் ஆழ்மனதும் ஒருசேர ஒரே கதியில் உழப்பட்டதில் அப்படியே சுந்தரானந்தர் பாத கதி விழுந்தான் கண்ணீர் விட்டான். பரவசத்தில் சிலிர்த்தான். சுந்தரானந்தரும் புன்னகை பூத்தார். சூழ்ந்திருப்பவர்களும் காணக்கிடைக்காத காட்சியைக் கண்டதில் பரவச உச்சிகளில் இருந்தனர். அதன்பின், தனக்கு வம்சம் விளங்கப் பிள்ளைப்பேறு வேண்டினான் பாண்டியன். அருளினார் இறைமுனி. யானையும் பறித்த முத்து மாலையை திரும்பக் கழுத்தில் சூட்டி மீண்டும் கல்லாகி நின்றது. தவசக்தி எத்தகையது என்று நிரூபித்துவிட்ட பூரிப்புடன் அனைவர் கண் எதிரில், ஆலவாயன் திருச்சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர். பாண்டியன் நெக்குருகிப் போனான். வேதங்கள் தந்ததும் இறையே.. அதை அசுரர்கள் பாதாளம் கொண்டு சென்றபோது மீட்டு எடுத்து வந்து தந்ததும் இறையே.. வாழவழி காட்டிய இறை, அதனுள் இறையாகவும் ஆகும் வழி காட்டிட, சித்தவுருவினனாகவும் நேரில் வந்தது. அன்று நேரில் வந்த அந்த சிவம், இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடப்பக்கத்தில் கல்யானைக்கு அருகிலேயே கோவில் கொண்டு அமர்ந்துள்ளது.

கல்லுக்கே உயிர் கொடுத்த அந்த ஈசன், கல்லாய் கனக்கும் நமது ஊழ்வினைக் கர்மங்களையும் நீக்கி அருள்புரிந்திடவே கோயில் கொண்டுள்ளான். ஆறுநிறைய தண்ணீர் ஓடலாம். ஓட்டைப் பாத்திரங்களால் அதை நாம் நமக்கென கொள்ள முடியாது. கொள்ளத் தெரிந்துவிட்டாலோ தாகமே நமக்குக் கிடையாது. இந்த சுந்தரானந்த சித்தரும் அப்படித்தான். இவரின் பெருங்கருணையை, நற்பாத்திரமாக நாம் இருந்தால், வாரிக் கொண்டு வந்துவிடலாம். அசையாததை எல்லாம் அசைக்கலாம்... மன்மதன் போல எழிலுருவில் இவர் வந்ததால், மலர்கள் இவருக்கு மிகப் பிடித்ததெனக் கருதி 'பூக்கொட்டாரம்' போடுவது என்னும் ஒரு மலர் வழிபாடு இன்று வழக்கில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை ஆலய நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. எனவே, அணுகச் சுலபமான இந்த சித்தனை அணுகுங்கள். அப்படியே சித்தகதியை அடைய சிலராவது முயலுங்கள்.

மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில், உலக நாயகனான சோமசுந்தரக்கடவுள் சித்தர் வடிவம் எடுத்து மதுரையின் எல்லாப்பகுதியையும் சுற்றி வருகிறார். அப்போது அவர் கிழவனைக் குமரனாக்கியும், ஆணைப் பெண்ணாக்கியும், இரும்பை தங்கமாக்கியும், முடவனை நடக்கவைத்தும், ஊமையை பேசவைத்தும், ஊசியை நிறுத்தி அதன் மேல் கால் பெருவிரலால் ஆடியும் பல சித்து விளையாட்டுக்களை செய்து காட்டி மதுரை மக்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த செய்தியை கேள்விப்பட்ட அபிஷேகப் பாண்டியன் இவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினான். வந்தவர்களும் இவரது சித்து விளையாட்டை பார்த்து பிரமித்துப்போய் விடுகின்றனர். அழைக்கச்சென்றவர்கள் வராமல் போகவே, தன் அமைச்சரை அனுப்பி சித்தரை அழைக்க அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனால் எனக்கென்ன பயன், என்னைப்பார்க்க வேண்டுமானால் அரசனை வரச்சொல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிடுகிறார்.மன்னர் தன்னைப்பார்க்க வருவதை அறிந்த சித்தர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று வாயு மூலையில் யோக நிஷ்டையில் அமர்ந்து கொள்கிறார். (இவர் அமர்ந்த இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னதிக்கு அருகில் உள்ளது) அரசனுடன் வந்த ஆட்களால் சித்தரின் நிஷ்டையை கலைக்க முடியவில்லை. கலைக்க சென்றவர்களில் கைகள் துõக்கிய நிலையிலேயே நின்றுவிட்டது. அதிர்ந்து போனான் அரசன்.சித்தரிடம் பணிவுடன் ""சித்தர் பெருமானே தாங்கள் இப்படி அமர்ந்து கொண்டால் எப்படி? தங்களுக்கு ஏதாவது தேவையென்றால் கேளுங்கள். அத்துடன் தாங்கள் உண்மையிலேயே சித்தர் தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது'' என்று கூறினான். சித்தர் உருவிலிருந்த சோமசுந்தரர், நிஷ்டையிலிருந்து கண்விழித்து அரசனே "" நான் தான் அனைத்தும், நானே ஆதியும் அந்தமும், நான் எங்கும் சஞ்சரிப்பவன், தற்போது இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டை காட்டி அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமோ அதையெல்லாம் கொடுக்கும் என் பெயர் "எல்லாம் வல்ல சித்தர்' என்றார். ஆனாலும் நம்பிக்கையில்லாத அரசன், ""தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல்யானையை தின்ன செய்யுங்கள்'' என்றான். சித்தரும் அமைதியுடன் அருகிலிருந்த கல் யானையை பார்த்து கண் அசைக்க யானை சடாரென அரசனிடமிருந்த கரும்பைத்தின்றது.அத்துடன் அரசனின் கழுத்திலிருந்த மாலையையும் பறித்தது. பதறிய சேவகர்கள் சித்தரை அடிக்கவந்தனர்.

சித்தரின் சைகையால் அடிக்க வந்தவர்கள் சித்திரம் போல் ஆனார்கள். உண்மை நிலையறிந்த அரசன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி, எம்பெருமானே அறியாமல் செய்த பிழையை பொறுத்து, மன்னித்தருள வேண்டும். சித்தரும் மன்னித்து, நான் இங்கேயே வீற்றிருந்து மக்களுக்கு வேண்டியதை வழங்குகிறேன், அத்துடன் உனக்கு தேவையானதை கேள் என்றார். இறைவா எனக்கு புத்திர பாக்கியம் தந்தருள வேண்டும் என்றான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால் அரசனுக்கு விக்கரமன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. இப்படி இறைவனே எல்லாம் வல்ல சித்தராக (இவரை சுந்தரானந்தர் என்றும் அழைப்பர்) அவதரித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருந்து என்ன வேண்டினாலும் வாரி வழங்கி கொண்டிருக்கிறார். தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டவர்கள் சித்தருக்கு பூக்கூடாரம் அமைத்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர். வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அகமுடையார் குலத்தில் பிறந்தார் என போகர் தெரிவிக்கிறார். யோகத்தில் நீண்ட காலம் அமர்ந்திருந்து சித்துக்கள் பல புரியும் ஆற்றல் பெற்றுள்ளார். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார். இவரின் குரு சட்டை முனி என்று சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.

திருச்சிற்றம்பலம்

அகப்பேய் சித்தர்

தினம் ஒர் சித்தர் வரலாறு.
அகப்பேய்சித்தர்
மனத்தைப் பேய் என உருவகித்துப் பாடியதால்அகப்பேய்ச் சித்தர்எனப் பெயர் பெற்றிருக்கலாம். அகம்+பேய்+சித்தர் = மனமாகிய பேயை வென்று சித்தியடைந்தவரென இவருக்குக் காரணப் பெயராக அமைந்துள்ளது. அகப்பேய்ச் சித்தர் நாயனார் சாதியைச் சேர்ந்தவர். துணி வணிகஞ் செய்து பிழைத்து வந்தார் என்று போக முனிவர் கூறுகின்றார். வேட்டி, புடவை முதலான துணிமணிகளை வீடு வீடாகச் சென்று விற்கும்போது எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்திருப்பார். அவர்களின் ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள் அவர் மனத்தைத் தொட்டன. மனிதன் துன்பம் இல்லாமல் வாழ முடியாதா? இரவு பகலாகச் சிந்தித்தார். அவ்வாறு பாதிக்கப் படுகிறவர்கள் ஏதாவது விமோசனம் காண வேண்டும் என்று நினைத்தார். தம் மனத்தை அடக்கிட நினைத்தார். அப்போது ஏ! என் அகமே! ஆசையால் ஆடுகிறாய்; ஆணவத்தால் ஆடுகிறாய் ; பாசத்தால் ஆடுகிறாய் ; வேஷத்தால் ஆடுகிறாய் இப்படிப் பேயாட்டம் ஆடுகிறாயே ! அடங்கிக் கிடக்க மாட்டாயா? என்று குமுறுகிறார்.
நஞ்சுண்ண வேண்டாமே - அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சம் அலையாதே - அகப்பேய்
நீ ஒன்றும் சொல்லாதே.
என்று பாடி, மனம் பேய் போன்று அலைவதைத் தடுத்து நிலைநிறுத்தி விடு என்று அறிவுரை கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர். இவரது நூல்களுள் வாத வைத்தியம், யோக ஞானப் பாடல்கள் பரிபாஷைகளைப் பெற்று, கடினமானதாக அமைகின்றன. (பரிபாஷை :ஒவ்வொரு துறையிலும் அதற்கே உரிய கலைச்சொற்கள் உண்டு. அவற்றைப் பரிபாஷை என்று குறிப்பிடுவார்கள்.) மேலும் அகப்பேய்ச் சித்தர் பாடல் 90, பூரண ஞானம் 15 என்ற நூல்கள் யோக ஞான சாஸ்திரத் திட்டு ஏழாம் பாகத்தில் (தாமரை வெளியீடு) உள்ளன. அகப்பேய்ச் சித்தர் திருவையாற்றில் சித்தியடைந்தார் என்பர். திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார்.
இந்த மகான் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளாசையை தேடி அலைந்தது. மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக்கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு வியாசர் மறைந்தார். மனிதர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும், தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் “அகப்பேய் சித்தர் பாடல்கள் 90” என்ற நூலை இயற்றினார். “அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான்”, என்பது இவரின் வாக்கு.
இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை:
அகப்பேய் சித்தர் பாடல் – 90
அகப்பேய் பூரண ஞானம்.
இவர் சித்தியடைந்த திருத்தலம் : - திருவையாறு.
தியானச்செய்யுள்
இலை உடையுடன் கலை உருவாய்
காட்சி தரும் காரியசித்தி சுவாமியே
மாறாத சித்தியை மரப்பொந்தினில்
பெற்ற மங்காச் செல்வரே
அசைகின்ற புத்தியை
இசைக்கின்ற சித்தியால்
இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே.
தன்னை அறியவேண்டும் - அகப்பேய்!
சாராமல் சாரவேண்டும் பிள்ளை
அறிவதெல்லாம் அகப்பேய்!
பேய் அறிவு ஆகும் அடி
ஒப்பனை அல்லவடி - அகப்பேய்!
உன் ஆனை சொன்னேனே!
அப்புடன் உப்பெனவே - அகப்பேய்!
ஆராய்ந்திருப்பாயே!
கருத்து: தன்னை அறியவேண்டும் - தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும். நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறைவன் இருக்கிறார். தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர்.
திருச்சிற்றம்பலம்.