Tuesday, 1 December 2020

புத்தக படிப்பு

வாசிப்பு மனநிலை!

- எஸ். இராமகிருஷ்ணன்

ஒருவரை மலையேற வைப்பது கூட எளிதானதுதான். அதை விடவும் கடினமானது புத்தகம் படிக்க வைப்பது. மக்கள் ஏன் புத்தகங்களை வெறுக் கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதற்குப் படிக்க வேண் டும்? புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது? வெறும் காலவிரயம்தான் என படித்த தலைமுறைகூட ஆழமாக நம்புகிறது என்பதுதான் காலக் கொடுமை!

எனது நண்பர் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, தானே 100 புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீடு வீடாகப் போய் இலவசமாக புத்தகம் கொடுத்து படிக்க வைக்க முயன்றார்.

அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்குப் போய் அவர் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறார். கதவை திறந்த ஆள், ‘யார் என்ன..’ என எதையுமே கவனிக்காமல் ‘வேண்டாம் போ’ எனச் சொல்லி கதவை மூடிவிட் டார். அடுத்த வீட்டில், ‘இதை வெச்சிட்டு என்ன செய்றது? யாரும் படிக்க மாட்டாங்க; வேற ஏதாவது கிஃப்ட் இருந்தா குடுங்க…’ என ஒரு பெண் கேட்டிருக்கிறார்.

இன்னொருவர் வீட்டில், ‘புக்ஸ் எல்லாம் வேஸ்ட் சார். நாங்க நியூஸ் பேப்பர் கூட வாங்குறதில்லை…’ எனச் சொல்லி துரத்தியிருக்கிறார்கள். இப்படியாக 5 மணி நேரம் பல்வேறு குடியிருப்புகளில் ஏறி, இறங்கியும் அவரால் 10 புத்தகங்களைக் கூட இலவசமாக கொடுக்க முடியவில்லை.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும்போது அதன் காவலாளி அவரை அழைத்து, தனது பேத்தி படிக்க ஒரு புத்தகம் வேண்டும் எனக் கேட்டு வாங்கியிருக்கிறார். அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் புத்தகத்தைக் கேட்டு வாங்கவே இல்லை.

நண்பர் விரக்தியோடு சொன்னார்: ‘‘அப்பா அம்மா புக்ஸ் படிச்சாதான் பிள்ளைகள் படிப்பாங்கன்னு நினைச் சேன். பெரியவங்களைப் படிக்க வைக் கிறது ரொம்ப கஷ்டம். எதையும் படிச்சிரக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்காங்க. அப்படியே பிள்ளை களையும் வளர்க்குறாங்க, இப்படி இருந்தா இந்த நாடு உருப்படவே உருப்படாது!”

இதுதான் நிதர்சனம். புத்தகம் படிக்க வைக்க நாடு தழுவிய ஓர் இயக்கம் இன்று அவசியமான தேவையாக உள்ளது.

மழலையர் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்குப் போயிருந்தேன். நிறையப் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் கூட எந்த எழுத்தாளரையும் பற்றி அறிந்திருக்கவில்லை. எதைப் படிப்பது? எப்படி புத்தகங்களை தேர்வு செய்வது என்பதைப் பற்றியதாக அன்றைய கலந்துரையாடல் நடை பெற்றது.

அந்த நிகழ்வில் ‘மார்டிமர் ஜே அட்லர்’ எழுதிய ’ஹவ் டு ரீட் எ புக்’ (How to Read a Book) என்ற ஆங்கிலப் புத்தகம் குறித்துப் பேசினேன். 1940-ம் ஆண்டு வெளியான புத்தகம் அது.

‘புத்தகம் படிப்பது எப்படி?’ என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டது அந்தப் புத்தகம். நாம் ஏன் படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் எவை? அதை எப்படி அகற்ற முடியும் என்பதற்கான கையேடு போல இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

மேலோட்டமாக வாசிப்பது, ஆழ்ந்து வாசிப்பது என இரண்டுவிதமான வாசிப்பு முறைகள் உள்ளன. பொதுவாக செய்தி களை, தகவல்களை மேலோட்டமாக வாசிக்கிறோம். தீவிரமான கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், அறிவியல் சிந்தனைகளை ஆழ்ந்து வாசிக்கிறோம்.

பொழுது போவதற்காக வாசிப் பது ஒருவிதம். அறிவையும், அனுப வத்தையும், ஆளுமையையும் வளர்த் துக்கொள்ள வாசிப்பது இன்னொரு விதம். வாசிப்பின் குறிக்கோள்தான் எதை வாசிக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது.

எந்த ஒன்றையும் கற்றுக்கொள் வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, ஆசான் வழியாக கற்றுக்கொள்வது. மற்றது, நாமாக கற்றுக் கொள்வது. இந்த இரண் டும் சிலவேளைகளில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். நாமாக ஒன்றைக் கற்றுக்கொள்வதுதான் வாசிப்பின் முதல் செயல். புத்தகம் ஓர் அரூப ஆசிரியன். அதில், குரல் மட்டுமே ஒலிக்கும்; ஆளைக் காண முடியாது.

ஆரம்ப நிலை வாசிப்பு, தேர்ந்த வாசிப்பு, பகுத்தாயும் வாசிப்பு, முழுமையான ஆழ்ந்த வாசிப்பு என வாசிப்பில் நான்கு நிலைகள் இருக்கின்றன.

அறிவியல் புத்தகங்களை எப்படி படிப்பது? தத்துவப் புத்தகங்களைப் பயில்வது எப்படி? புனைக் கதைகள், நாவல்கள் மட்டும் ஏன் விரும்பிப் படிக்கப்படுகின்றன? கவிதைகள் ஏன் எளிதில் புரிவதில்லை? வரலாற்று நூல்களை வாசிக்க ஏன் சிரமமாக உள்ளது… என்பதை குறித்து, தனித் தனி கட்டுரைகளாக விரிவாக எழுதி யிருக்கிறார் மார்டிமர்.

எந்தப் புத்தகம் குறித்தும் முன்முடிவு கள் தேவையற்றவை. புத்தகத்தைத் தேர்வு செய்வதற்கு அது குறித்த அறிமுகமும் பரிந்துரைகளும் மிகவும் அவசியம். ஆரம்ப நிலை வாசகர்கள் 50 பக்கங்களுக்குள் உள்ள புத்தகம் ஒன்றை தேர்வு செய்து படிக்கப் பழகி னால், அதை முழுதும் படித்து முடித்து விடுவார்கள். அதை விடுத்து 1,000 பக்க புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால், அதை முடிக்க முடியாததோடு புத்தகம் படிப்பதன் மேலேயே வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

ஜப்பானியர்கள் எதையும் படக் கதை வடிவில் படிக்கிறார்கள். இதனால் படிப்பது எளிமையாவதோடு வேகமாக வும் படிக்க முடிகிறது. கோட்பாடுகள் சார்ந்தப் புத்தகங்களைப் படிக்கும் முன்பு கோட்பாடுகள் யாரால், எப்படி, எதற்காக உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்று நூலை வாசிக்கும் முன்பாக வரைபடங் களைத் துணைக்குக் கொள்ள வேண்டும். அறிவியல் சிந்தனை களைப் புரிந்துகொள்ள ஆதார விஷயங்கள் தெரிந்திருக்க வேண் டும். கவிதையை ரசிக்க கற்பனை வேண்டும்... என படிப்பதற்கு நம்மை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் மார்டிமர் வலியுறுத்துகிறார்

ஒரு புத்தகத்தை எப்படி படித்தால் நினைவில் நிற்கும்? படித்த விஷயங் களை எப்படி குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது என்பதற்கும் உதவிக் குறிப்புகள் கொடுக்கிறார் இவர்.

மகாபாரதம், ராமாயணம், ஒடிஸி போன்ற இதிகாசங்களை வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம். ஒரு நாவல் அல்லது கவிதைப் புத்தகம் வாசிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக் கூடியது.

இதிகாசங்களை வாசிப்பது எளிதான தில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டது. ஆகவே பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம். இதி காசத்தின் கட்டமைப்பு மிக முக்கிய மானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும்போது விரிந்த அனு பவம் தரக் கூடியது. ஆகவே, அந்தக் கட்டமைப்பின் ஆதாரப் புள்ளியை அறிந்துகொள்வது அவசியமானது.

இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோற்றம் கொண் டது. அதற்கு நிறைய உள்அடுக்குகளும், குறியீட்டு தளங்களும், உபகதைகளும், தத்துவ விசாரங்களும் இருக்கின்றன. அதைப் புரிந்துகொண்டு படிக்கும்போது தான் முழுமையான வாசிப்பு சாத்தியப்படும்

வாரம் ஒரு புத்தகம். மாதம் நான்கு புத்தகம்… என்ற இலக்கோடு தொடங் குங்கள். நிச்சயம் அது வளர்ச்சியடையும் என்கிறார் மார்டிமர். எனது சிபாரிசும் அதுவே!

- எஸ். இராமகிருஷ்ணன்,
எழுத்தாளர்

எண்ணம் போல்

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்...
 "உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று... 

மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.

"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?  உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே. 

கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், 
ஒருவன் கெட்டவன் என்றில்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால், 
ஒருவன் நல்லவனும் இல்லை. 

கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான். 

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

படித்ததில் பிடித்தது*

வாழ்வது ஒரு முறை

உலகப்பேரழகி #கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்!

"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."

மகா #அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்....

"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."

ஒரு #தொழிலாளியின் கல்லறை வாசகம்....

"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."

#அரசியல்வாதியின் கல்லறையில்...

"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."

ஒரு #விலை_மகளின் கல்லறை வாசகம்...

"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."

#இவ்வளவு_தானா_வாழ்க்கை❓

ஆம் அதிலென்ன சந்தேகம்.

ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.

அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.

நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓

நமது பதவியா?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா?
நமது அறிவா?
நமது பிள்ளைகளா?
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?

ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.

பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

ஒரே முறை வாழப்போகிறோம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிரம் மடங்காக....

பிறரை வாழ வைத்து வாழ்வோம்.

செட்டியாரே



 *"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன! இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே"* 

எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்

வெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்

சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)

வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்

ஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை

இங்கார் - - - - - - (இங்கு + ஆர்)  இப்பூலகில் யார் 

சுமந்திருப்பார் இச்சரக்கை ---  அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்

மங்காத ---- குறைவில்லாத

சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு) 

தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்

ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்

செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே! 

தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்

படித்ததில் பிடித்தது

Wednesday, 27 May 2020

நேர்மை

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.

ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர், தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

“இறைவா… என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும்.

நீங்களும் எந்த சூழலிலும் நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று நா தழு தழுக்க சொன்னார்.

இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள். ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே அவளுக்கு கோபம்.

“அப்பா…. உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களைவிட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம், உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்….” என்றாள்.

அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.

காலங்கள் உருண்டன.

கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனதப் பணிக்கு அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்துவிட்டாலும், ஒரு ஃபார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர். பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.

ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.

அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர் “உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா?” என்றார்.

“ஆமாம்… சார்…”

உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் ….. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா?”

“ஆமாம்… சார்…” என்றாள் சற்று நெளிந்தபடி.

“ஒ… நீங்க அவரோட டாட்டரா? இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா… இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா, அதுக்கு அவரும் ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னைவிட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு நான் இல்லை. இந்த கம்பெனியும் இல்லை. ஏன்னா… என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது. அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்….”

“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த, இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா… யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில் ஜாய்ன் பண்ணிக்கலாம்….” என்றார்.

அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது. அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். பி.எப்., இன்சென்டிவ், ரெண்ட் அலவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும் ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.

இரண்டு ஆண்டுகள் சென்றன… ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.

இதற்கிடையே அவர்கள் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட, அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.

மாதம் பத்து லட்ச ரூபாய் சம்பளம். கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.

அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.

“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?”

கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.

“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை. அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”

“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க?”

“என் அப்பா இறக்கும் தருவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன். என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்துவிட்டேன்.”

நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா?

உண்மையான நல்லபெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம். அதன் வெகுமதி உடனே வருவதில்லை, ஆனால் அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ 
அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.

நேர்மை, நாணயம், ஒழுக்கம், 
சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை – இவையெல்லாம் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன. 
கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. 
வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.

உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்…

*“பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதைவிட புண்ணியத்தை சேர்க்கவேண்டும்”* என்று.

*நிறைய உண்மை கலந்த கதை இது!  நேர்மையாக இருப்பதால் கண்ணீர் தான் பரிசு என்று மனம் கலங்காதீர்கள்!*
*உங்கள் நேர்மை தான் உங்கள் குடும்பத்தை நிஜமாகக் காப்பாற்றும்* 
*நமது நாட்டையும் நேர்மைதான் காப்பாற்ற வேண்டும்.* 
*ஆகவே மகிழ்ச்சியாக, நேர்மையாக சமுதாயப்பணியாற்றுவோம்.*