Monday, 26 February 2018

தமிழர் உணவு மகாபெரியவா விளக்கம்

மகாபெரியவா மடத்துல இருக்கிற சமயங்கள்ல
அடிக்கடி வித்வத் பரீட்சைகள் நடக்கும்.

அதாவது பலரும் வந்து தாங்கள் கத்துண்ட விஷயங்களைக்
குறித்து பெரியவா முன்னிலையில் விவாதம் பண்ணுவா.
அந்த சமயத்துல பலருக்கும் தெரியாத புதுப்புது விஷயங்கள்,
தத்துவங்கள் மகாபெரியவா திருவாக்குலேர்ந்து வெளிப்படும்.
அந்த மாதிரியான விளக்கத்தை அதுவரைக்கும் எந்த வேத
புராணத்துலயும் சொல்லியிருக்க மாட்டா. அப்படி ஒரு
தெய்வீகமான வாக்கு. கேட்கறதுக்கு ரொம்பவே புண்ணியம்
பண்ணியிருக்கணும்னு எல்லாருமே சொல்வா.

ஒரு சமயம் அப்படித்தான் வேதம்,சாஸ்திரம், புராணம்னு
எல்லாத்தையும் மையமா வைச்சு நடந்துண்டு இருந்த
ஒரு விவாதம்,திடீர்னு சாப்பாட்டைப் பத்தி திசை திரும்பித்து.

'குழம்புக்கும்,ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?"
இப்படி ஒரு கேள்வியை எழுப்பினார் ஒருத்தர்.

"ரெண்டுலயுமே பருப்பு,மஞ்ச பொடி, புளி,சாம்பார் பொடி,
பெருங்காயம்,உப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி எல்லாம்
சேர்க்கறா.ஒரே ஒரு வித்யாசம், குழம்பு கெட்டியாய்
இருக்கும். ரசம் தீர்க்க இருக்கும்!" இந்த மாதிரி ஆளாளுக்கு
ஒவ்வொண்ணை சொல்லிண்டு இருந்தா.

எல்லாத்தையும் கேட்டு ரசிச்சுண்டு இருந்தார் மகாபெரியவா.
ஒரு கட்டத்துல, யார் சொன்ன விளக்கம் சரின்னு கேள்வி
வந்து,தீர்ப்பு மகாபெரியவாதான் சொல்லணும்னு
எல்லோரும் கேட்டுண்டா.

அமைதியா சிரிச்ச பரமாசார்யா,"எல்லாரோட
விளக்கத்தையும் கேட்டேன் என்னோடதைக் கேட்கலையே.!".
அப்படின்னார்.

எல்லாரும் ரொம்ப ஆர்வமா.."மன்னிச்சுக்குங்கோ பெரியவா..
உங்க விளக்கத்தை எங்களுக்கு சொல்லி அருளுங்கோ!"ன்னு
வேண்டிண்டா.

புன்னகைச்ச பரமாசார்யா,"குழம்புல தான் இருக்கும். ரசத்துல
தான் இருக்காது!"அப்படின்னு சொல்லி கொஞ்சம் நிறுத்தினார்.

"குழம்புல போடற காய்கறியை,'தான்'னு சொல்றது வழக்கம்.
ரசத்துல காய்கறி எதுவும் போடறதில்லை..!' அதைத்தான்
சொல்றார் பெரியவாள்னு விஷயம் புரியாதவா
நினைச்சுண்டா. விஷயம் புரிஞ்சவா,"ஆஹா..ஆஹா...
அற்புதமான விளக்கம்!"னு குரல் எழுப்பினா.

எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரியணும்னு நினைக்கற
மகாபெரியவா தான் சொன்ன விளக்கத்தை எல்லாருக்கும்
புரியறமாதிரி விளக்க ஆரம்பித்தார்.

"தான் அப்படிங்கற ஆணவம் வந்துட்டா,எல்லாமே
குழப்பமாயிடும். அதை அகற்றினாத்தான் தெளிவு பிறக்கும்.
குழப்புத்துல தான் இருக்கும்னு உணர்த்தறது குழம்பு.
தெளிவுல தான் இருக்காதுன்னு உணர்த்தறது ரசம்!"
கொஞ்சம் விளக்கமா சொன்ன பெரியவா, சுத்தி
இருந்தவாளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

"எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல
எடுத்துக்குவேள்"

"மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர்
சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"
கேட்ட மகாபெரியவா, யாரும் பதில் சொல்லாத்தால் தானே
அதற்கு விடை சொல்ல ஆரம்பிச்சார்.

"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு. பொறந்து வெவரம்
தெரிஞ்சதுமே தான்கற அகங்காரம் மனசுல வந்துடறது.
அதனால் நாம குழம்பிப் போயிடறோம்.அந்தத் தானை
கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்தகட்டத்துக்குப் போறோம்.
அப்போ தான் இல்லாத்தால் ஒரு தெளிவு வந்துடறது.
அதாவது ரசமான மன நிலை.அதான் ரசம்.

தான் இல்லாம தெளிவா இருக்கற மனசுல ரசமான எண்ணம்
வருது. அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும்,
பட்சணமாகவும் இருக்கு.

கடேசியா மோர்.பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது.
அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்
வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர்.
அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.
அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா
வாழ்க்கையை அனுபவிச்சு,யாருக்கும் எந்த உபத்ரவமும்
பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில
பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே
இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம்
போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம்
பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப்
பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப்
பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான்
நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம
வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான்
அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார் மகாபெரியவா.

வள்ளுவர் மயிலையா குமரியா

#திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்...

வரலாற்று ஆய்வாளரும் 'ஆய்வுக் களஞ்சியம்' மாத இதழ் ஆசிரியருமான டாக்டர் எஸ். பத்மநாபன்  திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர் தரும் தகவல்களை பார்ப்போம்...

கரை கண்டேஸ்வரர் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் முட்டம் கடற்கரையில் இருந்து  5 கி.மீ. தொலைவிலும் உள்ள கிராமம் அதன் பெயர் #திருநாயனார்குறிச்சி எளிமையான கிராமம், மற்ற கிராமங்களைப் போலவே நவீன வடிவம் பூண்டிருக்கிறது..   கரை கண்டேஸ்வரர் ஆலயம் முன்பு உள்ள கிராமத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தார்...

"இதுதான் திருவள்ளுவர் பிறந்த ஊர்" என்கிறார்...


"வள்ளுவர் இங்குதான் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ''

"நிறைய ஆதாரங்கள் இருந்ததால் தான் மூன்று முதல்வர்களிடமும் இதைப்பற்றி பேசியுள்ளார்..

எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் தனது ஆய்வு குறித்து பேசியிருக்கிறார்...ஐம்பது ஆண்டுகளாக திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார் அவரது ஆய்வுகளில் தலைசிறந்தது என்றால் அது 'திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்'  என்ற  கண்டுபிடிப்புதான்.

இதை 1989 டிசம்பர் மாதம் மொரீஷியஸ் தீவில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசியுள்ளார்..

பின் அதையே புத்தகமாக  அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.

மைலாப்பூர்தான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வள்ளுவருக்காக வள்ளுவர் கோட்டம் அமைத்த #கலைஞருக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது....!!

ஆதாரங்களோடு இவர் எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதன் மூலம் திருவள்ளுவர் பற்றிய பொய்யான பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்....

அதன்படி திருவள்ளுவர் வள்ளுநாட்டை ஆண்ட மன்னர்,
வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான முட்டத்தை அடுத்துள்ள #திருநாயனார்குறிச்சியில் பிறந்து,

#மதுரையில் சில காலம்  தங்கி பின் #மயிலாப்பூர் சென்று மறைந்தார்.

இதற்கான ஆதாரங்கள் திருக்குறளிலேயே இருக்கின்றன...

கிட்டத்தட்ட திருக்குறளில் உள்ள 50-க்கும்
மேற்பட்ட சொற்கள் இந்தப் பகுதியில் மட்டுமே பேசப்படும் தனிச் சொற்களாக உள்ளன...!!

"இன்னைக்கு ஒரே மடியா இருக்கு'' என்பது சாதாரண பேச்சு மொழி...!!
மடி என்றால் சோம்பல். திருவள்ளுவர் மடியின்மை என்று ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். தமிழகத்தில் வேறெங்குமே சோம்பலை மடி என்று சொல்வதில்லை. இங்கு அது சாதாரண பேச்சுத் தமிழ்...!!

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் நீரை மட்டுமே வெள்ளம் என்று சொல்லுவார்கள். குமரி மாவட்டத்தில் மட்டும்தான்  கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் என அனைத்தையும் வெள்ளம் என்பார்கள்.
இதை வள்ளுவர் 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு '  என்று குறிப்பிடுகிறார்...!!

இந்த மண்ணில்தான் தாமரை பூத்த தடாகங்கள் அதிகம்...
குடிக்க வெள்ளம் வேண்டும் என்பது இங்கு பேச்சு வழக்கில் உள்ளது.  மற்ற இடங்களில் இப்படி பேசினால் சிரிப்பார்கள்.  குமரி மாவட்டத்தில் வெள்ளம் என்றால் தண்ணீர் என்று பொருள். இதனை அப்படியே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

அதேபோல் எழுவாய் உயர்தினையாக இருந்தாலும், பயனிலை அஃறிணையாகக் கூறுவது இந்த மக்களின் வழக்கம்....
"அப்பா வரும்'', ''அம்மா பேசும்'', ''மாமா முடிக்கும்'', இப்படி பல....

இதை  அப்படியே திருக்குறளில் பயன்படுத்துகிறார் வள்ளுவர்...!!

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல்''
இந்த குறளில், இதனை இவன் முடிப்பவன்  என்று கூறாமல் முடிக்கும் என்று கூறுவது, குமரித் தமிழ் இங்கு பேசுகின்றதை காணலாம்...!!

அதேபோல் உணக்கின் என்ற வார்த்தையும்,
ஒரு பங்கு மண், கால் பங்கு ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி  உரம் கூட தேவையில்லாமல் அந்த நிலத்தில் பயிர் செய்யலாம் என்பதை வள்ளுவர்...
"நொடி புழுதி கஃசா  உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்'' என்று குறிப்பிடுகிறார். இதில் உணக்கின் (காய வைத்தல்) என்ற வார்த்தையை குமரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள் பேசுகின்றனர்.

மீன்கள் மிணு மிணுப்பிற்கு மயங்கும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு. முட்டம், கடியப்பட்டினம் மீனவர்கள் தூண்டிலில் ஜரிகையை இணைத்து மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இப்படி தூண்டிலில் பொன் இழையை வைத்து மீன் பிடிக்கும் வழக்கத்தை 'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்ற தூஉம், தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று' என்று குறிப்பிடுகிறார். இத்தகைய  தூண்டில் முறை திருவள்ளுவர் பிறந்த திருநாயனார் குறிச்சிக்கு அருகில் மட்டும்தான் உள்ளது...!!
வேறு எங்கும் இல்லை. இந்த ஊரின் பழைய பெயர்தான் கடியப்பட்டினம்.

இவற்றை விட ஓர் அரிய சான்றினை கூறுகிறார்...!!  இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதற்கு மிக அரிதான சான்று. 'வரைவின் மகளிர்' என்ற தலைப்பில் விலைமகள்களைப் பற்றி கூறுகிறார்.  ''பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று'' என்பது அந்தக்குறள்.

வாடிக்கையாளர்களை மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின் தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார். பிணம் தழுவுதல் என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்தது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்கள். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தை தழுவி வரவேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்கள். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கூலிக்காக முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தை தழுவிய இளைஞனையும், பணத்திற்காக எந்த உடலையும் தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார். மலை நாட்டிலுள்ள பிணம் தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சி'' என்கிறார் பத்மநாபன்.

திருநாயனார் குறிச்சியை  அடுத்து வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கும் திருவள்ளுவருக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது.  தடிக்காரங்கோணம்  அருகே உள்ள கூவைக்காடு என்ற இடத்தில்தான் இந்த மலை இருக்கிறது. இது அந்த காலத்திய ஊட்டி, கொடைக்கானல் போல் குளுமையாக இருந்திருக்க வேண்டும்.  இந்த மலையில்தான் திருவள்ளுவரும், அவர் மனைவியும் ஓய்வெடுக்க வருவார்கள். தேனும் தினைமாவும் விரும்பி உண்பார்கள். அப்படி அவர் தங்கி  இடம்தான் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

வள்ளுவன் கல் பொற்றையில்   கருமை நிறத்தில் பெரிய பாறை ஒன்று சிறு குன்று போல் இருக்கிறது.. "அதுதான் வள்ளுவன் கல்பொற்றை''  என்கிறார் பத்மநாபன். அதன் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ள பாதம் 'வள்ளுவர் பாதம்' என்று அழைக்கிறார்கள் இங்குள்ள பழங்குடிமக்கள்.

டாக்டர் பத்மநாபன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தும், அதன்பின் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் போதும் திருவள்ளுவரைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து. திருவள்ளுவர்  இங்கு வருவதற்கான காரணத்தை ஆதாரத்தோடு சொல்கிறார்...!!
நன்றி;டாக்டர் எஸ்.பத்மநாபன்.

Friday, 23 February 2018

பூக்களாய் பூத்திருப்போம்

ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...

கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி

அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...!!!

ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்?

"ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்....

நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்....

வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....

இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் !
.
பெண் என்றால் அடிமையா என்ன..?

கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ?

எனக்கே அசதியா இருக்கு.....

இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.

சும்மா கடுப்பேத்திகிட்டு"....

முதியவள் சிறு புன்னகையோடு,

"மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!!

ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு....

ரெண்டு பேருமே விவசாயமே..தொழில். .
வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!!

காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு...

ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு....

பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....

எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,...

நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்...

என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி...

தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....!

இப்ப அவங்க இல்லை,....!

நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்...

என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..!!

அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு....!

அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது....!

அவங்க handphone நம்பர் இருக்கு,! ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,...!

முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்...!

இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... !

சமையலறைக்குத் தனியா போறேன், ! சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், !

வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை.!..

கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...!

விழியோரம் நீர் தேங்க..,

அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,!

அதிகமாக போற்றணும்....!!!

கணவனின் வெற்றியோ தோல்வியோ,!

பெருமையோ அவமானமோ...!!!.

லாபமோ...
நட்டமோ...

மனைவிக்கு அனைத்திலும்..
சம பங்கு உண்டு...!

தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்....

வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்....!

மிகவு‌ம் வேதனை படுத்தும்.!

எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..

பஸ் இல் ஏறும் போது ,
விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து....

இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.!!!

பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்...!.

அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.!
பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது.....

பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக...

பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்....!

இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்.....!

எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?"

இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.!

சரி மகளே,! நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்..... !.

என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.....!!!!!!

ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,...

நம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.!

புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே,
hi sir how r u? Nice to meet u என்கிறோம்...!

இடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I'm sorry sir என்கிறோம்...!

பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம் ..!

அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்...

அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது....
ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?"

வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை.... மனைவி மதிக்கிறாளா...?
மனைவியை கணவன் மதிக்கிறானா...???

இல்லை பதில் 100 க்கு 50சதவீதம், இல்லைதான்...

கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்டவேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட,

ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கனு

மனைவியும் சொல்றதில்லை...

மனைவியும் ஓய்வாகவோ.. களைத்து அமர்ந்திருக்கையில்..
இன்று வீட்டு வேலை அதிகமா... என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 50%மே...

இதெல்லாம் சொல்லணும்...!!

அப்படி *ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்.....*

*வாழ்க்கை இனிக்கும்.. & ருசிக்கும்.!!!.*

அகம் முகம் மலர்ந்த நட்பே..!! குழுவிற்க்கு

வந்த தகவல் பறிமாற்றப்பதிவு...

நம்முடைய.
உறவு..... நட்பு... குலம்.... சாதி... பங்காளி... பகையாளி... இனம்...சனம்.... பணம்... முதலாளி.... தொழிலாளி..... கட்சிக்காரன்.... எல்லாமே.....
குறுகிய காலமே..!

கணவனோ.... மனைவியோ...

மருத்துவ மனையிலோ.. படுக்கையிலோ... இருந்தால்...

கூட இருந்து கவனிப்பவர்... கணவனோ... &
மணைவியோ தான்...

சுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்....

முதல் ஒருவார காலம்.. பார்க்க வரும் உறவுகள் & சொந்தங்கள்..

பின்னர் படிப்படியாக குறைந்து விடும்..

பின்னர் மகளோ... மகனோ.... நெருங்கியவர்கள் மட்டுமே...

வந்து போவார்கள்......

இறுதியில் கணவன் மனைவி மட்டுமே...

ஒருவருக்கொருவர்..
துணையாக இருப்பர்..!

துணையை நேசிப்போம்..!!

தீபங்கள் பேசும்

நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.

1.மனக் கவலை தூள் படும்

2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்

3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்

4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்

5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்

6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்

7.ஒற்றைத்தலைவலி சரியாகும்

எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்

Thursday, 22 February 2018

பேதமை பேசாதே

ஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க டாக்டர் ஒருவர் வந்தார்.

வந்தவர் கேட்டார்:

“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?”

பரமஹம்ஸர் சட்டென்று பதில் சொன்னார்:

“ஓ! பார்த்திருக்கிறேனே!! காலையில் கூட அவரோடு பேசினேன்”

“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”
என்று டாக்டர் பதிலுக்குக் கேட்டவுடன் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தனர்.

பரமஹம்சர் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கேள்வி எழுப்பிய
டாக்டரிடம், “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அவர் சொன்னார்: “நான் டாக்டர் வேலை செய்கிறேன்”

“டாக்டர் தொழில் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே?”

“நன்றாகத் தெரியும்”

“அப்படியானால் என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”

“அது எப்படி? நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே?”

“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,கடவுளைப் பார்க்க
ஒரு படிப்பு வேண்டாமா? நான் அதைப்படித்திருக்கிறேன்.நீங்களும்
அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்” என்று பரமஹம்சர்
நெத்தியில் அடிப்பது போல அவருக்குப் பதில் சொன்னார்.

டாக்டர் அதிர்ந்துபோய் விட்டார். மற்றவர்கள் வியந்து மகிழ்ந்தனர்.
==