Saturday, 31 March 2018

மகாவீரம்

இறைவனின் இருப்பிடம்


பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.

Sunday, 18 March 2018

புத்தகம்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்

Thursday, 15 March 2018

புண்ணியம் சேர்

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார்
ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர்
பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட
அழைத்தார்.

“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான்.
நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால்
கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை
அறிமுகப்படுத்தினார்.

சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது.
அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய
வேண்டுமே!” என்று கேட்டார்.

“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல்
சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார்
பணக்காரர்.

தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார்,
அதை பணக்காரரிடம் நீட்டினார்.

“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய
வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.

“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும்
இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக்
கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்

“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர
முடியும்” என்று கேட்டார் பணக்காரர்.

அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் “இந்த உலகை
விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக
முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.
ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக
தற்பெருமை பேசுகிறீர்களே….

ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு
கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத்
தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து
உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,”
என்று அறிவுரை கூறினார்.
          
வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே.. எனவே, இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்..

Wednesday, 14 March 2018

ஆதியோகியுடன் விவாவதம்

*திருவிளையாடல்* திரைப்படத்தில் சிவனுக்கும் நக்கீரருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தில் சிவன் ''அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி'' என்று தொட‌ங்கும் வசனத்தையும் பிற‌கு நக்கீரர் ''சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்'' என்று தொடங்கும் வசனத்தையும் பேசுவர். இந்த வசனங்களின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன அர்த்தம்.? எதற்காக சிவன் மிகவும் ஆக்ரோஷமானார்..? அப்படி என்ன அந்த வசனத்தில் இருக்கிறது...!?

அந்த திரைப்படத்தில் வரும் வசனம்:

*சிவன்*
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

*நக்கீரன்*
சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை..!!!

பொருள்:-
நக்கீரனின் குலத்தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதைதான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி (அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக் கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார்.

அதற்கு மறுமொழி;-
சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது.? மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப் பாத்திரமாக்கி இரந்துண்டு (பிச்சை பெற்று) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார்.

இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.

அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டா வாழ்வோம்...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
இந்த மாதிரி உண்மை எந்த மதத்துல பேச முடியும்?
அந்த படைத்தவனே வந்தாலும் தவறு என்றால் எதிர்வாதம் செய்வது இந்து மதத்தின் சிறப்பு!!!

மெழுகுவர்த்தியின் நம்பிக்கை

யோசிக்க வைக்கும் சிறு கதை !!

👉 ஒரு இருட்டு அறை... அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தன.

👉 அவை ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன.

👉 அப்போது அந்த அறையின் ஜன்னல் பகுதியின் வழியாக காற்று வீசியது. மெழுகுவர்த்திகள் பயந்து விட்டன.

👉 காற்றை கண்டதும் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தியானது பயத்துடன்,

👉 ஐயோ ! காற்று வீசுகிறது... நான் அணைந்து விட போகிறேன் என்று சோகமாக கூறியது.

👉 அதன் மீது காற்று பட்டதும் மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது...!!

👉 அடுத்து இரண்டாவதாக அன்பு என்ற மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்த்து நிற்க முடியாது என்று பலவீனமாக கூறியது.

👉 கூறியவுடன் அணைந்து விட்டது...!!

👉 இந்த இரண்டு மெழுகுவர்த்தியும் அணைந்ததை பார்த்ததும் மூன்றாவதாக அறிவு என்ற மெழுகுவர்த்தியும் பயந்து விட்டது.

👉 என்னாலும் காற்றை எதிர்க்க முடியாது என்று கூறியவுடன் அணைந்து விட்டது...!!

👉 இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடியது.

👉 அந்த போராட்டம் சில நிமிடங்கள் தான்.... பின் அது பிரகாசமாக எரிய ஆரம்பித்தது.

👉 அப்பொழுது அந்த அறைக்குள் ஒரு சிறுவன் நுழைந்தான். மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து இருப்பதை பார்த்து,

👉 அடடா...! மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து விட்டதே என்று வருத்தத்துடன் கூறினான்.

👉 அப்பொழுது அணையாமல் எரிந்து கொண்டு இருந்த மெழுகுவர்த்தி அச்சிறுவனிடம்,

👉 கவலைப்படாதே... நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள், என்று கூறியது.

👉 உடனே அந்த சிறுவன்,

👉 உன் பெயர் என்ன? என்று நான்காவது மெழுகுவர்த்தியிடம் கேட்டான்.

👉 அதற்கு அந்த மெழுகுவர்த்தி, 'என் பெயர் நம்பிக்கை" என்று கூறியது.

👉 அதற்கு அந்த சிறுவன் மெழுகுவர்த்தியிடம், நீ எப்படி அணையாமல் இருக்கிறாய் என்று இப்பொழுது தான் தெரிகிறது எனக் கூறினான்...

👉 வாழ்க்கையும் அவ்வளவு தான். நாம் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது.

👉 நம்பிக்கை இருந்தால் எதிலும் போராடி வெற்றி பெறலாம் என்பதை இந்த மெழுகுவர்த்தி அழகாக கூறியுள்ளது...!!!!

மனிதம் உயிர்ப்போடு

கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தின் மொழிபெயர்ப்பு.

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.

எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு"

அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதலை.எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறிக் கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனதால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி.

மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?

கண்கள் பனித்தன. மனித நேயம் சாகவில்லை.

Monday, 12 March 2018

உடனிருப்போர் உனக்குள்

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

*சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

*சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

*இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

*உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

*உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா.

-படித்ததில் பிடித்தது.