Tuesday, 25 September 2018

வேலை செய் மனிதா

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது .

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம   ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. 

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?

எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........

பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...

சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ?  காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. !  புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு  தானமா  கொடுன்னாராம்....

நாம் யாரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்

Thursday, 20 September 2018

கருகிய ரொட்டி

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில்  ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது....
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ...
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...

ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”

இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...

மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...

எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

Monday, 17 September 2018

சகுணம்

அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார்.

ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வ்ந்தது. எல்லாம் அந்த‌ சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார்.

இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.

அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார்.

அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார்.

அதற்கு பீர்பால் “நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்” என்றார்.

அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌

Friday, 14 September 2018

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள் !!

🌹🌸🌻🌹🌸🌻
மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான்.

குந்திதேவி கர்ணனை "மகனே!" என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள்.
கர்ணனுடைய மனைவியும் அவன் உடல் மேல் விழுந்து கதறுகிறாள்.
இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள்.
அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, ""இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?'' என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர், ""இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.

தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்'' என்றார்.

தர்மபுத்திரரைப் பயம் சூழ்ந்து கொண்டது.
காரணம்-
பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது.

"தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ ""அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.
பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார்:
"இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங்கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும்.
அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள்.
அரசனிடம் நல்லவற்றிற்கு நீதி கிடைக்காது.

குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர்களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள்.
படித்தவன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது; நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது; பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும்.
கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள்.

அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்...!!"
''இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார்கள்.

"அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்'' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ,

""நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதை விட, உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்'' என்று சொன்னார்.
அப்போது புறப்பட்டவைதான் "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்...!"

அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால், தர்மம் மீண்டும் தழைக்கும் என்பது தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமை.

பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா..? என்று நாம் வியப்படையலாம்.

சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு, சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால் அழைக்கும் போது, பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் இருக்காதா என்ன?
இந்த ஆயிரம் பெயர்களைச் சொல்லி, பகவானை வேண்டினால், கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

உடனே பார்வதி தேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, ""சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டிதர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம்.

ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?'' என்று கேட்டாள்.
ஈஸ்வரன் புன்னகைத்தார்.""தேவி... நீ சொல்வது சரிதான்.

ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.

"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே'- இப்படி மூன்று முறை சொன்னால் போதும்.

சஹஸ்ரநாமம் சொன்ன பலனை அடையலாம்'' என்று பார்வதி தேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.

சரி; இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம்.

மரா... மரா... மரா... என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா?
அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம்.

முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.

பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது.
வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும்.

நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ரநாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம்.
மேலும் தர்மங்களும் தழைக்கும்.

ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங்கள் (பதவுரை- பொழிப்புரை) எழுதியிருக்கிறா
ர்கள்.

இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம். சமஸ்கிருத மொழியைச் சரியாக உச்சரித்துச் சொல்ல வேண்டும்.

இல்லையேல் பாரத ரத்தினமாய் விளங்கிய எம்.எஸ். சுப்பு லட்சுமி அவர்கள் இசைத்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாம ஒலிநாடாவையோ குறுந்தகட்டையோ தினமும் காலையில் நமது வீடுகளில் ஒலிக்கச் செய்வதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம்.

பலருடைய வாழ்விலும் இப்படிக் கேட்டு நன்மைகள் விளைந்திருக்கின்றன.

"பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!

அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக !!

ஹரே கிருஷ்ணா!

Thursday, 6 September 2018

நம்பூ நறுமணம் வீசும்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

“ஏன் சோகமாக இருக்கிறீர்கள் ?” என்று கேட்டார்.

அதற்கு இவர் “எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன்” என்றார்.

“எவ்வளவு ரூபாய் நஷ்டம் ?” என்றார் அவர்.

“50 கோடி ரூபாய்” என்றார் இவர்.

“அப்படியா, நான் யார் தெரியுமா ?”  என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின்பெ யரை சொன்னார்.

அசந்து போனார் இவர்…

“சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ?” என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர்; “ஆமாம் எல்லாம் சரியாகி விடும்”  என்றார்.

பின் அந்த செல்வந்தர் ஒரு காசோலை புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி “இந்தா இதில் 500 கோடிக்கு காசோலை, நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்” என்று சொல்லி விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த காசோலையை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார்.

“நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார்.

சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை.

“இவர் சென்று அந்த பெண்மணியிடம்  எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ?”  என்றார்.


“அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?” என்றார்.

இவர் “இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?” என்றார்.


அந்த பெண்மணி “இல்லை ஐயா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், காசோலை தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய காசோலையை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்.” என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை.

நீங்கள் மேலே படித்த கதையில் பிரச்சனைகளிலிருந்து மீண்டு வர காசோலை காரணம் என்பது போல் தெரிந்தாலும் அதன்மூலம் அவருக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கையே அவர்களுக்கு வெற்றியை தேடித்தந்தது. தன்னம்பிக்கைதான் நம் வாழ்க்கையை மாற்றித் தருகிறது என்பதை இக்கதை நமக்கு உணர்த்துகின்றது.

தகுதி

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா , இந்த வழியாக சற்று முன் யாராவது
சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , " இதற்கு
முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது
இப்பக்கமாகச் சென்றார்களா?என்று கேட்டான்.அதற்கு அத்துறவி,சற்று முன் இந்த
வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே,
வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

உடனே துறவி , " மன்னர் பெருமானே,வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன்
சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே
கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்த அரசன், "துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி
இருந்தும் நான் அரசன் என்றும்,முன்னால் சென்றவர்கள் வீரன்,அமைச்சர் என்றும்
எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார்,
அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர்
பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் நீங்களோ மிகவும் பணிவாகப் பேசுறீர்கள்."
என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

Wednesday, 5 September 2018

கேளுங்கள் கொடுக்கப்படும்


*சுகி.சிவம் எழுதியது :*

பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது.

பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற் றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள்.

போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி.
அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்தரவிட்டாள் பாட்டி. வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பி னாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது!

இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள்.
பகீர் என்று ஆனது பாட்டிக்கு.

அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. ‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை’ என்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள் பேத்தி.மழை என்னவோ வஞ்சனை இன்றிதான் பெய்தது.
பாத்திரம்தான் கவிழ்ந்து கொண்டு தண்ணீரை ஏற்க மறுத்து விட்டது.

*கடவுளின் அருளும் அப்படித்தான்!*
*அது பொதுவாகவே அனைவருக்கும் கொட்டுகிறது.*
*கவிழ்த்து வைத்தவர்களின் மனங்கள் அதில் ஒரு சொட்டுகூட ஏந்துவதில்லை.*

*திறந்த மனத்தோடு, பிரபஞ்சத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டால் பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமானவையே!.*

*எண்ணம் போல் வாழ்க்கை என்பதின் பொருள் இதுதான்  !!*