Wednesday, 20 September 2017

பதிபக்தி


*வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!*

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை
கொண்டாடினார்கள்.

ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.

நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் ஆண்டு  திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்.

இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.

"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.

அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.

ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.

அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.

மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே?
அறிவில்லையா?" என்று கேட்டேன்.

*அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.*

*அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.*

*நீதி:*

*இப்படிதான் பல ஆண்களின் வாழ்க்கை அமைதியாக செல்கிறது*

Monday, 18 September 2017

தக்காளி சட்னியா? ரத்தமா?

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .

அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. 

இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.

ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.

ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.

அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?

இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .

இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.

இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.

அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.

இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

அதே வீடு தான் ,

அதே நெருப்பு தான் ,

ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?
நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்.
முழு தொகை இன்னும் வரவில்லை.

வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். .

இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.

தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.

சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்.

இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.

இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.

கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.
மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

இங்கு எதுவுமே மாறவில்லை " ,

அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ", இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .

நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.

உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.

ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது.

நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால் என்றும் கவலையில்லை..

அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...!!

Sunday, 17 September 2017

பெரியார் - குறிப்புகள்


தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!

* தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

* 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

* அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

* 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

தொண்டு செய்து பழுத்த பழம்


தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.

யார் இந்த பெரியார்? ஏன் அவரைப் பற்றி இன்றும் பேசுகிறோம்?

பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது,....
செருப்பால் அடிக்கப்படுகிறது,....
இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார்.
அவரே சொன்னார்...
'பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’

கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார் பெரியார். நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். ராத்திரி நேரத்தில் பயணம் செய்யும்போது சும்மா இருப்பார்களா? திடீரென, கயிறுபோல ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்தது. அது... பச்சைப் பாம்பு. எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, வண்டியை வேகமாகச் செலுத்தச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனதும், வண்டியைத் திருப்பச் சொல்லி வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார். வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், 'அதுதானே பார்த்தேன்! நான் போகும்போது என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்’ எனச் சொன்னார். அவர் மீது செருப்பு வீசப்பட்டதே மற்றவர்களுக்கு அப்போதுதான் தெரியும்.

30 ஆண்டுகள் கழிந்தது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 'செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்’ என கவிஞர் கருணானந்தம் எழுதினார். பெரியாரின் 'ராசி’ இறப்புக்குப் பிறகும் செருப்பு மாலைகள்!

ஈரோட்டில் மளிகைக்கடை மண்டிவைத்து வெறும் ராமசாமி நாயக்கராக செல்வத்தில் புரண்டு கிடக்காமல், அவர் தலையெழுத்து... தமிழர்களுக்காக இரவும் பகலும் வெயிலிலும் மழையிலும் அலைந்து, குடல் இறக்கம் காரணமாக மாட்டு வயிறுபோல தொங்கிய தன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு திரிந்து, சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலும் மூத்திரச் சட்டியுடன் மேடையில் அமர்ந்து, சிறுநீர் பிரியும்போதெல்லாம் 'அம்மா... அம்மா...’ என மரண அவஸ்தைப்பட்டு, அந்தக் கிழவன் பாடுபட்டதன் வினை என்ன தெரியுமா? அவரது படத்துக்கு ஓர் இளைஞர் செய்கிறார் சிறுநீர் அபிஷேகம்!

'உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான்’ எனச் சொன்னவர் பெரியார். சாதியை எதுவெல்லாம் காப்பாற்றியதோ அதையெல்லாம் எதிர்த்து பிரசாரம் செய்தார். மதம், சாஸ்திரம், கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் அதிகம் பேசியது அதனால்தான். 'எனக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இழிதன்மைகள்தான். அவர்களைச் சுதந்திரம் அடையச் செய்வதே என் கண் நோய்க்கான தீர்வு’ என்பதைத் தெளிவாகச் சொன்னவர் அவர். அந்த லட்சியத்துக்காகப் பேசியவர்; போராடியவர். அதில் சிறுபகுதிதான் கடவுள் மறுப்பு. 'சாதியை மதம் காப்பாற்றுகிறது. மதத்தைக் கடவுள் படைத்தார் என்றால், அப்படிப்பட்ட கடவுளும் மதமும் தேவையா?’ என்றே அவர் கேட்டார்.

கடவுள் மறுப்பு வாசகங்களை, தன் சிலைக்குக் கீழே செதுக்கிவைத்திருக்கச் சொன்னதே, அவரது கிண்டலான எதிர்வினைதான். 'சும்மா சிலையை மட்டும் வைத்தால் சில ஆண்டுகளுக்குப் பின், இவர் ஏதோ சாமியார்போல என நினைத்து மாலை போட்டுக் கும்பிட ஆரம்பிச்சுருவான். அப்படி ஆகிவிட கூடாதுனுதான் இப்படி எழுதச் சொன்னேன்’ என்றார்.

கடவுள் இல்லை என நா தழும்பேறி நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்க வேண்டியது.

தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி’ எனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா?

'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு’ என்பதுதான் பெரியாரின் நடத்தை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர்.

சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்’ இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார். ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்’ எனத் தலைப்பிட்டு பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக நிபந்தனை இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ எனப் பகிரங்கமாகப் பணிந்தார்.

சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர். அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள். 'சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.

கடவுளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பெரியாரைச் சந்திக்க நினைக்கிறார் குன்றக்குடி அடிகளார். ஈரோடு வந்த அடிகளார், பெரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். 'நீங்கள் மகா சந்நிதானம். என்னைத் தேடிவரக் கூடாது. நானே வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு பெரியார் சென்றார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார் அடிகளார். 'மகா சந்நிதானம் எழுந்து நிற்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரப் போகிறார். 'இந்த இருக்கையில் இரண்டு பேர் உட்காரலாம். என் அருகில் உட்காருங்கள்’ என அடிகளார் சொல்ல, 'சந்நிதானத்துக்குச் சமமாக நான் உட்காரக் கூடாது’ என மறுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 'சாதியை உங்கள் கடவுளும் மதமும் ஒழிக்கவில்லையே’ என பெரியார் சொல்ல, 'சாதியை கடவுள் உருவாக்கவில்லை’ என அடிகளார் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதைத் தட்டிக் கேட்கவில்லையே’ என பெரியார் சொல்ல... அந்தச் சந்திப்புதான் இருவரையும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் கரம் கோக்கவைத்தது.

அப்போது பெரியார் சொல்லி அடிகளார் குலுங்கிச் சிரித்த ஜோக்: 'எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’

அடிகளாரைப் பார்க்க, அவரது குன்றக்குடி மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீகமாக பூரணக் கும்ப மரியாதை தரப்பட்டது. அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை. சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, 'விபூதியை நான் எடுத்துப் பூசிக்கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார். அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவரின் படத்தை இன்று சிறுநீரால் அவமதிக்கிறார்கள்.

பிராமண துவேஷி என அவர் தூற்றப்படுகிறார். உண்மையில், அவர் சாதி துவேஷிதானே தவிர,  குறிப்பிட்ட ஒரு சாதியின் துவேஷி அல்ல. எல்லா சாதிகளையும் அதன் ஆணவத்தையும் கண்டித்தவர். சிலர் 'தங்களை ஆண்ட பரம்பரை’ எனச் சொன்னபோது, 'பட்டாளத்தில் இருந்த எல்லாரும் ஆண்ட பரம்பரைதான்’ என நெத்தியடி அடித்தவர். 'பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது’ என்றவர்.

அனைத்துக்கும் மேலாக தான் சார்ந்த சமூகத்தையே விமர்சிக்கத் தயங்காதவர். ஒருவன் தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த சாதியை விமர்சிப்பதற்குத்தான் வீரம் வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு கிராமத்தில் மரியாதைக் குறைவாக நடத்தியபோது, 'இரண்டு பேருக்கும் என்ன வித்திசாயம்?’ எனக் கேட்டவர். 'இந்து’ கஸ்தூரி சீனிவாசன், நியூஸ் ஏஜென்சியை ஆரம்பித்தபோது பணம் முதலீடு செய்தார். சிம்சன் அனந்த ராமகிருஷ்ணன் இயந்திரக் கலப்பையை உற்பத்தி செய்தபோது பார்க்கப் போனார்.

மகா பெரியவர் காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள் மயிலாப்பூருக்கு வந்தபோது, திராவிடர் கழகத்தினர் அங்கு குழும, ரசபாச சூழல் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த பெரியார், 'பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது உங்கள் வேலை’ என தி.க-வினருக்கு அறிவுறுத்தினார்.

கவியோகி சுத்தானந்த பாரதி தனது வீட்டுக்கு வந்தபோது, பூட்டப்பட்டுக் கிடந்த பூஜை அறையைத் திறந்துவிட்டு, தட்டில் பூ கொண்டுவைத்தவர் பெரியார். வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர்.

அவரது படத்துக்கா இன்று சிறுநீர் கழிப்புகள்?

அந்தக் காலத்தில் மாலி என்பவர் 'கடவுள் எங்கே?’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தினார். பெரியாரைக் கடுமையாகத் திட்டிய நாடகம் அது. ம.பொ.சி-யின் நண்பர் அவர். பெரியாரைச் சந்திக்கப் போன ம.பொ.சி., தன்னோடு மாலியையும் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். ' 'கடவுள் எங்கே?’ நாடகம் போட்ட பையனா நீ?’ எனக் கேட்டார். 'உங்களை எதிர்த்து அதில் நிறைய வசனங்கள் வருது’ என்றார் மாலி. 'அதனால் என்ன... உன் கருத்தை நீ சொல்ற... என் கருத்தை நான் சொல்றேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லை. மக்கள் முடிவு பண்ணிப்பாங்க’ என இந்தச் சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுத்தாரோ அது அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. அதைப் பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல. 'மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை’ எனச் சொன்ன அவர், 'எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றும் சொன்னார். 

ஏனெனில், அவர் பெரியார்!