Saturday, 22 December 2018

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

அச்சம் தவிர்

ஆண்மை தவறேல்.

இளைத்தல் இகழ்ச்சி

ஈகை திறன்

உடலினை உறுதிசெய்

ஊண்மிக விரும்பு

எண்ணுவது உயர்வு

ஏறுபோல் நட

ஐம்பொறி ஆட்சிக்கொள்

ஒற்றுமை வலிமையாம்.

ஓய்தல் ஒழி.

ஓளடதம் குறை.

கற்றது ஒழுகு.

காலம் அழியேல்.

கிளைபல தாங்கேல்.

கீழோர்க்கு அஞ்சேல்.

குன்றென நிமர்ந்து நில்.

கூடித் தொழில் செய்.

கெடுப்பது சோர்வு

கேட்டிலும் துணிந்து நில்.

கைத்தொழில் போற்று

கொடுமையை எதிர்த்து நில்.

கோல்கைக் கொண்டுவாழ்

கவ்வியதை விடேல்.

சரித்திரச் தேர்ச்சி கொள்

சாவதற்கு அஞ்சேல்

சிதையா நெஞ்சு கொள்.

சீறுவோர்ச் சீறு.

சுமையினுக்கு இளைத்திடேல்.

சூரரைப் போற்று

செய்வது துணிந்து செய்

சேர்க்கை அழியேல்.

சைகையில் பொருளுணர்.

சொல்வது தெளிந்து சொல்

சோதிடந் தளை யிகழ்.

சௌரியம் தவறேல்.

ஞமலிபோல் வாழேல்.

ஞாயிறு போற்று

ஞிமறென இன்புறு.

ஞெகிழ்வது அருளின்.

ஞேயம் காத்தல்செய்.

தன்மை இழவேல்.

தாழ்ந்து நடவேல்.

திருவினை வென்று வாழ்.

தீயோர்க்கு அஞ்சேல்.

துன்பம் மறந்திடு

தூற்றுதல் ஒழி.

தெய்வம் நீ என் றுணர்.

தேசத்தைக் காத்தல் செய்.

தையலை உணர்வு செய்.

தொன்மைக்கு அஞ்சேல்.

தோல்வியில் கலங்கேல்.

தவத்தினை நிதம் புரி.

நன்று கருது.

நாளெலாம் வினை செய்;

நினைப்பது முடியும்

நீதிநூல் பயில்.

நுனியளவு செல்.

நூலினைப் பகுத்துணர்.

நெற்றி சுருக்கிடேல்.

நேர்படப் பேசு.

நையப் புடை.

நொந்தது சாகும்.

நோற்பது கைவிடேல்.

பணத்தினைப் பெருக்கு.

பாட்டினில் அன்பு செய்.

பிணத்தினைப் போற்றேல்.

பீழைக்கு இடங்கொடேல்.

புதியன விரும்பு.

பூமி இழந்திடேல்.

பெரிதினும் பெரிது கேள்.

பேய்களுக்கு அஞ்சேல்.

கொய்மை இகழ்.

போர்த் தொழில் பழகு.

மந்திரம் வலிமை.

மானம் போற்று.

மிடிமையில் அழிந்திடேல்.

மீளுமாறு உணர்ந்துகொள்.

முனையிலே முகத்து நில்.

மூப்பினுக்கு இடங் கொடேல்.

மெல்லத் தெரிந்து சொல்.

மேழி போற்று.

மொய்ம்புறத் தவஞ் செய்.

மோனம் போற்று.

மௌட்டியந் தனைக் கொல்.

யவனர்போல் முயற்சிகொள்.

யாரையும் மதித்து வாழ்.

யௌவனம் காத்தல் செய்.

ரஸத்திலே தேர்ச்சிகொள்.

ராஜஸம் பயில்.

ரீதி தவறேல்.

ருசிபல வென்றுணர்.

ரூபம் செம்மை செய்.

ரேகையில் கனி கொல்.

ரோதனம் தவிர்.

ரௌத்திரம் பழகு.

லவம் பல வெள்ளமாம்.

லாகவம் பியற்சி செய்.

லீலை இவ் வுலகு.

(உ)லோக நூல் கற்றுணர்.

லௌகிகம் ஆற்று.

வருவதை மகிழ்ந்துண்.

வான நூற் பயிற்சி கொள்.

விதையினைத் தெரிந்திடு.

வீரியம் பெருக்கு

வெடிப்புறப் பேசு.

வேதம் புதுமை செய்.

வையத் தலைமை கொள்.

வௌவுதல் நீக்கு.

Thursday, 15 November 2018

விட்டு விடு

விட வேண்டிய விஷயங்கள்:

1 பயன் தராத விஷயங்களை ஒதுக்கு.
2 நெளிவு சுளிவுகளோடு வாழ்
3 பெரிதினும் பெரிது கேள்
4 நொண்டிச்சாக்குகளை விட்டுத்தள்ளு
5 ரொம்ப ஒழுங்குகளை விடு
6 ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்
7 எல்லாரையும் எல்லா விஷயங்களையும் கட்டு படுத்த நினைக்காதே
8 விஷமுள்ள மனிதர்களை விட்டு ஒதுங்கு
9 சமூக வலைத்தளங்களை விட்டு தூரப்போ
10 உன்னை எல்லோரும் விரும்ப வேண்டும் என நினைக்காதே

Thursday, 1 November 2018

சிரி

மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க?
கணவன் : டாக்டர் தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.
-------------------------------------------------
மனைவி : நீ தான் என்னோட புருஷனா வரப் போறேனு ஸ்கூல்ல படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!

கணவன் : அப்படியா...! ஆச்சிரியம்மா இருக்கே ..!!

மனைவி : ஆமா .!! நீயெல்லாம் பெரியவளாகி பன்னி மேய்க்கத்தான் லாயக்குனு சொல்லுவாங்க...!!

கணவன் ???????
-------------------------------------------------
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.. அதான்

சர்தார் 1 :????
----------------------------------------------------
நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா

நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா

நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா

நண்பர் 2: ?????
-----------------------------------------------------

Wednesday, 31 October 2018

எது கெடும்

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

Monday, 8 October 2018

துறவியின் அன்பு


குறள் :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.

குறள் விளக்கம் :
தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.

கதை :
ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார், ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.

நீதி :
நமக்கு ஒருவர் தீமையை செய்தாலும் அவர்களுக்கு நாம் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும்.

Tuesday, 25 September 2018

வேலை செய் மனிதா

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது .

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம   ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. 

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?

எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........

பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...

சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ?  காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. !  புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு  தானமா  கொடுன்னாராம்....

நாம் யாரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்

Thursday, 20 September 2018

கருகிய ரொட்டி

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில்  ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது....
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ...
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...

ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”

இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...

மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...

எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

Monday, 17 September 2018

சகுணம்

அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார்.

ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வ்ந்தது. எல்லாம் அந்த‌ சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார்.

இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.

அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார்.

அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார்.

அதற்கு பீர்பால் “நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்” என்றார்.

அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌

Friday, 14 September 2018

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள் !!

🌹🌸🌻🌹🌸🌻
மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான்.

குந்திதேவி கர்ணனை "மகனே!" என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள்.
கர்ணனுடைய மனைவியும் அவன் உடல் மேல் விழுந்து கதறுகிறாள்.
இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள்.
அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, ""இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?'' என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர், ""இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.

தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்'' என்றார்.

தர்மபுத்திரரைப் பயம் சூழ்ந்து கொண்டது.
காரணம்-
பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது.

"தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ ""அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.
பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார்:
"இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங்கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும்.
அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள்.
அரசனிடம் நல்லவற்றிற்கு நீதி கிடைக்காது.

குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர்களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள்.
படித்தவன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது; நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது; பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும்.
கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள்.

அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்...!!"
''இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார்கள்.

"அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்'' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ,

""நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதை விட, உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்'' என்று சொன்னார்.
அப்போது புறப்பட்டவைதான் "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்...!"

அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால், தர்மம் மீண்டும் தழைக்கும் என்பது தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமை.

பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா..? என்று நாம் வியப்படையலாம்.

சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு, சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால் அழைக்கும் போது, பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் இருக்காதா என்ன?
இந்த ஆயிரம் பெயர்களைச் சொல்லி, பகவானை வேண்டினால், கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

உடனே பார்வதி தேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, ""சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டிதர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம்.

ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?'' என்று கேட்டாள்.
ஈஸ்வரன் புன்னகைத்தார்.""தேவி... நீ சொல்வது சரிதான்.

ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.

"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே'- இப்படி மூன்று முறை சொன்னால் போதும்.

சஹஸ்ரநாமம் சொன்ன பலனை அடையலாம்'' என்று பார்வதி தேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.

சரி; இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம்.

மரா... மரா... மரா... என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா?
அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம்.

முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.

பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது.
வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும்.

நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ரநாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம்.
மேலும் தர்மங்களும் தழைக்கும்.

ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங்கள் (பதவுரை- பொழிப்புரை) எழுதியிருக்கிறா
ர்கள்.

இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம். சமஸ்கிருத மொழியைச் சரியாக உச்சரித்துச் சொல்ல வேண்டும்.

இல்லையேல் பாரத ரத்தினமாய் விளங்கிய எம்.எஸ். சுப்பு லட்சுமி அவர்கள் இசைத்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாம ஒலிநாடாவையோ குறுந்தகட்டையோ தினமும் காலையில் நமது வீடுகளில் ஒலிக்கச் செய்வதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம்.

பலருடைய வாழ்விலும் இப்படிக் கேட்டு நன்மைகள் விளைந்திருக்கின்றன.

"பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!

அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக !!

ஹரே கிருஷ்ணா!