Tuesday, 16 November 2021

இடுப்பு வலி போயே போச்சு

*நண்பரின் பதிவிலிருந்து....  (அவசியம் படியுங்கள். அருமையான பதிவு)*
.  
இடுப்பு வலியும்! Centre of Gravity யும்!

இடுப்பு வலிக்கும்(Disc prolapse) Centre of Gravity க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா??  
என்னுடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

2014-ஆம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்த பொழுது தங்கவே முடியாத இடுப்பு வலி வந்தது தாம்பரத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன்.

அவர்கள் உங்களுக்கு வந்திருப்பது Disc  Prolapse என்னும் வியாதி. முதுகெலும்பில் உள்ள இரண்டு எலும்புகளுக்கு நடுவில் உள்ள சவ்வு பிதுங்கி வெளியே வந்துவிட்டது. இதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு ஆபரேஷன் செய்து  வெட்டி எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

உண்மையில் வலி தாங்கவே முடியவில்லை. ஏதேதோ செய்தும் வலி சரியாகவில்லை. வலி என்றால் உயிர்போகும் வலி. அது போன்ற வலியை அனுபவித்ததே கிடையாது. பெல்ட் சிகிச்சை எல்லாம் கொடுத்தார்கள். அப்பொழுதும் சரியாகவில்லை.  வலி பொறுக்க முடியாமல் ஆபரேஷன் கூட செய்து விடலாம் என்று நினைத்தேன்.

அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியிலிருந்து UK சென்றே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. வலியுடன் UK பயணம்.

அங்கு Leamington Spa என்னும் ஊரில் வேலை. என்னுடைய கெட்ட நேரம் நான் தங்கியிருந்த இடத்திலிருந்து கம்பெனிக்கும் செல்லும் வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டு விட்டது சில காரணங்களுக்காக. தினமும் 3.5 கிலோ மீட்டர் நடந்தே தான் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

உண்மையில் வாழ்க்கையிலேயே அவ்வளவு கஷ்டப்பட்டு நடந்தது கிடையாது. முதல்நாள் நடந்து சென்று கம்பெனிக்கு சென்று விட்டு வந்து படுத்து உறங்கி அடுத்த நாள் எழுந்திருக்கும் பொழுது வலி சிறிது சரியானது போல் தோன்றியது. அடுத்த நாளும் நடந்து சென்றேன் வலி மேலும் குறைந்தது.  இவ்வாறாக ஒரு நான்கு நாட்களில் வலி முற்றிலும் சரியானது.

மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வலி சரியானது மகிழ்ச்சியாக இருந்தாலும் அது எப்படி சரியானது என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

இந்தியாவில் இருந்ததற்கும் இங்கிலாந்தில் இருந்ததற்கும் ஒரே ஒரு வித்தியாசம் நான் கம்பெனிக்கு நடந்து சென்றது மட்டுமே.

இணையத்தில் தேடிய பொழுது ஒருவர் தன்னுடைய blog இதில் Centre of Gravity கும் இடுப்பு வலிக்கும் உள்ள தொடர்பை பற்றி பகிர்ந்திருந்தார்.

Centre of Gravity என்பது ஒரு பொருளின் எடை முழுவதும் ஒரு புள்ளியில் குவிந்து இருக்கும். அந்தப் பொருளின் எடையானது அந்தப் CG புள்ளியின் வழியே பூமியை நோக்கி விழும். அந்த எடை என்னும் விசையானது பொருளின் அடித்தளத்தில் விழுந்தால் அந்த பொருள் எந்த பாதிப்பும் இன்றி நிற்கமுடியும்.  அடித்தளத்தை தாண்டி விழுந்தால் அந்த பொருள் கீழே விழுந்துவிடும்.

இதே போன்று ஒரு விதியை கொண்டுதான் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் இன்னும் சாயாமல் இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் அதன் எடையானது பைசா நகர கோபுரத்தின் அடித்தளத்தில் விழுகிறது.

எப்பொழுது அதன் எடையானது அதன் அடித்தளத்தை தாண்டி  விழுகிறதோ அந்த கோபுரம் கீழே விழுந்துவிடும்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கூட அப்படித்தான் வேலை செய்கிறது

பஸ்ஸில் நடத்துனரை பார்த்தால் கால்களை அகட்டி வைத்து இருப்பார். ஏனென்றால் எந்த ஒரு நிலையிலும் அவருடைய எடையானது அவரின் பாதத்திற்கு உள்ளே விழுந்து விடும். அதனால் அவர் கீழே விழுவதில்லை.

அதேபோல் நம்முடைய உடம்பில் Centre of Gravity  மாறினால் அது நம் உடம்பை ஒரு பக்கமாகப் பிடித்து எடுக்க ஆரம்பித்துவிடும் அதனால் ஜவ்வு பிதுங்கி வெளியே வருகிறது இதேபோல் Centre of gravity புள்ளி மாறுவதற்கு சில காரணங்கள்  
1. உடல் எடை அதிகரிப்பது  
2. காலை நேராக வைத்து நடக்காமல் சாய்ந்து நடப்பது  
3. சரியான நிலையில் அமராமல் இருப்பது  
4. பேண்ட்டின் பின்புறம் மிகப்பெரிய பர்ஸ் வைப்பது

இதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால் உங்களுடைய செருப்பு அல்லது ஷூ ஒரு பக்கமாக தேய்ந்து இருக்குமானால் உங்களுக்கு இந்த பிரச்சினை வரலாம் என்று அர்த்தம்.

எனக்கு அந்த பிரச்சினை வந்த சமயங்களில் நான் மிகப்பெரிய பர்ஸ் வைத்திருந்தேன் மற்றும் எனக்கு புதிதாக வந்த சாய்வு நாற்காலியில் நேராக அமர முடியாமல் ஒரு சைடாக அமர வேண்டிய நிலை இருந்தது.

அதன்பிறகு பாண்டில் பர்ஸ் வைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். மற்றும் நாற்காலியை மாற்றி விட்டு நேராக அமர ஆரம்பித்தேன். எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் 2 to 3 கிலோ மீட்டர் வாக்கிங் சென்றுவிட்டு வந்தால் எனக்கு அந்த வலி சரியாக ஆரம்பித்தது.

அதன்பிறகு ஒரு இரண்டு மாதங்களுக்கு வலி அடிக்கடி வந்தது. அதன் பிறகு கடந்த ஏழு வருடங்களாக ஒரு சிறு வலியும் கூட வருவதில்லை.

நடக்கும் பொழுது கால்களை நேராக வைத்து மார்ச் பாஸ்ட் செய்வது போல் நடக்க வேண்டும் அப்பொழுதுதான் Centre of Gravity கால்களுக்கு நடுவில் சரியாக விழும். கால்களை அகட்டி வைத்து நடந்தாலும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை சென்னை மருத்துவர்கள் கூறியதுபோல் ஆபரேஷன் செய்திருந்தால் என் முதுகுத்தண்டு நிலைமை இப்பொழுது என்ன??

இடுப்பு வலி வருவதற்கு இந்த அறிவியல் கான்சப்ட் உண்மை என்றால் இது போன்ற சிம்பிளான தீர்வுகளை ஏன் மருத்துவர்கள் கூறக்கூடாது???

இப்பொழுதெல்லாம் நான் பாடம் நடத்தும் பொழுது Centre of Gravity பற்றிய வகுப்பில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். எதிர்கால மருத்துவர்கள் அவர்கள் தானே!

இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை  மருத்துவ நண்பர்கள் கூறலாம்!

Sunday, 14 November 2021

நேர்மை

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.

ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. 

வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.

அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.

அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.

அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.

உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.

பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.

வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.

அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.

உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.

உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

1. எனது நேர்மை.
2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.

வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.

Tuesday, 9 November 2021

குளிர்கால மருத்துவம்

*குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால்*

Middleage, senior citizens க்கு 
பொதுவாக ஒரு problem வரும்.

*Cramp...*

பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு.

*சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.*

அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்.

Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து  அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable.

பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும்.

ஆயுர்வேதம், வர்மம்  பயின்ற என் நண்பர் ,எளிமையான ஒரு தீர்வு கூறினார்.

வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலேயே இருங்கள். Cramp சரியாகிவிடும். வந்த சுவடே தெரியாது.

அதே போல இடது பக்கத்தில் Cramp வந்தால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள்.

படுத்திருக்கும் போது வந்தாலும், 
காதை ஒட்டியவாறு கைகளை 
நீட்டுங்கள். சரியாகிவிடும்.

 நண்பர்கள், உறவுகள் பலரும் பயனடைந்தார்கள். நீங்களும் 
முயற்சித்து பார்க்கலாம்.

*Eye Dryness:-*

இதுவும் அப்படித்தான்.வலியும் இருக்கும். காலையில் கண்ணை திறப்பதே சிரமமாக இருக்கும்.

இரவு தூங்கும் போது கண்டிப்பாக Eye drops போட வேண்டும். இல்லாவிடில் தூக்கம் கெடும். காலையில் சிரமம்.

*இதற்கும் ஒரு எளிய மருத்துவம்:-*

இரவு தூங்கும் போது தொப்புளை சுற்றி அரை அங்குலம் வரை தேங்காய் எண்ணையை தடவி, லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

ஒரு வாரத்திலேயே, Eye drynessல் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும். இன்னும் சில
உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

எனக்கு தெரிந்தவர்
பத்து வருடங்களாக, Eye drops உபயோகித்தவர். அடிக்கடி Eye Checkup.

இப்போது பெரிய Relief. முதலில்  இந்த சிகிச்சையை  சொன்னபோது சிரித்தார்கள் உபயோகப்படுத்தியவுடன், நல்ல முன்னேற்றம்.
Eye drops மிகவும் குறைத்து விட்டார். 
No more doctor Visit.

தூக்கமின்மை :

பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வராது. Disturbed sleep due to worries,  etc etc.

*எளிய மருத்துவம் :-*

தூங்க போகுமுன்,  தேங்காய் எண்ணெய் மூன்று அல்லது நான்கு drops எடுத்து. வலது பாதத்திற்கு அடிபாகத்தில் (உள்ளங்காலில்) மென்மையாக தடவி மூன்று நிமிடம் லேசாக மஸாஜ் செய்யுங்கள். அதே போல இடது காலிலும் செய்யுங்கள். பின் படுத்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக வரும். 

நீங்களும் முயன்று பார்க்கலாம்.
Sleeping tablets கூட நாளடைவில்
தவிர்த்து விடலாம்.

ஒரு மருத்துவ நண்பர் சொன்னது:

தொப்புள்  72000 நரம்புகள் குவியும் இடம்.
அங்கு தேங்காய் எண்ணயை தடவும் போது, நரம்புகளில் இருக்கும் குறைபாடுகளை சமன் செய்கிறது. அதே போலதான், உள்ளங்காலிலும். 

Acupressure பயிற்சிகளில் கூட உள்ளங்கால் முழுமையும் விரல்களால் அழுத்தி, உடலின் எல்லா உறுப்புகளிலும் உயிர் சக்தி தங்கு தடையில்லாம பயணிக்க செய்வார்கள்.

*உடல் நலத்தில் கவனம் தேவை.*

ஆங்கில மருந்துகளை மெல்லகுறைத்து கொண்டு மாற்று மருத்துவத்தில் கவனம் செலுத்துதல் சிறப்பு.

Monday, 8 November 2021

மீன்பிடிக்க கற்றுக்கொடு

*நல்ல கதை ஒன்று* 
 *படியுங்கள்* 

முன்னொரு காலத்தில் நல்ல குணமும் ஒழுக்கமும் நிறைந்த மனிதன் ஒருவன், தன் மனைவி குழந்தைகளோடு புனித யாத்திரை மேற்கொண்டார்.  பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.   புனித யாத்திரையை அவர் மேற்கொண்ட காலமோ,  கடுமையான கோடை காலம் ஆகும்.  
பல மைல்கள் தூரம் கடந்த பிறகு,  அவர்கள் கொண்டு வந்து இருந்த தண்ணீரும் காலியாகி விட்டது.   குடும்பமே தண்ணீர் தாகத்தால் வருந்தியது.  கடுங்கோடை என்பதால்  வழியில் எங்குமே தண்ணீர் இல்லை.   குழந்தைகள் தாகத்தால் தவித்தனர்.  இந்த மனிதனுக்கோ எப்படி இந்த பிரச்சனையைத் தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தார்.   எந்த வழியும் தெரியாமல்,  கடவுளிடம் முறையிட ஆரம்பித்தார்.    கடவுளிடம்,  ஓ பிரபுவே!  தயவு செய்து இந்த சூழ்நிலையை சமாளிக்க நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்.  சிறிது நேரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில், ஒரு சந்நியாசி ஓரிடத்தில் உட்கார்ந்து  தியானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.  அவரிடம் சென்று தன் பிரச்சனையைக் கூறினார்.   சந்நியாசி அவரிடம்,  “இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு சிறிய ஆறு வடக்கு நோக்கி பாய்ந்து செல்கிறது.   நீ அங்கு சென்று,  உங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம்”  என்றார்.    அந்த மனிதன் இதைக்  கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.   சந்நியாசிக்கு நன்றி கூறினான்.
அவனது மனைவியாலோ  அல்லது குழந்தைகளாலோ  இனிமேல்  ஒரு அடி கூட  நடக்க முடியாத நிலையில் இருந்தனர்.  அவர்களை அங்கேயே இருக்க வைத்து விட்டு, அந்த மனிதன் தண்ணீர் கொண்டு வரச் சென்றான்.  தண்ணீரை எடுத்துக் கொண்டு திரும்பி வரும்போது,  அவன் எதிரே ஐந்து பேர்கள் வந்தனர்.   அவர்களும் கடுமையான தாகத்தால், தவித்த படி இருந்தனர்.    அந்த மோசமான நிலையில்,  அவர்களைப் பார்த்த, அந்த நல்ல மனிதன் தான் கொண்டு வந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டு  மீண்டும் ஆற்றுக்கு சென்றான்.
இரண்டாவது முறையாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் போது,  திரும்பவும் தாகத்தால் தவிக்கும் சில பேரை பார்க்கிறான்.   திரும்பவும் தண்ணீரைக் கொடுத்து விடுகிறான்.   மூன்றாவது முறையாக தண்ணீரை எடுத்துக் கொண்டு  தன் குடும்பத்தினரிடம் வருகிறான்.   மனைவியும்,  குழந்தைகளும் மயக்கம் அடைந்து கீழே விழுந்து கிடக்கின்றனர்.   உணர்விழந்த நிலையில் கிடக்கும் அவர்கள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பிப் பார்க்கிறான்.   அவர்கள் விழிக்கவே இல்லை.  
அவன் அழுது கொண்டே,  அந்த சந்நியாசியிடம் ஓடிச் சென்று,  அவர் பாதங்களில் விழுந்து கதறுகிறான்.  “நான் என்ன பாவம் செய்தேன்?  என் குடும்பம், இந்த நிலையில் இருக்கிறதே!  நான் தாகத்தில் தவிக்கும் மற்றவர்களுக்கு உதவிதானே செய்தேன்;  அது ஒரு புனிதமான செயல்தான்;  என் குடும்பத்தினரைக் காப்பாற்றுங்கள்”.
சந்நியாசி அவனைப் பார்த்து,  “ஓ புண்ணிய ஆன்மாவே!  நீ ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை, தாகத்தோடு வந்த  மற்றவர்களுக்குக் கொடுத்து உன் பாத்திரத்தைக் காலிப் பாத்திரம் ஆக்கினாய்.    இதிலிருந்து,  உனக்கு என்ன நன்மை கிடைத்தது?”
அந்த மனிதன்,  “உதவி செய்வதால்  என்ன கிடைக்கும் என்பதை நான் ஒரு போதும் நினைத்துக் கூட பார்ப்பது இல்லை.   எனக்கு சரி என்று நான் உணர்ந்ததை செய்தேன்.   எந்த சுய நலமான எண்ணமும் எனக்கு இல்லை” என்றான்.  
அதற்கு சந்நியாசி, “ இந்த மாதிரி நீ செய்த நல்ல காரியங்களுக்கும்,  நல்ல கருத்துக்களுக்கும்  என்ன பயன் கிடைத்தது?   நீ உன்னுடைய  கடமையை நிறைவேற்றாமல்,  மற்றவர்களுக்கு உதவி செய்வது எப்படி?  உன்னுடைய மனைவி, குழந்தைகளுக்கு நீ உதவி செய்யாமல் மற்றவர்களுக்கு  உதவி செய்வது எப்படி நன்மை தரும்?  நல்ல செயல்களை செய்வதற்கு நீ  இன்னும் சரியாக கற்க வில்லை.   நான் செய்த மாதிரி, நீ செய்திருக்க வேண்டும்” என்றார். 
எப்படி என்று அந்த மனிதன் ஆவலாகக் கேட்டான்.   அதற்கு சந்நியாசி அவனைப் பார்த்து, “நீ என்னிடம் தாகத்தைத் தணிக்க வழி கேட்ட போது, நான் உனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை.  அதற்குப் பதிலாக ஆற்றுக்குச் செல்லும் பாதையை காட்டினேன்.  இது போல் உன்னிடம் தாகமாக வந்தவர்களை நீயும் ஆற்றுக்குச் செல்ல வழி காட்டி இருக்க வேண்டும்.    அவர்களும் ஆற்றில் சென்று தாகத்தைத் தணித்து இருப்பார்கள்.   யாருமே,  மற்றவர்களுக்காக,  தங்கள் பாத்திரங்களை காலியாக்க மாட்டார்கள்.”     இந்த அறிவுரைகளை அவனுக்கு வழங்கி விட்டு,  அவனது குடும்பத்தினர்களுக்கும்  ஆசிகளைக் கொடுத்து விட்டு,  அவர் மறைந்து விட்டார்.
அந்த மனிதன் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டான்.   அவனுக்கு இப்போது எல்லாம் தெளிவாகப் புரிந்து விட்டது.   நம்முடைய பொறுப்புக்களைக் கவனிக்காமல்,  எந்த நல்ல காரியத்தையும் செய்வதில் அர்த்தம் இல்லை என்பதை புரிந்து கொண்டான்.    நமது கடமைகளை நன்கு செய்து  அதன் மூலம்  மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்து,  நல்ல வழிமுறையையும்  அவர்களுக்குக் காட்ட வேண்டும்.   விவேகத்தோடு  நாம் உதவி செய்ய வேண்டும்.   கடவுளின் பாதையையும்,  உண்மையின் வழியையும்  மற்றவர்களுக்குக் காட்டுவதே  மிகச் சிறந்தது.
 கருத்தை உள்வாங்கி,புரிந்து நடப்போம்.

பயன் கருதாத உதவி

சென்னை பெருங்களத்தூர்.
மாலை நேரத்தை விழுங்கி இரவு மெல்ல தலை நீட்டத் தொடங்கி இருந்தது.  மப்பும் மந்தாரமுமான மழைக்கால குளிரில் வெளியே தலை நீட்டாமல் நிலவு ,   இருளைப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தது.

விடிந்தால் தீபாவளி.  ஊருக்குச் செல்வதற்காக காத்துக் கிடந்த மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய பெருங்களத்தூர் பஸ்நிலையம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. 

பஸ்நிலையத்திற்கு முன்னூறு நானூறு மீட்டர் முன்னதாகவே ஏரிக்கரையை ஒட்டி ஒரு முஸ்லிம் ,   மலிவான துணிகளை கடையாய் பரப்பி வைத்திருந்தார்.  அவர் கடை வரை பஸ்சுக்காக காத்திருப்பவர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்  பேரம்பேசி துணிகளை வாங்கிச் சென்றார்கள்.  அரைமணி நேரமாய் அந்த வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர்  மெல்ல அவரிடம் கேட்டார்.

"நானும் அரைமணி நேரமா பாக்குறேன்... நீங்க நூத்தம்பது ரூபா சொல்லி அவங்க நூறு ரூபாய்க்கு கேட்டாக் கூட குடுத்தீங்க.  சரி ... ஆனா கடைசியா ஒருத்தர் நீங்க சொன்ன நூத்தம்பது ரூபாய குடுத்தப்போ நீங்க நூறை மட்டும் எடுத்திட்டு ஐம்பதை திருப்பிக் குடுத்தீங்களே ஏன்? "

"இது ஒரே விலைனு போர்டு போட்ட கடை இல்ல தம்பி.  ஏழைபாலைங்க அவங்க பொருளாதாரத்துக்கு ஏத்தாப்புல வாங்குவாங்க.  அவங்களுக்கு தரம் முக்கியமில்ல.  சொன்ன விலையிலருந்து குறைச்சு வாங்கியே பழக்கப்பட்டவங்க.  எனக்கு நூறு ரூபா பொருளுக்கு பத்து ரூபா கெடச்சாப் போதும்.  அதனாலதான் நூத்தம்பது சொல்லி நூறுக்கு குடுத்திருவேன் .  அவங்களுக்கும் மனசு திருப்தி.  எனக்கும் நியாயமான வருமானம்.  கடைசியா வந்தவர் பேரம் பேசாம குடுத்தார்.  நானும் மனசாட்சியோட திருப்பிக் குடுத்துட்டேன்"

"ஆமா நீங்க எங்க போகணும் தம்பி "

"திருநெல்வேலி போகணும் பாய்"

"இன்னைக்கெல்லாம் பஸ் ஏறிப் போறது செத்துப் பொழைக்கிறதுக்கு சமம். பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க.  ரயில்லயோ பஸ்லயோ ஒரு மாசம் முன்னாலயே ரிசர்வ் பண்ணி இருக்கலாம்ல"

" கார் இருக்கு.  எப்பவும் அதுலதான் ஊருக்குப் போவேன்.   இன்னைக்கு மத்தியானம்தான் காருக்கு அடில போய் சென்சார் ஒயர எலி கடிச்சிருச்சு.  ஒர்ஷாப்ல உடனே ரெடி பண்ண முடியாதுனுட்டாங்க.   அதான் பஸ்ல போலாம்னு பார்த்தா,   ரொம்ப சிரமமாயிரும் போலயே .. "

"கொஞ்சம் லேட்டானா இடம் கிடைக்கும்.  வெயிட் பண்ணுங்க தம்பி"  என்றவர் மணி பார்க்கிறார்.  7.25
என்றது கடிகாரம்.   "அடடா இரவு தொழுகைக்கு நேரமாச்சே.  தம்பி நான் தொழுகைக்கு போய்ட்டு வாரேன்.  உங்களுக்கு பஸ் வர்ற வரைக்கும் பார்த்துக்கிறீங்களா ... பஸ் வந்தா போயிருங்க ,  ஆண்டவன் பாத்துக்குவான்" 

"சரிங்க பாய் "

அவர் தொழுகைக்குப் போய் வருவதற்குள் எண்ணூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்து வைத்திருந்தார்.  நாகர்கோவில் சென்ற இரண்டு ஆம்னி பஸ்களையும் ஒரு அரசு பஸ்ஸையும் தவற விட்டிருந்தார்.

"இந்தாங்க பாய் எண்ணூறு ரூபாய் ...    துணி கேட்டு வந்தவங்களுக்கு நீங்க விக்கிற மாதிரியே குடுத்தேன்"

"மாஷா அல்லாஹ்.... அல்லா உங்களை சுவனவாசி ஆக்கட்டும்.  ஆமா ... உங்களுக்கு ஒரு பஸ்சும் வரலயா "

"வந்துச்சு.  நான்தான் போகல பாய்.  என்னை நம்பி பொறுப்பை குடுத்துட்டு போய் இருக்கீங்க.  அதை அம்போனு விட்டுட்டுப் போயிருந்தா என்னால நிம்மதியா தீபாவளி கொண்டாடி இருக்க முடியாது பாய்"

"நல்லது தம்பி.  இன்னும் பஸ் வந்துகிட்டுதான் இருக்கும்.  கண்டிப்பா சீட் கிடைக்கும்.  ஆமா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க "

"ஒரே பையன்தான்.  ஏழு வயசாகுது"

"ஓ ...."  என்றவர்,  அந்தப் பையனுக்குத் தகுந்தாற்போல்  தன்னிடம் இருந்ததிலேயே விலையுயர்ந்த(!)  ஒரு பென்சில் பேண்ட்டையும் ஒரு டீசர்ட்டையும் ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் கொடுத்தார்.

"இந்தாங்க தம்பி.  உங்க பையனுக்கு என்னோட தீபாவளி பரிசா வச்சுக்குங்க"

"அய்யோ ... வேண்டாம் பாய்.  நீங்க சொன்னதே போதும்.  நான் ஏற்கனவே புதுத் துணி எல்லாருக்கும் எடுத்துட்டேன்."

"பரவால்ல .... நீங்க போடுற அளவு ரிச்சான துணிகள் என்கிட்ட இல்ல.  இருந்திருந்தா குடுத்திருப்பேன்.  பையன் போடாட்டாலும் உங்க வீட்டுப் பக்கம் இருக்கிற ஒரு ஏழைப் பையனுக்கு குடுங்க.  ஆனா நீங்க இதை வாங்கிக்கிட்டாதான் எனக்கு சந்தோசமா இருக்கும்"

"என்னங்க பாய் இப்படி வற்புறுத்துறீங்க"  என்று வாங்கிக் கொண்டார்.  தன் இரண்டு பைகளில் ஒன்றைத் திறந்து துணியை வைத்துக் கொண்டவர்,   அதிலிருந்து பெரிய ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை வெளியில் எடுத்து ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் நீட்டினார்.

"இந்தாங்க பாய்,   குப்தா ஸ்வீட்ஸ்.  வீட்டுக்கு கொண்டு போங்க."

"குப்தா ஸ்வீட்சா ... ரொம்ப காஸ்ட்லி ஆச்சே.   பிள்ளைக்காக வாங்கி இருப்பீங்க.  நீங்க கொண்டு போங்க தம்பி"

"அப்போ நானும் டிரெஸ்சை திருப்பித் தந்திருவேன்"

"சரிசரி குடுங்க தம்பி"  என்று ஸ்வீட்சை வாங்கி ஒரமாய் வைத்தவர்,  " வோய் கரீம் பாய் ... இங்க என்னவே பண்றீரு"  என்ற குரல் கேட்டு திரும்பினார்.  கடையை ஒட்டி ஓரமாய் நின்றிருந்த காரில்,   ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி சார்லஸ் அமர்ந்திருந்தார்.  பக்கத்து இருக்கையில் அவர் மனைவி.

"தீபாவளி வியாபாரம் பாக்குறேன் வோய்.  பாத்தா தெரியல "

"பத்து வருசம் முன்னால இருந்த அந்த நக்கலும் நையாண்டியும் இன்னும் உம்மை விட்டுப் போகல வோய் .... எப்படி இருந்த மனுசன்.  தாம்பரத்துலயே கொடிகட்டிப் பறந்த ஜவுளிக்கடை முதலாளி.  உன் கடைய ஒட்டி அந்தப் பாலம் மட்டும் வராம இருந்திருந்தா உன் கடையும் இடிஞ்சிருக்காது.  நீயும் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டே.   எல்லாம் நேரம் வோய்"

"முடிஞ்சத பேசி பிரயோஜனம் இல்ல சார்லசு.  நடப்பதெல்லாம் நன்மைக்கே.  எல்லாம் அவன் செயல்"  என்று மேலே கையை உயர்த்தினார் பாய்.

*******

அதே நேரம் திருநெல்வேலி செல்பவருக்கு போன் வந்தது.  

"என்னடி சரசு "

"ஏன்னா பஸ் ஏறிட்டேளா"

"இன்னும் இல்ல.   பஸ் ஸ்டேன்ட்லதான் வெயிட் பண்ணின்டிருக்கேன்."

"பட்டுக்கோட்டைலருந்து அத்திம்பேர் குடும்பமெல்லாம் வந்துட்டாங்கோனா.  பத்மநாபன் இன்னும் பஸ்ஸே ஏறலயா.  பணம் போனா பரவாயில்லே.  டாக்சி பிடிச்சுண்டு வரச் சொல்லுனு சொல்றாங்கோ."

"இன்னும் அரைமணிநேரம் வெயிட் பண்ணிட்டு பஸ் கிடைக்கலேனா டாக்சி பிடிச்சுடலாம்னுதான் இருக்கேன்"

"ஏன்னா ... ரகு,   குப்தா ஸ்வீட்லருந்து பலகாரம் கேட்டானே ... வாங்கிட்டேளா "

"அந்தப் பக்கம் போக பொழுதே ஒழியலடி.  அங்க வந்து சாந்தி ஸ்வீட்ஸ்ல வாங்கிடலாம்"

"என்னமோ போங்கோ ... ரகுவை நீங்க சமாளிச்சுண்டா சரி"

""சரி போனை வை.  பஸ் ஏறிட்டு போன் போடுறேன்"

*******

"ஏம்பா சார்லசு ... நாகர்கோயிலுக்கா போற"

"ஆமா வோய்.  தொடர்ச்சியா நாலுநாள் லீவு.  அதான் ஊரைப் பாக்க போய்ட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் "  

"வழில யாரையாவது பிக்கப் பண்றியா"

"அதெல்லாம் இல்ல வோய்.  நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்."

"அப்போ எனக்கு ஒரு உதவி செய்வியா"

"என்ன செய்யணும் ... உன்னை தூக்கிட்டுப் போய் திருநெல்வேலில போடணுமா"  என்று கலகலவென சிரித்தார் சார்லஸ்.

"அட கூவ.  என்னை இல்லடே ... அந்த தம்பிய கூட்டிப்போய் திருநெல்வேலில இறக்கிரணும்"

"அந்த தம்பி யாரு"

"என் நண்பர்தான்"

"எனக்குத் தெரியாம உனக்கு ஒரு நண்பனா வே ... ரொம்ப மாறிட்ட வோய்.  உன் நண்பர்னு சொல்ற.   உன் நண்பர் எனக்கும் நண்பர்தான்.  மூணாம் மனுசன் மாதிரி கேட்டுக்கிட்டு நிக்கிற ... உள்ள ஏத்தி விடும்வோய் ... "

"தம்பி ... இவன் சார்லஸ்.  என் பால்ய நண்பன்.  இவன் நாகர்கோவில் போறான்.  உங்களை திருநெல்வேலில இறக்கிருவான்.  ஏறிப் போங்க தம்பி"

பத்மநாபனுக்கு சட்டென்று முகம் பிரகாசமாகியது.  கையை பிடித்துக் கொண்டார்.  "பேருதவி செஞ்சீங்க பாய்"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.  ஏறுங்க என்ற பாய்,   மறக்காமல் சொன்னார்.... "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் தம்பி"

"ரொம்ப தேங்க்ஸ் பாய் "  என்ற பத்மநாபன் காரில் ஏறி அமர்ந்தார்.

"டேய் ... ஆக்கங்கெட்ட கூவ ... மழை வர்ற மாதிரி இருக்கு.  துணியெல்லாம் மூட்டை கட்டிட்டு வீடு போய் சேரு"

"சரிடா ... ரோடெல்லாம் ரஷ்ஷா இருக்கும்.   பத்திரமா பார்த்துப் போ."

அனைவரும் கைகளை ஆட்டிக் கொண்ட பின் கார் மெல்ல ஊர்ந்து போகத் தொடங்கியது.

கரீம் பாய் துணிகளை எல்லாம் பேக் செய்து விட்டு ,  அந்த ஸ்வீட் பாக்ஸை இப்போதுதான் கூர்ந்து கவனிக்கிறார்.  அதன் மேல்பகுதியில் ரோஸ் நிற இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்று செருகப்பட்டிருந்தது.  கள்ளம் கபடமில்லாமல் காந்தி தாத்தா பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

"யா அல்லாஹ்"  என்று அனிச்சையாய் கார் சென்ற திசையை திரும்பிப் பார்க்கிறார்.  அது பல்லாயிரம் சிவப்பு புள்ளிகளுக்கிடையே கலந்து போயிருந்தது,   மனதால் கலந்து போன இந்த மூன்று மனித(ங்)ர்களைப் போல !!

#அனைவருக்கும்_இனிய_தீபாவளி_நல்வாழ்த்துகள்

அன்பே அம்மா

இந்த பதிவை நிச்சயம் படியுங்கள்..!! 

🗣 (டி என் --சேஷன் இவரை எல்லோரும் அறிவீர்கள்..!!

இவர்  தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது,

 உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு  தனது மனைவியுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். 

 வழியில், 
நிறைய  குருவிக் கூடுகள் நிறைந்த ஒரு பெரிய 
மாந்தோப்பை அவர்கள் பார்க்க நேர்ந்தது .

 அதைப் பார்த்ததும், 
அங்கு சென்றனர் இருவரும் எல்லா குருவி கூடுகளும் பார்க்க மிக அழகாக இருந்தன.
 
 அந்த அழகில் லயித்து மயங்கிய சேஷனின் மனைவி 
இரண்டு கூடுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினார்.

  அந்த மாந்தோப்பில்  மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 
ஒரு சிறுவனை, 
உடன் வந்த பாதுகாவலர்கள் மூலம்
 அழைத்து வர செய்து , கூடுகளை எடுத்துத் தரக் கோரி, 
அச்சிறுவனுக்கு ₹10/- கொடுப்பதற்கு முன் வந்தார் சேஷனின் மனைவி .
 
 ஆனால் சிறுவனோ தான் கூடுகளை தரமுடியாது நீங்கள் தரும் காசும் வேண்டாம் என  மறுத்துவிட்டான்.
 
   உடனே, சேஷன்  அவனிடம் பேரம் பேசி  ₹50/- தருவதாக கூறி தொகையை உயர்த்தி பார்த்தார் .

 சேஷன் ஒரு பெரிய அதிகாரி என்பதால், அவர் சொன்னதைச் செய்யும்படி உடன் வந்த காவலர்கள்  கூடுகளை எடுத்து தரும்படி சிறுவனை வற்புறுத்தினர்.

சிறுவன் சேஷனையும் அவரது மனைவியையும் பார்த்து அழுது கொண்டே 
    "சாப்ஜி!  நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும்  நான் அவ்வாறு செய்யமாட்டேன்" என்று சொன்னான்.

 சேஷனும் அவர் மனைவியும் சிறுவனையே பார்க்க அவன் அழுது கொண்டே மீண்டும் பேச துவங்கினான்.
  
    "தாய்க் குருவி, தன் குஞ்சுகளுக்கான உணவுகளை தேட  வெளியே சென்றுள்ளது திரும்பி வந்து அவற்றை அங்கே காணவில்லை என்றால் அந்த தாய் குருவி  அழுவாள். 

அதைப் பார்க்க எனக்கு மனம் இல்லை."என்று கூறி கொண்டே விம்மி அழுதான் 
  அவன் கூறியதை கேட்ட சேஷனும் அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்தனர்.

 சேஷன் சொன்னார்!
  "அந்தச் சிறுவனின் முன்னால் நான் பெரிய ஐ.ஏ.எஸ் என்பதெல்லாம் போய் அவன் சொன்னதைக் கேட்டு என் மனம் உருகியது. 

 ஒரு சாதாரண கடுகு விதை போல நான் அவனுக்கு முன்னால் இருந்தேன்.
 அவர்கள் தங்கள் விருப்பத்தைக்
கை விட்டனர்.திரும்பி வந்த பின்னரும், இந்தச் சம்பவம் அவரைக் குற்ற உணர்ச்சியுடன் பல நாட்கள் தொடர்ந்தது என்கிறார் சேஷன்.

 அன்புக்கு அன்பையே கொடுப்போம் சின்ன சின்ன ஜீவனுக்குள்ளும் அன்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு நடப்போம்.

 அறிவை கொண்டு அன்பை எடை போட வேண்டாம் அன்புக்கு ஒரு நாளும் அறிவு நிகர் ஆகவே ஆகாது.

 வாழ்க வளமுடன்... 🧚‍♀️🧚‍♀️

Saturday, 24 July 2021

சைவம்

*70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்*

*சைவம்*

*1. சமயம் என்றால் என்ன?*
மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

*2. சைவம் என்றால் என்ன?*
சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

*3. சைவ சமயம் எப்போது தோன்றியது?*
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

*4. யார் சைவர்?*
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

*5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?*
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

*6. சமயக் குரவர்கள் யாவர்?*
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்

*7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்

*8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்

*9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?*
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.
சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

*10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?*
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

*11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?*
பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

*12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?*
திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.
இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

*13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?*
திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

*14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.*
மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

*15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக*
அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.
1. குருவருள்
2. பரையின் வடிவம்
3. அஞ்செழுத்து
4. கோயில் திறம்
5. சிவன் உருவம்
6. திருவடிகள் பெருமை
7. அருச்சனைச் சிறப்பு
8. அடிமைத் திறம்

*16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.*
மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

*17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?*
18,497 பாடல்கள்.

*18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?*
மொத்தம் பாடியவை கிடைத்தவை
திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383
திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312
சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100=மொத்தம் 1,03,000 795

*19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி
திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்
மாணிக்கவாசகர் - திருவாதவூர்

*20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்

*21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?*
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

*22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?*
அறுபத்து மூவர்.

*23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் ் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?*
சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப·றொடை
தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்

*24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?*
பரஞ்சோதி முனிகள்

*25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?*
49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

*26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?*
திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

*27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?*
1. சிவஞான சித்தியார்
2. இருபா இருப·து

*28. சித்தாந்த அட்டகம் - விளக்குக*
பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.
1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.

*29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?*
வாகீச முனிவர்

*30. வேதங்கள் - குறிப்பு தருக.*
வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

*31. ஆகமங்கள் - குறிப்பு தருக.*
ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

*32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?*
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
அகச்சமயம் அகப்புறச்சமயம்
1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்
2. பேதவாத சைவம் 2. மாவிரதம்
3. சிவசமவாத சைவம் 3. காபாலம்
4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்
5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்
6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்
புறச்சமயம் புறப்புறச்சமயம்
1. நியாயம் 1. உலகாயதர்
2. சாங்கியம் 2. சமணர்
3. யோகம் 3. செளத்திராந்திகர்
4. மீமாஞ்சை 4. யோகசாரர்
5. வேதாந்தம் 5. மாத்யமிகர்
6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்

*33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.*
முடிந்த முடிபு.

*34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?*
திருமந்திரம்
"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே" 

*35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?*
1. தர்க்க ரீதியானது (Logic)
2. அறிவியற் பூர்வமானது (Scientific)
3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5. உலகளாவியது (Universal)
6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.

*36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.*
'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

*37. அளவை - குறிப்பு தருக.*
நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.
1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)
2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)
3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)
மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

*38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?*
1. இறைவன் - பதி
2. உயிர் - பசு
3. மலம் - பாசம்
இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"

*39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?*
இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

*40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?*
பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.
பொது இயல்பு
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
(எ.கா) நீரில் வெம்மை
சிறப்பு இயல்பு
ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.
(எ.கா) நீரின் குளிர்ச்சி

*41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?*
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

*42. மும்மூர்த்திகள் யாவர்?*
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்
அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள 

*43. இறைவனின் எண்குணங்கள் யாவை?*
1. தன் வயம் உடைமை.
2. தூய உடம்பு உடைமை.
3. இயற்கை உணர்வு உடைமை.
4. முற்றுணர்வு உடைமை.
5. இயல்பாகவே பாசமின்மை.
6. பேரருள் உடைமை.
7. முடிவில் ஆற்றல் உடைமை.
8. வரம்பில் இன்பம் உடைமை.

*44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?*
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?*
ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.

*46. கேவலம், சகலம், சுத்தம் - குறிப்பு தருக.*
கேவலம்:
உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.
சகலம்:
கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.
சுத்தம்:
உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.

*47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?*
1. நனவு - சாக்ரம்
2. கனவு - சொப்னம்
3. உறக்கம் - கழுத்தி
4. பேருறக்கம் - துரியம்
5. உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்

*48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?*
ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.

*49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?*
இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் 'இருள்' என்ற சொல்லால் பேசப்படும்.

*50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?*
சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.
சஞ்சிதம்: (பழவினை)
பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்
பிரார்த்தம்: (நுகர்வினை)
இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)
ஆகாமியம்: (வருவினை)
இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.

*51. வினை என்றால் என்ன?*
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும். 

*52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?*
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?*
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.

*54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?*
மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.

*55. மாயை - குறிப்பு தருக.*
மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

*56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?*
சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.

*57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?*
'அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.

*58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?*
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.

*59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?*
குரு, லிங்க, சங்கம, வழிபாடு.
குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.
லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது. 

*60. சரியை, கிரியை, யோகம், ஞானம் - விளக்குக*
சரியை: உடலால் வழிபடுவது.
கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.
யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.
ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.

*61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.*
திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.
சி-சிவன்
வ-சக்தி(அருள்)
ய-உயிர்
ந-மறைப் பாற்றல்
ம-ஆணவ மலம்
என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.
திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.

*62. தீக்கை என்றால் என்ன?*
தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.
தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்
பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.
இது மூன்று வகைப்படும் அவை
1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்

*63. இருவினை ஒப்பு என்றால் என்ன?*
நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.

*64. மலபரிபாகம் என்றால் என்ன?*
கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும். 

*65. சத்திநிபாதம் என்றால் என்ன?*
மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.

*66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?*
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

*67. முத்தி என்றால் என்ன?*
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.

*68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?*
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.

*69. சீவன் முக்தர் - குறிப்பு தருக.*
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.

*70. தசகாரியம் என்றால் என்ன?*

ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.
தத்துவரூபம்
தத்துவ தரிசனம்
தத்துவ சுத்தி
ஆன்ம ரூபம்
ஆன்ம தரிசனம்
ஆன்ம சுத்தி
சிவ ரூபம்
சிவ தரிசனம்
சிவயோகம்
சிவபோகம்.

Tuesday, 1 June 2021

சும்மா

*நம் தாய் தமிழை "சும்மா" என்றா நினைத்தீர்கள்*
               

*"சும்மா
"*  இதைப் படியுங்கள்..
நிச்சயம் நீங்கள்  *நம் தமிழ் மொழியை நினைத்து அசந்துதான் போவீர்கள்!!*

உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து, இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!

தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.

*சும்மா* சொல்லுவோம் *தமிழின் சிறப்பை!!*

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. 

அது சரி *சும்மா* என்றால் என்ன?? 

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*

*"சும்மா"* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள்* உண்டு என்றால் உங்களால்  நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை,
நாம் அடிக்கடி கூறும் இந்த *"சும்மா"* எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

1. கொஞ்சம்  *"சும்மா"* இருடா?
(அமைதியாக/Quiet)

2.கொஞ்ச நேரம் *"சும்மா"* இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/Leisurely)

3.அவரைப் பற்றி *"சும்மா"* சொல்லக் கூடாது!
 (அருமை/in fact)

4.இது என்ன *"சும்மா"* கிடைக்கும்னு
 நினச்சியா?
 (இலவசமாக/Free of cost)

5. *"சும்மா"* கதை அளக்காதே?
 (பொய்/Lie)

6. *"சும்மா"* தான் இருக்கு.
நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் - 
(உபயோகமற்று/Without use)

7. *"சும்மா"*   "சும்மா"
கிண்டல்  பண்ணுறான். (அடிக்கடி/Very often)

8.இவன் இப்படித்தான்.. *சும்மா* சொல்லிக்கிட்டு
இருப்பான்.
 (எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை *"சும்மா"* சொல்கின்றேன் - 
(தற்செயலாக/Just)

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா"* தான் இருக்கின்றது 
(காலி/Empty)

11.சொன்னதையே *"சும்மா"* சொல்லாதே.
(மறுபடியும்/Repeat)

12.ஒன்றுமில்லாமல்  *"சும்மா"* போகக் கூடாது - (வெறுங் கையோடு/Bare)

13. *"சும்மா"* தான் இருக்கின்றோம் - 
 (சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன்  *"சும்மா"* ஏதாவது உளறுவான் -
(வெட்டியாக/idle)

15.எல்லாமே  *"சும்மா"* தான் சொன்னேன் -
(விளையாட்டிற்கு/Just for fun)

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* என்கிற ஒரு சொல். நாம்  பயன் படுத்தும் இடத்தின் படியும்…. தொடரும் சொற்களின் 
படியும்..  *பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* என்றால் அது    *"சும்மா"* இல்லை!

*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை.

ஆனால்  தமிழ் மொழி *சும்மா* இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.

Wednesday, 28 April 2021

Veeram Unn Gunam

*அமெரிக்காவில் ஒரு கைதிக்கு தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக, விஷ நாகம் தாக்கி மரண தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.*

அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 
 ​​
அப்போது சில விஞ்ஞானிகள் அந்தக் கைதியைக் கொண்டு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து, அரசிடம் அதற்கான அனுமதியை பெற்றார்கள்.  

அந்த கைதி தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக, விஷ நாகம் தாக்கி கொல்லப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது. 

ஒரு பெரிய விஷப்பாம்பு கைதிக்கு  முன்னால் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர்கள் கைதியின் கண்களை இறுக மூடி, கைதியின் நாற்காலிக்கு அருகில் அந்த நாகம் வருவதை கைதி உணரும்படிச் செய்து ஒரு துணியால், கைதியின் கண்களைக் கட்டினர்.

அதன்பின் அந்தக் கைதி மீது இரண்டு சிறிய ஊக்குகளால் பாம்பு கொத்துவதைப் போலவே குத்தப்பட்டார்.

அந்தக் கைதி அலறியபடி, இரண்டு நிமிடங்களில் துடிதுடித்து இறந்து போனார்.

பிரேத பரிசோதனையில் கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருந்தது தெரிய வந்தது.

அந்த விஷம் எங்கிருந்து வந்தது? அல்லது கைதியின்  மரணத்திற்கு வேறு என்ன காரணம்? என்று ஆராயப்பட்டது. 

அந்த விஷம் மன அதிர்ச்சியால் அவரது சொந்த உடலால் தயாரிக்கப்பட்டது.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்,,,

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது.

அதன்படி உங்கள் உடல் ஹார்மோன்களை உருவாக்குகிறது.

90% நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் நோயெதிர்ப்பு குறைதலே ஆகும்.

நாம் தற்போது கொரோனா கால நெருக்கடியில் இருக்கிறோம். அரசாங்க பட்டியல்கள் நம்மை பதற வைக்கலாம். 

இந்த அறிக்கைகளை கண்டு அச்சம் கொள்ளாமல், நேர்மறை எண்ணம் கொள்வோம்.  அதுதான் இப்போதைக்கு  நமக்கான நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

கொரோனா மீதும், உலகில் பரப்பப்படும் வதந்திகள் மீதும் சிறிதும் நம்பிக்கை கொள்ள வேண்டாம்.

கொரோனா வீரியத்தின் பாதிப்பினால் தான் உலகில் இறப்பு பட்டியல்கள் நீள்கிறதா என்றால், அதன் பிரச்சார பயத்தினால் தான் பல உயிர்கள் போகிறது.

கொரோனா வந்தால் செத்துவிடுவோம் என்று நினைத்தாலே போதும், கண்டிப்பாக கொரோனாவும் வரும், கூடவே சாவும் வரும். 

*நம் முன்னோர்கள், "அட அது என்னடா பண்ணப் போகுது?, அட அது ஒன்னும் இல்லை, இந்தச் சின்னப் பிரச்னைக்கா இப்படி உட்கார்ந்து இருக்கற?, அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ போய் வேலையைப் பாரு போ! என்று எல்லா விஷயங்களையும் சர்வ சாதாரணமாகக் கையாண்டு இருப்பதைப் பார்த்திருப்போம்.* உண்மையிலேயே அந்த வார்த்தைகளே, பல மடங்கு மருந்து எடுத்துக் கொண்டதற்குச் சமம்.

கொஞ்சம் பச்சைத் தண்ணீரை ஒரு சிறிய மருந்துப் பாட்டிலில் அடைத்து, இதுதான் கொரோனாவுக்கான மருந்து என்று கூறி, 250 ரூபாய்க்கு நமக்கு ஒரு Syrup என்று டாக்டர் மூலம் சொல்லிக் கொடுத்தால் கூட, அதையும் டாக்டர் சொல்லிக் கொடுத்தது போலவே குடித்துவிட்டோமானால், ஆஹா ஓகோ என்று குதித்து, தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்ட நம்பிக்கை நமக்கு வந்து, அதன் காரணமாகக் கூட கொரோனா நம்மை தாக்காமல் இருக்கக் கூடும்.

நேர்மறையான எண்ணங்கள் மனதில் இருந்தாலே நோய் எதிர்ப்புச் சக்தி தானாகவே அதிகரிக்கும், மனவளம், உடல்நலம் கூடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Positivity

எதிர்மறை எண்ணங்களை 
களைவது எப்படி?
எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டு விடும். 
எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான்.  எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்து விடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. 
ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக் கொண்டே வருவதைப்போன்றது.நேர்மறை எண்ணங்களுக்கும் அதே போன்ற சக்தி உண்டு. எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும் போது அதைப் போக்க  உதவும் 10 விடயங்கள். 
1. தியானம்...
தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறை நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம்.
ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2. புன்னகை...
கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை 
வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். 
சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
3. நண்பர்கள்...
முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.
4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்..
சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.
5. குறை கூறாதீர்கள்...
உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.
6. உதவுங்கள்...
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசை திருப்ப இதை விட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை.
 அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி 
(அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.. தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. 
நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர் கொள்ளும் போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
8. பாடுங்கள்...
உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.
9. நன்றி கூறுங்கள்...
நன்றி கூறுவதை விட சிறந்த நேர்மறை உணர்வு இருக்க முடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள்.  அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.
10. நல்லதை படியுங்கள்.. 
தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்?  முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள்.  அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதே போன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்து வரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..?  முடிந்த வரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், 
அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், 
அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள்,
அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், 
அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், 
அது தலைவிதியை மாற்றக்கூடும்...

Saturday, 6 March 2021

விமர்சனங்களை விமர்சித்து பார்

*ஒருபோதும் தளர்ந்து விடாதீர்கள்..!!*

1×9=7
2×9=18
3×9=27
4×9=36
5×9=45
6×9=54
7×9=63
8×9=72
9×9=81
10×9=90

*மேலே உள்ள சமன்பாடு, ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது.*

*இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது.* 

*காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.*

*சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை, சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்.*

*"நான் முதல் சமன்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன். இவ்வாறு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு"...*

*"இதன் மூலம் உங்களுக்கொரு படிப்பினையைக் கற்றுத் தருவதே அதன் நோக்கம்"...*

*"இந்த உலகம் உங்களை எவ்வாறு மதிப்பிடுகின்றது என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்"...*

*"நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக  எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்ட முன்வரவில்லை"...*

*"ஆனால், நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விடயத்தைக் காரணங்காட்டி அனைவரும் சிரித்து கேலி செய்து விட்டீர்கள்"...*

*"நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும், இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை"...*

*"ஆனால், நீங்கள் செய்த ஒரு பிழையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருமித்து நின்று மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்"...*

*"இவைகளைக் கண்டு ஒருபோதும் தளர்ந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்து சிரித்தவர்கள், உங்களை விமர்சித்தவர்கள் முன்னால், உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்"..!!*

*💗வாழ்க வளமுடன்💗*