Wednesday, 30 August 2017

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார். “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங். அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம். என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார். இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.
அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?
சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

தினை விதைத்தவன் தினை அறுப்பான். நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.

இதுவும் கடந்து போகும்


நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல.* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

*வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.*

*தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *சோர்ந்து விட மாட்டீர்கள்.*

*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை *கௌரவிப்பீர்கள்.* அவர்கள் விலகும் போது பெரிதாக *பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.*

*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் *பொறுமை வரக்* காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

*நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் *முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.*

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

வாழ்க வளமுடன்...

Monday, 28 August 2017

அனுபவ மொழிகள்

ஓலை வீடு 
ஓட்டு வீட்டுக்கு ஏங்கும்
ஓட்டு வீடு
மாடி வீட்டுக்கு ஏங்கும்
மாடி வீடு
மாளிகைக்கு ஏங்கும்
அந்த மாளிகையும்
மரணம் வந்தால்
தூங்கும்

நாம் மறக்க வேண்டியதை எப்போதும் நினைக்கிறோம், எப்போதும் நினைக்க வேண்டியதை மறக்கிறோம்..

உலகம் நமக்காக எப்போதும் பதறாது அது அதன் போக்கில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் என்பது தான் நிதர்சனம்.

பெரிய பெரிய துயரங்களுக்கு பின்னும் பசிக்கவே செய்கிறது.

பிரிவின் உன்னதம் தெரியாத உலகமாக மாறிக்கொண்டு இருக்கிறது.
உறவுகளின் மகத்துவம் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

மனிதர்களின் மனசாட்சியை தொடுபவன் மட்டுமே நல்ல மனிதனாக இருப்பான்.

தமிழன் தன் மொழியை பண்பாட்டை விட்டுவிட தயங்குவதே இல்லை. அதை பெருமையாக கருதுவது மடமையல்லவா?

நல்ல செயல்களுக்குத் தடையாக இருக்காதே.

மற்றவர்களைப் பற்றிய உன் எண்ணம் உண்மையாக இருக்க வேண்டும். அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் கற்பனையாக நீயாகவே எண்ணிக் கொள்ளாதே. உன்னைப் பற்றியே எப்பொழுதும் அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்று கருதாதே.

உடம்பு நீ ஏறிச் செல்லும் குதிரை அதை நல்ல முறையில் நடத்து. 

ஒருவரைப் பற்றிய புரளியை மற்றவரிடம் சொல்லாதே.

புத்திசாலியாய்த் தோற்றமளிக்க வேண்டி எதையும் செய்யாதே. மூடர் கூட்டத்தில் முதலாளியென்ன தொளிலாளியென்ன...

மெளனத்தின் சிறப்பைக் கற்றுக்கொள்

ஒருவருடைய வேலையை அவரே செய்யும்படி அவர் விருப்பப் படி விட்டு விடு. அவரே உதவி வேண்டும் பொழுது செய்யத் தயாராக இரு.

எதையும், எல்லாவற்றையும் பிரிய தயாராக இரு.

மனிதனால் எதைச் செய்ய முடியுமோ அதை ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியும். வாத்தைப் போல் வாழாதே.

கடந்து போன அனுபவங்களை நினைவுகளை அசை போடாதே. பின் நோக்கினால் நீ நிலைகுலைந்து போவாய்.

உடம்பு கெட்டுப் போனால் உயிர் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும்.

நண்பர் ஒருவர் நாவரட்சியாக இருக்கும் போது மாத்திரை விழுங்கி உள்ளார் அது தொண்டையில் ஒட்டிக் கொண்டதால் உயிரிழந்துவிட்டார். ஆகவே மாத்திரை முழுங்குவதற்கு முன் சிறிது நீர் அருந்திக் கொள்வது நல்லது.
மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நோய்கள் கூடப் பெரிதாகத் தெரிவதில்லை.

Sunday, 27 August 2017

கணபதியின் அறுபடை வீடு


தம்பிக்கு  அறுபடை வீடுகள் இருப்பதுபோல்  அண்ணனான விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன.  அது பற்றி இங்கே பார்ப்போம்

1) முதல்படை வீடு     திருவண்ணாமலை
*******************
இங்குள்ள விநாயகரின் பெயர் ” அல்லல் போம் விநாயகர்” இவரைக் குறித்துப் போற்றிப் பாடப்படும் பாடலே ” அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்” என்பதாகும்.

2) இரண்டாம் படைவீடு      விருத்தாச்சலம்
***********************
இங்குள்ள  அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு  "ஆழத்துப் பிள்ளையார்” என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னிதி கொண்டுள்ளார். இறங்கிச் சென்று வழிபடப் படிக்கட்டுகள் உள்ளன. இவரைத் துதித்தால் செல்வம் கல்வி சீரான வாழ்வு அமையும்.

3) மூன்றாம் படைவீடு   திருக்கடவூர்
**********************
அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இங்குள்ள விநாயகருக்கு "கள்ள வாரணப் பிள்ளையார்” என்று பெயர். நமக்கு நீண்ட ஆயுளை அள்ளி வழங்குபவராக விளங்குகிறார். அபிராமி பட்டர்  அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான் "தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்” என்று தொடங்குகிறது அப்பாடல்.

4) நான்காவது படைவீடு    மதுரை
***********************
மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மையைத் தரிசிக்கச் செல்லும் வழியில்  "சித்தி விநாயகர்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காகக் குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரை தரிசித்து சென்றதாகத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

5) ஐந்தாவது படைவீடு     காசி மற்றும் பிள்ளையார்பட்டி
********************
காசியில் ” துண்டி ராஜ கணபதி”யாகவும், பிள்ளையார்பட்டியில்  'கற்பக விநாயகர்” ஆகவும் இருந்து அருள்பாலிக்கிறார். காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி, தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை வாரி வாரி வழங்குகிறார். காசிக்கு போக முடியாதவர்களுக்கு அதே பலனைப் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் அருளுகிறார். இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பு.

6) ஆறாம்படைவீடு      திருநாரையூர்
******************
இங்கு ” பொண்ணாப் பிள்ளையார்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிற்பியின் உளியால் போள்ளப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் இத்திரு நாமம். இத்திருத்தலத்தில்தான் தேவாரத் திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்த நம்புயாண்டார் நம்பிகளும் அவதரித்தார்.

கணபதியை அவரது படை வீடுகளுக்கே சென்று தரிசித்து சிறப்பான பயன்களைப் பெறுவோமாக !!