Friday, 28 April 2017

விவேக மொழிகள்

சுவாமி விவேகானந்தர் என்ற பெயரை ஒரு துறவியாக மாறிய பின்பு அவரே வைத்துக் கொண்டார். உண்மையிலேயே அவருக்கு விரேஷ்வரா என்ற பெயரை அவர் தாய் வைத்தார். பின் அவருக்கு நரேந்திர நாத் தத்தா என்ற பெயரை வைத்தனர்.

“உலக மாந்தர் அனைவரும் முக்தி அடைய உதவுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நான் பூமியில் பிறக்கத் தயார்” என்று அறிவித்த அவரது அமிர்த வாக்கியம் மனிதர்களின் உள்ளங்களை எல்லாம் பூரிக்க வைக்கும் கருணை வெள்ளத்தின் அடையாளம் அல்லவா!



1. ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது எதை சிந்திக்கிறானோ அதுவே அவன் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

2. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் அல்ல; தன் மீதே நம்பிக்கை இல்லாதவன் தான் நாத்திகன்.
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்,
அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்

3. நீ உன்னைப் பற்றி என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய். உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனன் ஆகிவிடுவாய். வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை ஆகிவிடுவாய். ஆகவே உன்னைப் பற்றி உயர்வாகவே நினை. பாவிகள் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நினைத்து சோர்ந்து போய் இருக்காதே. உன்னால் எதுவும் முடியும் என்பதை மறக்காதே!
பிறரை முதலில் நம்புவதைவிட்டு உன்னை நீ முதலில் நம்பு, அனைத்து ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருப்பதால், அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. "நான் எதையும் சாதிக்கவல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.
நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் விழித்துக்கொள், மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி.

4. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் கண்டு வருந்தாதே! எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் பரந்து விரிந்திருப்பதைப் பார். நம்பிக்கையோடு செயல்படு.

5. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

6. யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.

7. ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான்.

8. குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.

9.  பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.

10. தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
     தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.

11.  கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.

12. எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.

13. கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.

14. எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.

15. நீங்கள் எல்லை இல்லாத வலிமை பெற்றவர்கள். உங்களின் உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல.

16. இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். என்னால் இயலாது என்று எதையும் மறுக்காதீர்கள். எதையும் உங்களால் சாதிக்க முடியும்.

17. ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒருமுறை லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.
      பலவீனத்திற்கு பரிகாரம் பலவீனத்தை சிந்திப்பது அல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

18. கீதை படிப்பதை விட, கால்பந்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள். அதனால், உடல் வலிமை மிக்கவராக ஆகுங்கள்.

19.  சாந்தமான மனநிலை கொண்டவன் நல்லபணிகளில் ஈடுபட்டு, நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

20. மனிதர்கள், விலங்குகளை விட ஒழுக்கமானவர்களாக இல்லை. சமூக பொது அபிப்ராயம் தான் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக வைத்திருக்கிறது.

21. ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கும் தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு வருவது தான் நம் வாழ்வின் லட்சியம்.

22. தன்னை அடக்கியாளப் பழகியவன் ஒருபோதும் புற உலக விஷயங்களுக்கு அடிமையாக மாட்டான். அத்தகையவனே உலகில் வாழத் தகுதி படைத்தவன்ஆகிறான்.

23. ஒருவன் நெருப்பில் கூட தூங்க முடியும். ஆனால், வறுமை நிலையிலோ கணப்பொழுதும் கண்மூடித் தூங்க முடியாது.

24. மனமும், உடலும் ஒருமித்து இருக்கும் போது எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியே கிடைக்கும்.

25. பெரிய விஷயங்களை நிறைவேற்றும்போது இடையூறுகள் குறுக்கிடவே செய்யும். அதனால் ஆண்மையோடு தொடர்ந்து முயற்சியுங்கள்.

26. பசியால் நலிந்து வாடும் ஏழைகளிடம் ஆன்மிகம் பேசுவது அவர்களை அவமதிப்பதாகும்.

27. மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.

28. மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.

29. சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.

30. பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.

31. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

32. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

33. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

34. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

35. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

36. நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

37 உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

38. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

39. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

40, மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.

41. ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.

42. எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.

43. மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.

44. நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.

45. ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.

46. பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

47. துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.

48. கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.




No comments: