Thursday, 11 January 2018

சங்கே முழங்கு

இறைவன் அவர்களின் நம்பிக்கையைக் கண்டு அவருக்கு நலமளித்தார்...

அந்த கிராமத்திற்கு முனிவர் ஒருவர் வந்திருந்தார். வந்தவர் ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். ஆனால், அந்த ஊரில் இருந்த யாருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை, ஒருசிலரோ அவரைக் கேலிசெய்தார்கள். இதனால் அவர் கோபத்தில் அந்த ஊருக்கு சாபமிட்டார், ”இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும்”. இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.

மேலிருந்து இதைக் கவனித்த இறைவன் -  பரந்தாமன் - தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் (இறைவன் – பரந்தாமன் - சங்கு ஊதினால்தான் மழை வரும் என்பது முன்னோர்களின்  நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்துவிட்டான்.

இது நடந்த சில நாட்கள் கழித்து அந்த ஊரில் அதிசயம் ஒன்று நடந்தது. ஆம், அவ்வூரில் இருந்த ஓர் உழவன் மட்டும் கலப்பையைத் தூக்கிக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்துகொண்டு இருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு. அவனிடம் கேட்டே விட்டனர், “நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா?” என்று. அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம், “50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும். அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான்.

இது வானத்தில் இருந்த இறைவனுக்குக் கேட்டது.  அவரும் யோசிக்க ஆரம்பித்தார். “50 வருசம் சங்கு ஊதாமல் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று நமக்கு மறந்து போயிருமே” என்று நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். மறுகணம் இடி இடித்தது. மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த உழவின் நம்பிக்கை ஜெயித்து விட்டது

எதையும் நம்பிக்கையோடு செய்தால், அது நிச்சயம் நடக்கும் என்பதை இந்தக் கதையின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

எனவே, இறைவன் வழியில் நடக்கும் நாம் அவர்மீது ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு வாழ்வோம், நம்பிக்கைத் தளர்வோடு இருக்கின்றவர்களுக்காகவும் நாம் நம்பிக்கையோடு ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

No comments: