தினம் ஒர் சித்தர் வரலாறு
.மகான் சுகப்பிரம்மர்
சுகம் என்றால் கிளி. தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர். குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. வியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. எதையும் குருமுகமாக அறிய வேண்டும் என்ற நியதிப்படி வேதவியாசருடைய தவப்புதல்வர், பிரகஸ்பதியின் சீடனானார். ஞானக்குழந்தையாக அனைத்தையும் அறிந்த தெளிவுடன் தேஜஸுடன் வளர்ந்து வந்த சுகருக்கு உரிய வயது வந்ததும் பரமேஸ்வரர் உமையுடன் வந்து உபநயனம் செய்வித்தனர். பால பிரம்மச்சாரிக்கு வேண்டிய தண்டமும் மான் தோலும் வான் வெளியிலிருந்து அவரருகே வந்து விழுந்தன. சுகஹா என்னும் வடமொழி சொல்லுக்கு கிளி என்று பொருள். எவரும் கற்றுத்தரவில்லை என்றாலும் இயல்பாகவே வேத வேதாங்கங்களைச் சுகப்பிரம்மரிஷி அறிந்திருந்தார்.
பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜசூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒருலட்சம் பேர் சாப்பிட்டால் அதை தெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும். அதைக் கொண்டு ஒருநாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள். திடீரென்று ஒருநாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒருலட்சம் தானே கணக்கு! இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு, குறித்துக் கொள்ள முடியாதபடி தொடர்ந்து மணி அடித்துக் கொண்டிருந்தது. என்ன அதிசயம்! வேகம் தாளாமல் மணி அறுந்து விழுந்துவிட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை. அனைவரும் திகைத்து நின்ற வேளையில், எச்சில் இலைகளைப் போட்ட இடத்தில் பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் ஒரு சில பருக்கைகளைக் கொத்திவிட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டாலும், அவரது பெயரால் அன்னதானம் நடத்தினாலும் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும்.
மகாபாரதத்தை உலகிற்கு அளித்த வியாசரின் புதல்வர் சுகமுனிவர். கிளி முகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார். தவவாழ்வில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்ந்தார். ஒரு நதிக்கரை வழியே தந்தையுடன் சுகப்பிரம்மர் சென்றபோது, நீராடும் தெய்வப்பெண்களைக் கண்டார். அவர்கள், வயோதிபரான வியாசரைக் கண்டதும் நாணத்தால் எழுந்து ஆடையால் உடலை மறைத்தனர். ஆனால், வாலிபரான சுகரைக் கண்டு வெட்கப்படவில்லை. உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்? என வியாசர் கேட்க, எல்லாவற்றையும் சுகப்பிரம்மர் தெய்வீகமாக காண்பது தான், என விடையளித்தனர்.
மகாபாரதம் தந்த வியாசரின் புத்திரர் சுகபிரம்மர் பிறந்ததில் இருந்து தந்தையை விட்டுப் பிரிந்ததில்லை. ஒருநாள், திடீரென காட்டுக்குள் ஓட ஆரம்பித்தார். பின்னால் ஓடிய வியாசர் மகனே! மகனே! என கூவி அழைத்தார். உடனே அங்கிருந்த மரங்களெல்லாம் என்ன என்ன என்று கேட்டதாம். அதாவது சுகபிரம்மர் வேறு, தாங்கள் வேறு அல்ல என்று காட்டிக் கொண்டன. மரங்கள் மட்டுமல்ல, அங்கிருந்த பறவைகள், விலங்குகள், மலைகள், நதிகளும் என்ன என்ன என்றதாம். சுகப்பிரம்மரும் தாங்களும் ஒன்றே என்ற மனநிலையை கொண் டிருந்தன.
இறவா வரம் பெற்ற சிரஞ்சீவி மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். இதிலிருந்து சுகப்பிரம்மரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பில்லாலி தொட்டியில் சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடம் உள்ளது. இங்கு சுகப்பிரம்மருக்கு தனி சன்னதி உண்டு. சுகப்பிரம்ம மகரிஷியை போற்றி, அவரை ஆராதிப்பதற்கென்றே சென்னை தி.நகரில் சுகப்ரம்ம மகரிஷி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது.
திருச்சிற்றம்பலம்.
🙏
No comments:
Post a Comment