தினம் ஒர் சித்தர் வரலாறு
பெயர் திருவண்ணாமலை குகை நமசிவாயர்
இந்து மதம் எப்போது தோன்றியது என்கிற அதன் தொடக்கத்தை அறிந்துகொள்ள முடியாது என்பர். ஆம்! ஆதியும் அந்தமும் காண முடியாத பெருமை கொண்டது இந்து மதம். ஆதி சங்கரர். ஸ்ரீராமானுஜரில் ஆரம்பித்து எத்தனையோ அருளாளர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றி, சமயம் வளர்த்தார்கள்; ஆன்மிகம் தழைக்க அரும்பாடு பட்டார்கள். எப்போதெல்லாம் இந்து மதத்துக்கு இழுக்கு நேரிகிறதோ, வலிமை குறைகிறதோ, அப்போதெல்லாம் மகான்கள் அவதரித்தார்கள். தன் தூதுவர்களாக இவர்களை மண்ணுலகுக்கு அனுப்பியதும் தெய்வ சக்திதான்
குழந்தைப் பிராயத்திலேயே இறையருளும் அபார ஞானமும் பெற்ற மகான்கள் எத்தனையோ பேர் உண்டு. சீர்காழி திருக்குளத்தில் ஞானப்பால் அருந்தி, இறை தரிசனம் கிடைக்கப் பெற்ற திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன் பாடியபோது அவர் சிறு வயது பாலகன். நாயன்மார்கள் அறுபத்துமூவர்; ஆழ்வார்கள் பன்னிருவர். சைவமும் வைணவமும் தழைத்தோங்க இவர்கள் பட்ட பாடு இன்று வரலாறாக நம் முன்னே காணக் கிடைக்கிறது. மண்ணில் போட்ட விதைகூடத் தானாகவே முளைத்துவிடும். ஆனால், மனிதனின் மனதில் விதைத்த ஆன்மிகம் என்கிற விதை மட்டும். ஏனோ சரியாக வளர மறுத்தது. அந்த விதை விருட்சமாக வளர்வதற்கு மனிதன் அனுமதிக்கவில்லை. ஆனாலும் அந்த விதை நன்றாகச் செழித்து வளர்வதற்கு. இந்தஅருளாளர்கள்தான் நீரூற்றினார்கள்; உரமிட்டார்கள். அற்புதங்கள் நிகழ்த்தி, இறையருளின் மகிமையைப் பலருக்கும் உணர்த்தினர்கள். நம் அருளாளர்கள் அன்றைக்கு விதைத்த விதையைத்தான் நற்பலன்களாக இன்று நாம் அறுவடை செய்து வருகிறோம்.
திருவண்ணாமலை இப்படிப்பட்ட அருளாளர்களின் திருப்பாதம் பட்ட பூமி. இந்த அருளாளர்கள் எங்கோ பிறந்தார்கள்; வளர்ந்தார்கள். ஆனால், ஈசனால் திருவண்ணாமலை க்ஷேத்திரத்துக்கு இழுக்கப்பட்டார்கள். அருள்மிகு அண்ணாமலையார்-ஸ்ரீஉண்ணாமுலையம்மனின் அருளை அனுதினமும் பருகிப் பரவசப்பட்டார்கள்; ஆனந்தக் கூத்தாடினார்கள். முக்தி தரும் க்ஷேத்திரம் என்று இந்தத் திருத்தலத்தைச் சொல்கிறது புராணம். திருவண்ணாமலையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்தப் புண்ணிய பூமியை தரிசித்திராதவர்களும் குறைவுதான். இந்தியாவில் மட்டுமல்ல. உலகெங்கும் உள்ளவர்களால் அறியப்பட்ட ஆன்மிக பூமி இது. இதற்குச் சான்றாக, இதே நகரிலேயே நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளன எண்ணற்ற வெளிநாட்டவர்களைச் சொல்லலாம்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வருவதற்காகத் திருவண்ணாமலையில் திரளும்போது ஊரே திமிலோகப்படும். சித்தர்களும் ஞானியர்களும் நடந்து நடந்து இறை அருள் பெற்ற அந்தக் கிரிவலப் பாதையில் நம் பாதங்கள் படுவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும். திருவண்ணாமலைøப் பற்றிப் பரிபூரணமாக அறிந்து கொள்வதற்குப் புராணத்தையும் சரித்திரத்தையும் புரட்டினால் நாட்கள் போதாது, அவை அனைத்தையும் படித்து முடிப்பதற்கு! மகான் சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் போன்ற மகான்கள் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து முக்தி அடைந்த அருளாளர்கள். இவர்களை தரிசித்து ஆன்மீக அமுதத்தை அள்ளிப் பருகிய அன்பர்கள் இன்றைக்கும் இருந்துவருகிறார்கள். ஆனால், இவர்கள் காலத்துக்கும் முன்னால் அந்தப் புனிதமான மலையில் அருளாட்சி நடத்திய சித்த புருஷர்கள் அநேகம் பேர் உண்டு. அவர்களில் குகை நமசிவாயர், குரு நமசிவாயர், ஈசான்ய ஞானதேசிகர், விருபாட்சித் தேவர் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் அனைவருமே திருவண்ணாமலை ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு, ஸித்து எனப்படும் அற்புதங்கள் பல நிகழ்த்தியவர்கள்.
இங்கு குகை நமசிவாயரைப் பற்றி அறிந்துகொள்வோம் எங்கே இருக்கிறது குகை நமசிவாயரின் ஜீவ சமாதி?
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் ஸ்ரீஅண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்பதன் திரிபு) அருகே சக்தி தியேட்டர் அமைந்துள்ளது. இதை ஒட்டிய சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால் மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே ஸ்ரீகுகை நமசிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும். மலையடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமசிவாயரின் ஜீவ சமாதியை அடைந்துவிடலாம்.
மாபெரும் சித்த புருஷரான குகை நமசிவாயரின் குருபூஜை 500 ஆண்டுகளையும் தாண்டிவிட்டது. அருணகரிநாதருக்கும் முற்பட்டவர் இவர் என்று கூறப்படுகிறது. குகை நமசிவாயரின் 17-ஆவது வாரிசுதாரும், 18-ஆவது வாரிசுதாரரும் தற்போது இந்த ஜீவ சமாதி ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்கள்.
ஸ்ரீசைலத்தில் இருந்து தெற்கே வந்த கன்னட தேசத்து வீர சைவ மரபைச் சேர்ந்தவர் குகை நமசிவாயர். கன்னட தேசத்தில் திருப்பருப்பதம் என்கிற புண்ணிய க்ஷேத்திரத்தில் அவதரித்தார். நமசிவாயர். தாய்மொழி கன்னடம், லிங்காயத்து எனப்படும் பரம்பரையைச் சேர்ந்தவர். இந்த மரபில் வந்தவர்கள் தீவிர சைவர்கள், ஆண், பெண், என்று லிங்காயத்துப் பிரிவில் உள்ள அனைவருமே கழுத்தில் சைவச் சின்னமான லிங்கத்தை ஒரு கயிற்றில் கோத்து அணிந்திருப்பார்கள். கழுத்தில் இருக்கும் லிங்கத்துக்குத்தான் முதல் வழிபாடு நடத்துவர்கள்.
நமசிவாயர் பக்திப் பாரம்பரியத்துடன் வளர்ந்தார். இவர் குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே ஈசன் ஆட்கொண்டுவிட்டார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். உரிய பருவம் வரும்போது திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையாரிடமிருந்து அழைப்பு வந்தது. ஞான குருவாக நீ விளங்குவதற்கு இங்கேயே தங்கியிருத்தல் கூடாது. உடனே திருவண்ணாமலை புறப்படு. தாமதிக்காதே என்று ஒரு நாள் நமசிவாயரின் கனவில் தோன்றி அவருக்கு உத்தரவிட்டார் ஸ்ரீஅண்ணாமலையார்.
கனவிலிருந்து விழித்தெழுந்தார். ஆனந்தம் கொண்டார். தன்னை வழிநடத்தும் ஈசனை வணங்கினார். திருவண்ணாமலை க்ஷேத்திரத்தைத் தான் தரிசிக்கும் நாள் எந்நாளோ என்று ஆவலுடன் இருந்தார்.
ஈசன் உத்தரவை நிறைவேற்றுவதற்காக அடுத்த நாளே திருவண்ணாமலை நோக்கித் தன் யாத்திரையைத் தொடங்கினார் நமசிவாயர். சிவனருள் பெற்ற இந்த சீலரின் மகத்துவம் புரிந்து சில அடியார்களும் சேர்ந்துகொண்டனர். திருவண்ணாமலை என்கிற சித்தர் பூமியில் தவம் இருந்து சிவனருள் பெறுவோம் என்கிற வைராக்கியத்துடன் நமசிவாயரைத் தொடர்ந்து சென்றனர் அந்த அடியார்கள். செல்லும் வழி எங்கும் அண்ணாமலையனுக்கு அரோஹரா எனும் சிவ கோஷம் வானை நிறைத்தது. யாத்திரை காலத்தில் சிவ பூஜை இல்லாத நாள் இல்லை. சிவ நாமம் உச்சரிக்காத வேளை இல்லை.
பல கிராமங்களைக் கடந்து பயணித்தனர். நமசிவாயரையும் அவருடன் வரும் அடியார்கள் கூட்டத்தையும் கண்ட கிராமத்தவர்கள் இன்முகத்துடன் வரவேற்றார்கள். அப்படிப் போகின்ற வழியிலேயே நமசிவாயரின் ஸித்துத் திறமைகளை வெளிக்கெணர ஈசன் விரும்பினான் போலும்.
அது ஒரு கிராமம்.... அங்கே ஒரு வீட்டின் முகப்பில் வாழைமரம், தோரணம் கட்டப்பட்டு மங்கலகரமாக இருந்தது. நமசிவாயருடன் சென்ற அடியார்கள் ஆர்வத்துடன் விசாரித்தபோது அந்த வீட்டில் திருமணம் அப்போதுதான் முடிந்தாகத் தகவல் சொன்னார்கள்.
முகம் நிறைய தேஜஸோடு, நெற்றியிலும் உடலிலும் திருநீறு பூசிக் கொண்டு, சிவப்பழமாக ஒரு தவசீலர் தன் அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலை சென்றுகொண்டிருக்கிறார் என்கிற தகவலை அறிந்த திருமண வீட்டுக்குச் சொந்தக்காரர், வீதிக்கு வந்து நமசிவாயரின் திருப்பாதங்களில் விழுந்து பணிந்தார். புன்னகைத்த நமசிவாயர் அவரை ஆசிர்வதித்து, திருநீறு கொடுத்தார். விபூதியைத் தன் நெற்றியில் அணிந்துகொண்ட அந்த வீட்டுத் தலைவர், நமசிவாயரைப் பார்த்து, சிவனருட் செல்வரே, இப்போதுதான் என் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்துள்ளது. தாங்கள் என் வீட்டுக்கு எழுந்தருளி, எல்லோருக்கும் திருநீறு தந்து ஆசிர்வதிக்கவேண்டும். மணமக்கள் வாழ்வாங்கு வாழ உங்களின் ஆசி வேண்டும் என்று கொஞ்சும் முகத்துடன் வேண்டுகோள் வைத்தார்.
எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்கிற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த நமசிவாயரும், அவரது வேண்டுகோள்படி திருமண வீட்டுக்குள் நுழைந்தார். அங்கிருந்த அனைவருக்கும் திருநீறு கொடுத்துவிட்டு, சிவ நாமம் முழங்கிக் கொண்டு வெளியே வந்தார். அடுத்த கணம் நடந்த செயல், அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
திருமண வீடு திடுமெனத் தீப்பற்றி எரிந்தது. என்ன சாபமோ தெரியவில்லை!
வீட்டுக்குள் இருந்த மணமக்கள் உட்பட அனைவரும் அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்தனர். அவர்களில் ஒருவன், தோ...இந்தச் சாமியார் கொடுத்த திருநீற்றினால்தான் வீடு தீப்பற்றி எரிந்தது என்று நமசிவாயரின் அருள் புரியாமல் கொளுத்திப் போட்டு வைக்க.... ஒட்டுமொத்தக் கூட்டமும் சேர்ந்து, நமசிவாயரைத் திட்டித் தீர்த்தது. அடியார்கள் கூட்டத்தையும் ஆத்திரத்துடன் பார்த்தது.
மனம் ஒடிந்தார் நமசிவாயர். அதே இடத்தில் அமர்ந்து சிவ தியானத்தில் ஈடுபட்டார். கயிலைவாசனே.... நான் என்ன தவறு செய்தேன்? ஏன் எனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வாங்கித் தருகிறாய்? இவர்கள் என்னை மட்டுமா அவமதிக்கிறார்கள்? உன்னையும் சேர்த்தல்லவா அவமதிக்கிறார்கள்? இந்தப் பழியும் பாவமும் உனக்குதானே வந்து சேரும்? ஈசா....கருணைக் கடலே.... கண் திறந்து பார்க்க மாட்டாயா? என்று கண்ணீர் மல்க பிரார்த்திக..... அடுத்த விநாடியே, எரிந்து போன வீடு, பழைய நிலைமையை அடைந்தது.
சற்று நேரத்துக்கு முன் அந்த வீடு, தீயினால் பாதிக்கப்பட்டதற்கு உண்டான எந்த ஒரு சுவடும் இல்லை. திருமண வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் கலகலப்பானர்கள். சுற்றிலும் நின்று இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திக்பிரமை அடைந்தனர்.
ஆஹா.... இவர் சாதாரணப்பட்டவர் இல்லை. சிவபெருமானே இவரது உருவில் வந்திருக்கிறார். நம்மை எல்லாம் ஆசிர்வதித்திருக்கிறார். இவரை எல்லோரும் நமஸ்கரியுங்கள் என்று ஊர்க்காரர்கள் பரவசம் மேலிடச் சொல்லி, விழுந்து வணங்கினார்கள், கூனிக் குறுகி வெளியே நடந்தார் நமசிவாயர். தன்னை ஈசனோடு ஒப்பிட்டுப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. இனி நான் எவர் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டேன் என்று ஆக்ரோஷமாக ஒரு சபதம் செய்துவிட்டு யாத்திரையைத் தொடங்கினார்.
திருவண்ணாமலை நோக்கி வந்த அவர் வழியெங்கும் தென்பட்ட பக்தர்களை ஆசிர்வதித்தார். பலரது பிணிகளைத் தீர்த்தார்.
எண்ணற்ற ஸித்து விளையாடல்களை நிகழ்த்திக்கொண்டே வந்தார்.
பூந்தமல்லியை அடைந்து யாத்திரைக் குழு. தினமும் காலை வேளையில் எந்த ஊரில் தங்கியிருக்கிறார்களோ. அந்தக் கிராமத்திலேயே சிவலிங்கத்துக்கு பூஜை செய்துவிட்டுப் புறப்படுவது நமசிவாயர் மற்றும் குழுவினரது வழக்கம். இதற்காக ஒரு சிவலிங்கம் நமசிவாயர் வசம் இருக்கும். பூந்தமல்லியில் தங்கிய குழுவினர், சிவ பூஜைக்காக நமசிவாயர் வேண்டுகோள்படி அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று மணம் வீசும் மலர்களைப் பறிக்க ஆரம்பித்தனர். இப்படி ஊரில் உள்ள எல்லா மலர்களையும் இவர்கள் பறித்து, தங்கள் பூஜைக்குக் கொண்டுவந்தனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள் ஊர்க்காரர்கள். ஏதேனும் கொஞ்சம் பூக்களையாவது தங்கள் ஊரில் உள்ள ஆலய இறைவனுக்கு விட்டு வைப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த அடியார் குழுவினர் ஒட்டுமொத்த நந்தவனம் மற்றும் மலர்த் தோட்டங்களில் உள்ள பூக்கள் அனைத்தையும் பறித்துவிட்டனரே? ஆத்திரத்தோடு ஊர்த் தலைவரிடம் சென்று முறையிட்டனர் ஊர்க்காரர்கள். அவரும் நமசிவாயர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வந்தார்.
நமசிவாயர் அப்போது சிவ பூஜையில் திளைத்திருந்தார். தங்களை மறந்து சிவ சகஸ்ரநாமத்தைத் துதித்துக் கொண்டிருந்தனர் அடியார்கள். நேராக நமசிவாயரிடம் வந்த ஊர்த் தலைவர், ஐயா ஒரு நிமிடம்.... என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு உங்கள் பூஜையைத் தொடருங்கள் என்றார்.
ஊர்த் தலைவரைப் பார்த்துப் புன்னகைத்த நமசிவாயர், கேளுங்கள், என்ன உமது கேள்வி? என்றார்.
கிராமத்தில் உள்ள ஆலய பூஜைக்காக வளர்க்கப்பட்டிருந்த அனைத்துப் பூச்செடிகளிலிருந்தும் உம் ஆட்கள் அனுமதியே இல்லாமல் மலர்களைப் பறித்துக்கொண்டு போய்விட்டார்கள். எம் ஆலய சிவனுக்கு அணிவிப்பதற்குப் பூக்களே இல்லை. இது நியாயமா? என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார். அவரைச் சுற்றி நின்றிருந்த ஊர்மக்கள் நமசிவாயர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர்.
எல்லாம் சிவனே.... நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் இறைவனுக்கு உரியவை. உங்கள் ஆலய இறைவனுக்கும் அவை சூட்டப்பட்டுள்ளன. எமது பூஜைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் நிதானமாக.
உமது பூஜைக்கு எமது கிராமத்து நந்தவனத்தில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றித்தான் இப்போது கேள்வியே. உமது சிவலிங்க பூஜைக்கு இந்தப் பூக்கள் அணிவிக்கப்படுவதற்கு எம் ஆலய இறைவன் ஒப்புக்கொள்ள மாட்டான். நீங்கள் தவறிழைத்துவிட்டீர்கள் என்றார் ஊர்த் தலைவர்.
எங்கும் நிறைந்தவன், எத்தகைய பூஜையையும் ஏற்றுக்கொள்வான். உங்கள் ஊர் சிவன், எம் சிவன் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம்.
இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும். சரி, நீங்கள் சொல்வது உண்மையானால், அதாவது உமது சிவ பூஜைக்கு எம் ஆலய நந்தவனத்துப் பூக்கள் பயன்படுத்தியதை எம் கிராமத்து இறைவன் ஏற்றுக்கொண்டுவிட்டான் என்றால். உமது செயலை நான் ஏற்றுக்கொள்கிறேன். வணங்குகிறேன் என்றார் ஊர்த்தலைவர்.
அப்படியே... உம் இறைவன் இதை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார் நமசிவாயர்.
இதோ, எம் ஆலய இறைவன் திருமேனியில் ஒரு மலர் மாலை இருக்கிறதே... அந்த மலர்மாலை இங்குள்ள பலரும் காணுமாறு தானாக வந்து உம் கழுத்தில் விழவேண்டும். அப்படி நிகழ்ந்து விட்டால், உமது பூஜை முறை அனைத்தும் அந்த சிவனாரின் ஒப்புதலோடுதான் நடைபெறுகிறது என்பதை நான்மனமார ஏற்றுக்கொள்கிறேன் என்றார். ஊர்மக்கள் அனைவரும் பெருங்குரல் எழுப்பி இதை ஆமோதித்தனர்.
குருநாதரின் பதில் இதற்கு என்னவோ? என்கிற குழப்பத்துடன் அடியார்கள் நமசிவாயரைப் பார்க்க, அந்த மகானும் இதற்கு ஒப்புக்கொண்டார். அப்படியே ஆகட்டும். எம் கூற்றும் செயலும் உண்மை என்பதை இதோ, இந்த இறைவன் ஏற்றுக்கொண்டுவிட்டான் என்றால், நீர் சொன்னது அப்படியே நடக்கும் என்று கண்களை மூடி சிவ தியானம் செய்யலானார் நமசிவாயர்.
இந்த நேரம் பார்த்து ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்கள் சிலர், இறைவன் திருமேனியில் இருந்த மலர்மாலையில் ஒரு உறுதியான கயிற்றைப் பிணைத்து, அதன் மறுமுனையை ஒருவரிடம் கொடுத்து, இறுக்கிப் பிடித்திருக்கச் சொன்னர்கள். சபாஷ்.... இப்படிப்பட்ட நிலையில் சிவன் கழுத்தில் இருக்கும் மாலை எப்படி நமசிவாய கழுத்தில் போய் விழும்? அதையும்தான் பார்த்துவிடுவோம் என்று கிண்டலாகப் பேசியபடி நடக்கின்ற நிகழ்வை வேடிக்கை பார்ப்பதற்காகத் தயாரானார்கள் ஊர்க்காரர்கள்.
அடியார்கள் அனைவரும் மனதுக்குள் சிவ நாமம் துதித்தபடி அமைதியாக இருந்தனர்.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.
எல்லாவற்றையும் பார்த்தார் நமசிவாயர். அவருக்குத் தெரியாதா சோதனைகள் எப்படி இருக்கும் என்று? ஈசனது பஞ்சாட்சர மந்திரத்தை மனமுருக ஜபித்தபடி லிங்கத் திருமேனியின் முன் கரம் கூப்பியபடி நின்றிருந்தார் நமசிவாயர். ஊர்த்தலைவர், கிராம மக்கள், நமசிவாயருடன் வந்திருந்த அடியார்கள் அனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என்கிற ஆர்வத்திலும் படபடப்பிலும் இருந்தனர்.
தன்னையே நம்பி, தனக்கே சேவை செய்து வரும் பக்தன் ஒருவனை எந்த ஒரு தெய்மாவது ஏமாற்றியது உண்டா? அவமானப்படுத்தியது உண்டா? இல்லை என்றுதானே புராணங்கள் சொல்கின்றன.
அதுதான் நமசிவாயரின் வாழ்க்கையிலும் நடந்தது. ஒரு க்ஷண நேரத்தில் இறைவனின் கழுத்தில் இருந்த மாலையைக் கயிறு மூலம் பிடித்துக்கொண்டிருந்தவரின் பிடி திடீரெனத் தளர்ந்து. கயிறு அறுப்பட்டு, அந்த மலர்மாலையானது பலரும் காணும்படியாக நமசிவாயரின் கழுத்தில் வந்து அழகாக விழுந்தது. நமசிவாயரின் கண்கள் கலங்கிவிட்டன. கைகள் உயர்த்தி, அந்த ஈசனுக்கு நன்றி சொன்னார்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment